வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 21 Second

வாழ்க்கை என்பது இனிமை யானதுதான். எப்போது? ஆசைகள், கனவுகள் எல்லாம் சாத்தியம் ஆகின்றபோது. நிறைய ஆசைகள், நிறைய கனவுகள் அனைத்தும் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியே. அப்போது ஒருவருடைய வாழ்க்கை துயரமானதா என்றால் இல்லை. அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஆசைகளையும் கனவுகளையும் திருத்தம் செய்து வாழ்வதும் இனிமையே என்கிறார் ந.தேன்மொழி. தன் சிறுவயது கனவை நாற்பதை தாண்டிய இந்த வயதில் சாதித்துக் காட்டி இருக்கும் வேலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் பாசறை தலைவர் தேன்மொழி.

“சின்ன குக்கிராமத்தில் பிறந்தவள். அரசுப் பள்ளியில் முதல் வகுப்பு. அப்பா கண்டிப்பானவர். ஆனால் படிப்பு விசயத்தில் தலையிட மாட்டார். அதேசமயம் என் சகோதரரின் படிப்பு விசயத்தில் அப்பா அதிக கண்டிப்பாக இருப்பார். விரட்டி விரட்டி படிக்கச் சொல்வார். இரண்டாவது ரேங்க் எடுத்தார் என்பதற்காக கையெழுத்து போட மறுப்பார். அது என் அண்ணாவை இப்படி கஷ்டப்படுத்துகிறாரே என்று தோன்றும். அப்போது அது புரியவில்லை. ஆண் குழந்தையின் படிப்புதான் மிகவும் முக்கியமானது என்பதைத்தான் அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள பல வருடம் ஆகியது. என்னிடம் அவர் சொல்லும் ஒரே டயலாக் என்ன தெரியுமா? நல்லா படிச்சா அடுத்த வருடம் பள்ளிக்கூடம், இல்லை என்றால் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்பதுதான். பெரிதாக அந்த வயதில் கனவுகள், எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனது.

ஏழாம் வகுப்பு திருப்பத்தூரில் ஒரு கிறிஸ்தவ பள்ளி. நிறைய போதனைகள். அப்படிப்பட்ட பள்ளியில் இருவரை சந்தித்தேன். ஒருவர் எனக்கு இரண்டு வருடம் பெரியவர். இரண்டாமவர் என் வகுப்பு. இவர்கள் என்னை ஆச்சர்யப்பட வைத்தார்கள். ஒருமுறை ஒரு நீண்ட பேரணி. அதில் தீச்சட்டி ஏந்தி கருப்பு உடையணிந்து ‘கடவுள் இல்லை’ என்ற முழக்கத்தோடு. இது சாத்தியமா என்ற கேள்வி என்னுள்ளே அடிக்கடி எழும். அதில் என் வகுப்பு தோழியோடு நல்ல நெருக்கம் இன்றுவரை. நான் ஆசிரியர் பயிற்சி எடுக்க ஆசைப்பட்டேன். அப்பா என்னை இளங்கலை வேதியியல் சேர்த்துவிட்டார். படிப்பு முடிந்ததும் மேற்கொண்டு படிக்க வைக்க மறுத்துவிட்டார்கள். நான் வேலைக்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்டது ஒரு பெண் சொந்தக்காலில் நிற்க வேண்டும். என்னுடைய தேவைக்கு கையேந்திவிடக்கூடாது என்பதற்கு தான். எதுவும் நிறைவேறவில்லை. திருமணம் முடிந்தது. புகுந்த வீட்டிலும் வேலைக்கு செல்ல அனுமதி மறுப்பு. இது மனதின் ஓரத்தில் லேசான வலியாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் நான் பியூட்டிஷியன் கோர்ஸ் படிக்கிறேன் என்று என் விருப்பத்தை வெளிப்படுத்த அதுவும் மறுக்கப்பட்டது.

அதேசமயம் வீட்டில் இருந்தபடியே ஏதாவது வியாபாரம் செய் என்ற அனுமதியின் பேரில் முதலில் சேலை வியாபாரம் செய்தேன். மிகச் சிறப்பாக நல்ல பொருளாதாரம் தேடித்தந்தது. பத்து வருடத்தில் நல்ல வருமானம். உடனடியாக எங்கள் வீட்டின் வெளிப்புறம் இருந்த கடையில் நல்ல தரமான பொருட்கள் கொண்ட மளிகைக்கடை ஆரம்பித்தேன். கணவர் பெரும் உதவி செய்தார் நல்ல விதமாக முன்னேற்றம். பதினைந்து வருடம் தொடர்ந்தது. இதற்கிடையில் தான் பெரும் மாற்றம் என்னிடம். ஏற்கனவே என் கணவர் திராவிடர் கழகத்தில் இருந்தார் என்பதால் நான் அதன் கொள்கையோடு ஒன்றாமல்… நிறைய கூட்டங்கள், நிறைய புத்தகங்கள் என மெல்ல மெல்ல தெளிவு பெற்று என்னுள் முழுமையாக கடவுள் மறுப்பாளராக திராவிடர் கழக செயல்பாட்டாளராக வெற்று மூடநம்பிக்கைகள் ஒழித்து இன்று மற்றவர்களுக்கு பிரசாரம் செய்யும் அளவுக்கு மாறி இருக்கிறேன்.

உடல்நிலை, சிறுவிபத்து இவற்றால் மேற்கொண்டு தொழில் நடத்த முடியாமல் போனது. ஆனாலும் அதைவிட்டு நான் ஆசைப்பட்ட அழகுக்கலையை என் நாற்பத்தி ஏழாவது வயதில் கற்றுக்கொண்டு என் மகள் பெயரில் அழகு நிலையம் நடத்தி வருகிறேன். மனநிறைவான வாழ்க்கை. மிகவும் நலிந்த குடும்பத்து பெண்களுக்கு பணம் வாங்காமல் மணப்பெண் அலங்காரம் செய்கிறேன். இன்னொரு மனநிறைவான விசயம் மகன், மகள் இருவருக்கும் நல்ல படிப்பு. இது என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம். இப்போது திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறையின் களப்பணியாளராக… அன்னை மணியம்மை சிந்தனைக்களம் என்ற பெயரில் மகளிரை ஒருங்கிணைத்து முற்போக்கு கருத்துக்களையும் விழிப்புணர்வு செய்திகளையும் பகிர்ந்துகொண்டு வருகிறேன். கனவின் பிடியிலே காலத்ைத தொலைக் காமல் காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப கனவுகளை மாற்றி அமைத்து வாழ்வது சிறப்பு என்பது என் கருத்து.

பொதுவாகவே பெண்களாகிய நமக்குள் மிகப்பெரிய பலவீனமாக நாம் கருதுவது விமர்சனம் கண்டு துவண்டு போவது. எந்த துறையில் இருந்தாலும் சரி எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் சரி எல்லாவற்றையும் அலட்சியப்படுத்தி தூக்கி எறியும் மனப்பக்குவம் வேண்டும். உண்மையிலேயே பெண்கள் மனதளவில் பலமானவர்கள். பெண்களை வீழ்த்த நினைக்கும் ஆணோ, பெண்ணோ பெண் மீது வைக்கும் குற்றச்சாட்டு பாலியல் விமர்சனங்கள். அதையெல்லாம் கடந்து போகக்கூடிய முதிர்ச்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொது வெளியில் பயணம் செய்கின்ற பெண்களுக்கு இன்னும் சற்று கூடுதல் துணிவு தேவைப்படுகிறது. ஏனெனில், பொதுவெளியில் பொதுதளத்தில் இயங்குகின்ற பெண்களை பெருமையோடு ஏற்றுக்கொள்கிற சமூகமாக இன்னும் நம் சமூகம் முழுமையாக மாறவில்லை.

சமூகத்தின் மாற்றத்தைப் பற்றி கவலைப்படாமல் நேர்மையான வழியில் துணிச்சலோடு பயணம் செய்ய பெண்கள் முன்வர வேண்டும். எத்தனையோ நூற்றாண்டுகள் பெண் இனத்திற்கு கிடைக்காத ஒரு சூழல் இன்று பெண்களுக்கு கிடைத்துள்ளது. அதை நல்ல மாதிரியாக பயன்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறை பெண் களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் மிகப்பெரிய வழிகாட்டியாக இன்றைய பெண்கள் திகழ வேண்டும். அதனால் நாம் நம் கடமையை உணர்ந்து துணிச்சலோடு செயல்பட வேண்டும். ஆளுமையும் அன்பும் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது என்று சொல்லி பிள்ளைகளை வளர்க்க நாம் கடமைப்பட்டு உள்ளோம். சரித்திரம் என்பது எங்கோ என்றோ நடந்தது மட்டும் இல்லை.

இனியொரு சரித்திரத்தை நாம் படைக்க வேண்டும். புதுமைப் பெண்கள் என்று சொல்லி மகிழ்வதைவிட புரட்சிப்பெண்களாக நாம் வாழ்ந்துகாட்ட வேண்டும். மாற்றம் என்பதை அடுத்தவர் இடத்தில் எதிர்பார்க்காமல் நம்மிடம் இருந்து தொடங்குவோம். நம் மீதான கட்டுப்பாடுகள், தடைகளை வெட்டி எறிய நாமே களமிறங்குவோம். இறுதியாக பெரியாரிய கொள்கையில் பட்டம் வாங்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. இயக்க கொள்கையை பின்பற்ற ஆரம்பித்த நாட்களில் உண்டான கனவு. அது நிறைவேறியது. என்னுடைய 51 வயதில். இந்த வயதில் படிப்பா, முதியோர் கல்வியா என்று ஏளனம் செய்தவர்களை புறந்தள்ளி வெற்றிகரமாக பெரியாரியல் பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்று பட்டமும் வாங்கிவிட்டேன். மிகப் பெரிய கனவு நிறைவேறியது என்ற பெருமிதம் என் உள்ளத்தில்…’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ” ஐ “திரைப்படத்தை மிஞ்சும் 05 மனிதர்கள்!(வீடியோ)
Next post அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா போட்டியா?