இலங்கையில் முழு அளவிலான போர் வெடிக்கும் ஆபத்து

Read Time:5 Minute, 12 Second

Claimore.jpgதிரிகோணமலை மாவட்டம் அல்லை என்ற இடத்தில் இருந்து கந்தளாய் என்ற இடத்துக்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பஸ், நேற்று இரவு சென்றுகொண்டு இருந்தது. சேருநுவராய் என்ற இடத்தில் சென்றபோது, அந்த பஸ் கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்து சிதறியது. இந்த கண்ணிவெடி தாக்குதலை விடுதலைப்புலிகள் நடத்தியதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் 16 ராணுவத்தினர் உடல் சிதறி இறந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி இதே இடத்தில் நடந்த விடுதலைப்புலிகளின் கண்ணிவெடிதாக்குதலில் 12 ராணுவத்தினர் இறந்தனர். அதற்கு முன்பாக, பேசாலையில், 2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலிலும் 12 பேர் இறந்தனர்.

மேலும் கடந்த ஜுன் 15-ந் தேதி 64 பயணிகளுடன் பஸ்சை விடுதலைப்புலிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்தது நினைவு இருக்கலாம். இதில் பஸ்சில் இருந்த அனைவரும் இறந்தனர். இதுவே, யுத்தநிறுத்தத்திற்கு பின்னர் பொதுமக்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.

8 பேர் சாவு

திரிகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை தளத்தின் மீது விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது கடற்படையின் “டோறா” படகு ஒன்றை விடுதலைப்புலிகளின் கடற்படை பிரிவு மூழ்கடித்தது. இதில் அதில் இருந்த 8 இலங்கை கடற்படையினர் இறந்தனர்.

மேலும் இலங்கை கப்பல் படை தளத்துக்கும் கடும் சேதம் விளைவித்தனர். இந்த தாக்குதலை தொடர்நது, கடற்படை தளத்தையொட்டி வசித்து வந்த மக்களை வெளியேறுமாறு, கடற்படை அதிகாரிகள் உத்தரவிட்டனர். திரிகோண மலையில் உள்ள வணிக நிலையங்கள், அரசு நிறுவனங்கள் நேற்று மூடப்பட்டன.

கப்பல் மீது தாக்குதல்

இலங்கை காங்கேசன் துறையில்இருந்து திரிகோண மலை துறைமுகத்துக்கு வரும் “ஜெட் லைனர்” என்ற பயணிகள் கப்பல் நேற்று இரவு புறப்பட்டது. அதில் 800 ராணுவத்தினர் சாதாரண உடையில் பயணம் செய்தனர். அந்த கப்பல் திரிகோணமலை துறைமுகப்பகுதிக்கு வந்தபோது, தரைப்பகுதியில் இருந்து, விடுதலைப்புலிகள் பீரங்கியால் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் விடுதலைப்புலிகளின் பீரங்கி குண்டுகள் குறி தவறியதால், கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்பட வில்லை. இதற்கிடையில் அந்த கப்பலை, கடலின் மத்திய பகுதிக்கு மாலுமிகள் ஓட்டிச்சென்றனர். இதனால் கப்பலில் இருந்த ராணுவத்தினர் உயிர் தப்பினார்கள்.

பின்னர் சில மணி நேரம் கழித்து, அந்த கப்பல் திரிகோணமலை துறைமுகத்துக்கு பத்திரமாக வந்ததாகவும், அதில் இருந்த ராணுவத்தினர் தரை இறங்கியதாகவும், கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார்.

“போர் இல்லை”

இந்த சம்பவம் பற்றி இலங்கை மந்திரி ராம்புக்வெல்லா நிருபர்களிடம் கூறுகையில், “தற்போது நடந்து வரும் ராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மீதான போர் அல்ல. போர் அறிவிக்கப்படவில்லை” என்றார்.

இலங்கை ராணுவ தளபதி சமரசிங்கே கூறுகையில், “திரிகோணமலை மாவட்டம் மாவிலாறு என்ற இடத்தில் உள்ள அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வரத்தை விடுதலைப்புலிகள் நிறுத்தி விட்டனர். எனவே அந்த பகுதியில் வசிக்கும் 1500 பொது மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. அவர்களுக்கு குடிநீர் வேண்டும் என்பதற்காகவே ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர் தண்ணீர் இன்றி வாடுகிறது” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “31-ந் தேதி நடந்த தாக்குதலில் இலங்கை தரப்பில் 10 ராணுவத்தினரும், விடுதலைப்புலிகள் தரப்பில் 40 பேரும் இறந்தனர்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சுவீடனும் கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேறுகிறது
Next post ஆயுத கிடங்கு தீப்பிடித்து எரிந்தது