குழந்தைகளின் சர்வரோக நிவாரணி! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 38 Second

குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கத்தான் பள்ளிக்கூடங்கள். ஒரு குழந்தை காலை உணவை உண்டு, தெம்பாகத், தெளிவாக, சந்தோஷமாக இருந்தால்தான் கற்றல் பணி சிறக்கும். ஆசிரியர் சொல்லித் தருவது காதில் ஏறும்.பெற்றோர்கள் கூலித் தொழிலாளர்களாக அதிகாலை வேலைக்குச் செல்வதால், காலை உணவின்றி வரும் குழந்தைகளே அரசுப் பள்ளிகளில் அதிகம். இதன் அடிப்படையில்தான் தமிழக முதல்வரால் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது முதலமைச்சரின் கனவுத் திட்டம். ‘‘ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகம் என்பதே இதன் நோக்கம்’’ என்றவாறு நம்மிடம் பேச ஆரம்பித்தார், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் முத்துமீனாள்.

‘‘கருவில் தொடங்கி, தொடக்கப்பள்ளி காலம் வரை குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாய் இருக்கும் என்பதே இதில் அடிப்படை. முதல் கட்டமாக 963 பள்ளிகளில்,
52 ஆயிரம் குழந்தைகளுக்கு இத்திட்டம் தீட்டப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் பள்ளிகளில் 28,374 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தினுடைய சுயஉதவிக் குழு பெண்கள் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நகர்புறங்களில் உணவு தயாரிப்பை அங்கீகரிக்கப்பட்ட உணவு நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் விட முடிவானதும்், கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தமிழக அரசு செயல்படுத்த முடிவு செய்தது. சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் பெண்களைத் தேர்வு செய்து, அவர் சமைக்கும் பள்ளியிலேயே அவர் குழந்தை படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்கட்ட திட்டத்தில், சமையல் கலைஞரான செஃப் தாமு மூலம், ஒரு வட்டாரத்திற்கு மூன்று பெண்கள் வீதம், 55 சுய உதவிக் குழு பெண்களுக்கு இரண்டு நாள் பயிற்சி வழங்கப்
பட்டது. இதில் கேசரி, சர்க்கரை பொங்கலோடு 13 வகையான உணவுப் பட்டியல் தயாரானது. உணவை குழந்தைகளையும் ருசி பார்க்க வைத்தனர்.

தாமுவிடம் நேரடி பயிற்சி பெற்ற பெண்கள், மாநிலத்தில் உள்ள 5 பயிற்சி நிலையங்களில் 85 ஆயிரத்து 132 பெண்களுக்கு பயிற்சி வழங்கினர். இதில் ஃபுட் மற்றும் ஃபயர் சேஃப்டி பயிற்சிகளும் அடக்கம். குறைந்தது 10 முதல் 1400 குழந்தைகளுக்கு இவர்கள் உணவு தயாரிக்கிறார்கள். பகுதிநேர வேலை என்பதால், 3000 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஒரு மையத்திற்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் அரிசி, பருப்பு, உப்பு, எண்ணை போன்ற உணவுப் பொருளும், தமிழ்நாடு கூட்டுறவு பண்டக சாலையில் ரவை, கோதுமை ரவை, சேமியா, சோளம் போன்ற பொருட்களும் விநியோகிக்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு ரூ.12.75 நிதி ஒதுக்கீடு செய்து, அதில் எரிபொருள், காய்கறிகள், தாளித சாமான்கள் வாங்கப்படுகிறது. மாணவர்களின் எண்ணிக்கை பொறுத்து பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. உணவுக்கான தட்டு, டம்ளர்கள் பஞ்சாயத்து யூனியன் பொது நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை(TNeGA) மூலம் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு, உணவு தயாரிப்பில் தொடங்கி, முடிவு வரை உள்ள அனைத்து நடவடிக்கைகளும் தினமும் பதிவேற்றப்படுகிறது’’ என்று விடைபெற்றார் கூடுதல் இயக்குநர் முத்துமீனாள். அவரைத் தொடர்ந்து பேசத் தொடங்கியவர் சென்னை முகப்பேர் கார்ப்பரேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி.

‘‘அறிவுடன் அறத்தை வழங்குவதே ஆசிரியர் பணி. அது உணவில் இருந்தே தொடங்குகிறது. ஆசிரியர்கள் வெறும் நோட்டுப் புத்தகமாகக் குழந்தைகளை பார்க்காமல், குழந்தைகள் மனம் சார்ந்து உடல் சார்ந்து பணியாற்ற வேண்டும். இதைச் செய்ய முடியாதவர்கள் ஆசிரியராகப் பணியாற்ற தகுதியற்றவர்கள்.

குழந்தையின் பெற்றோர் யார்? அவன் நிலை என்ன? குழந்தை என்ன சாப்பிட்டு வருகிறான்? தண்ணீர் குடிக்கிறானா? கழிப்பறைக்கு ஒழுங்காகப் போகிறானா? என கவனிக்கும் பொறுப்பும், கடமையும் ஆசிரியருக்கும் இருக்கிறது. குறிப்பாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தக் கடமை கட்டாயம் உண்டு. அப்போதுதான் நாளைய தலைமுறை நல்ல தலைமுறையாக வெளியில் வரும்.

பசிக்கு உணவு கிடைக்காதவன் பிறரிடம் புடுங்கித் திண்ணவே முயற்சிப்பான். சமூக விரோதச் செயல்கள் பலவும் வயிற்று பசியில்தான் தொடங்குகிறது. மகிழ்ச்சியான உணவு, மகிழ்ச்சியான சூழல், மகிழ்ச்சியான கற்றல் இதெல்லாம் இருந்தால்தான் குழந்தைக்கு, “என்னால் வாழ முடியும்” என்கிற நம்பிக்கை வரும். திறமை இருந்தும் சரியான உணவும், ஊட்டச்சத்தும் கிடைக்கவில்லையெனில், குழந்தைகள் வளரும்போதே நோயாளிகளாக மாறுவார்கள். அதனால்தான், “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு” என்கிறார் வள்ளுவர்.

முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில், எங்கள் பள்ளியோடு இணைந்து முகப்பேர் ப்ளாக்கில் 16 பள்ளிகளுக்கும் ஒரு சென்டர் கிச்சன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து காலை 7:30 மணிக்கெல்லாம் அழகான ஹாட் பேக்கில் சுடச்சுட, மணமாகவும், சுவையாகவும் சரிவிகித உணவாகத் தயாராகி, மூடப்பட்ட காலை உணவுத் திட்ட வாகனத்தில் ஏற்றி அனுப்பப்படுகிறது. கிளம்பியதில் தொடங்கி, வாகனத்தை எங்களால் டிராக் செய்ய முடியும். உணவு பெறப்பட்டதையும், வழங்கப்பட்டதையும் இருந்த இடத்தில் செயலி வழியே கண்காணிக்கவும் முடியும். எத்தனை குழந்தைகள் சாப்பிட்டார்கள், உணவின் சுவை, தரம் என அனைத்தும் செயலியில் புகைப்படத்துடன் பதிவேற்ற வேண்டும். இதற்கென சிறப்பான மொபைல் செயலி அரசால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் ரவா கிச்சடி, ஒரு நாள் பொங்கல், ஒரு நாள் அரிசி உப்புமா, ஒரு நாள் சோள உப்புமா, சேமியா கிச்சடி என்று வெங்காயம், தக்காளியுடன், பட்டாணி, கேரட், பீன்ஸ் இணைத்து தயாரிக்கிறார்கள். இத்துடன் தினமும் வெவ்வேறு காய்கறிகள் இணைத்து தயாரான பருப்பு சாம்பாரும் தயாராகி வருகிறது. குழந்தைகள் இணைந்து உட்கார்ந்து சாப்பிடுவதும், பகிர்ந்து உண்பதும் எத்தனை பெரிய விஷயம். இதில் கூட்டு மனப்பான்மையும் உருவாகுகிறது’’ என்கிறார் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி.

அவரைத் தொடர்ந்து பேசியவர் குன்றத்தூர் வழுதலம்பேடு தலைமை ஆசிரியர் ஹேமலதா. ‘‘எங்களின் பள்ளி இருப்பது கிராமம். ஈராசிரியர் தொடக்கப் பள்ளியான இதில்
5 வகுப்பையும் சேர்த்து 52 குழந்தைகள் இருக்கிறார்கள். என் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் அதிகாலையிலே கூலி வேலைக்கு செல்பவர்கள். குழந்தைகள்
பெரும்பாலும் காலை உணவை சாப்பிடாமலேதான் வருவார்கள். காலை உணவுத் திட்டத்திற்காக, பள்ளி வளாகத்திலேயே தனி கிச்சன் தயாராகி, சுடச்சுட உணவு செய்து கொடுக்கப்படுகிறது.

எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரே உணவு சமைக்க நியமிக்கப்பட்டுள்ளனர். உணவுப் பொருட்கள் அரசாங்கத்திடம் இருந்து வருகிறது. காய்கறிகளை அரசு ஒதுக்கும் நிதியில் தினமும் ஃப்ரெஷ்ஷாக வாங்கிக் கொள்கிறோம். மாணவர்களோடு ஆசிரியர்களும் அமர்ந்து உணவை சுவைக்கிறோம். காலதாமதமின்றி குழந்தைகள் பள்ளிக்கு வருகிறார்கள்’’ என்றவரைத் தொடர்ந்து பேசியவர், ஆலங்குடி தலைமை ஆசிரியர் ஆ.கருப்பையன்.

‘‘புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், ஆலங்குடி பேரூராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளி இது. 5ம் வகுப்புவரை 76 குழந்தைகள் படிக்கிறார்கள். பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறையில்தான் காலை உணவு தயாராகிறது. மகளிர் சுயஉதவிக் குழுவில் பயிற்சி எடுத்த பெண்கள் உணவு தயாரிக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் இந்த பள்ளியில்தான் படிக்கிறார்கள். எங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் 80 விழுக்காடும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டப் பணிக்கு செல்பவர்கள். வருகைப் பதிவுக்காக அவசர அவசரமாக 7 மணிக்கே சென்று விடுவார்கள். மீதி 20 விழுக்காடு பெற்றோர் விவசாயக் கூலிகள். தொழிற்சாலை, கடலை மில், எண்ணை மில், மாடர்ன் ரைஸ் மில் இவற்றில் வேலை செய்கிறவர்கள். குடிசைத் தொழில்களிலும் கூலி வேலை செய்கிறார்கள்.

கிராமங்களில் ஆடு, மாடுகளை பிடிச்சுக்கட்டி, வீடு வாசல் சுத்தம் செய்து அறக்க பறக்க கூலி வேலைக்கு செல்பவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் சாப்பிடாமல் தாமதமாகத்தான் வருவார்கள். இதில் 25 சதவிகிதம் குழந்தைகள் எடை குறைவானவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு காலை உணவுதான் பிரச்னை. இது கற்றல் இழப்பை ஏற்படுத்தி மாணவனை தேக்க நிலைக்கு தள்ளுகிறது.

பசியால் வாடி வரும் குழந்தைகளுக்கு காலை உணவை நாங்களே வாங்கிக் கொடுத்த நாட்களும் இருந்தது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆத்மார்த்தமானது. கிராமத்து பிள்ளைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் இது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அமைந்துள்ளது. இனி குழந்தைகள் இடைநிற்றலும், தாமத வருகையும் பெருவாரியாகக் குறையும்’’ என நம்பிக்கையுடன் விடைபெற்றார் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமை ஆசிரியர் கருப்பையன்.

சென்டர் கிச்சன், பாடி புதுநகர்

இங்கு எட்டு பெண்களை பணி அமர்த்தி இருக்கிறார்கள். இந்த சுற்று வட்டாரத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி சேர்த்து மொத்தம் 16 பள்ளிகள் இருக்கிறது. இதில் 5ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள் 2030 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு இங்கு உணவு தயாராகிறது. சென்னை மாநகராட்சி கட்டிட வளாகத்தில் இரண்டு நாள் சமையல் பயிற்சி எங்களுக்கு வழங்கப்பட்டது.

காய்கறிகள் தினமும் ஃப்ரெஷ்ஷாக மாநகராட்சியில் இருந்தும், உணவு தானியங்கள், எண்ணை போன்றவை வாரத்திற்கு ஒரு நாளும் வருகிறது. இன்று என்ன உணவு, எந்தெந்த காய்கறிகளை சேர்க்க வேண்டும் என்பதும் செயலியில் இருக்கும். அதிகாலை 3.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி நான்கு மணிக்கு அன்றைய சமையலுக்கான காய்கறிகளை நறுக்கி உணவைத் தயார் செய்து ஏழு மணிக்கு வண்டியில் ஏற்றி அனுப்பிவிடுவோம்.

சமையல் தொடங்கியதில் ஆரம்பித்து… சமையல் செய்ய பணிக்கு வந்த நபர்கள்… உணவு தயாராகி வண்டியில் ஏற்றப்பட்டது… வண்டி கிளம்பிவிட்டது போன்ற தகவலுடன், வண்டி எண், டிரைவரின் மொபைல் எண், எந்த ரூட்டில் வண்டி வருகிறது போன்ற தகவல்களை செயலியில் பதிவேற்ற வேண்டும். மூடப்பட்ட உணவு வாகனத்தின் சாவி, ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரிடமும் இருக்கும். அவர் பள்ளிக்கான சாவி போட்டு திறந்து உணவை எடுக்க வேண்டும். இதில் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைச்சிருக்கு என்கிற மகிழ்ச்சியை தாண்டி எங்கள் பிள்ளைகளும் பள்ளியில் நேரத்திற்கு வயிறார சத்தான சரிவிகித உணவை சாப்பிடுகிறார்கள் என்பது மகிழ்ச்சியே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் கணவர் மூடுன கடைய துணிஞ்சு தொறந்தேன்! (மகளிர் பக்கம்)
Next post 40+ வயதினருக்கு ஹார்ட் அட்டாக்…!! (மருத்துவம்)