குழந்தையின்மை!! (மருத்துவம்)
என் வயது 42. கணவருக்கு 37. காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். 5 வருடங்களாகியும் குழந்தை இல்லை. ஒன்றிரண்டு முறை மருத்துவரைப் பார்த்தோம். இருவரிடமும் குறைகள் ஏதும் இல்லை என்றார்கள். ஆனாலும், கணவர் என்னைவிட வயதில் இளையவராக இருப்பதுதான் எங்கள் பிரச்னைக்கான காரணமாக இருக்குமோ என எங்களுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. யாரிடமும் கேட்கவும் கூச்சமாக இருக்கிறது. எங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புகள் உண்டா?
குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் கார்த்திக் குணசேகரன்
நீங்கள் நினைப்பது போல மனைவியைவிட கணவர் வயதில் இளையவராக இருப்பது, குழந்தையின்மைக்கு ஒருபோதும் காரணமாகாது. உங்கள் வயது 42 என்கிறீர்கள். நம் நாட்டைப் பொறுத்தவரை இது சராசரி திருமண வயதைவிட மிக அதிகம். ஆண்களுக்கு வயதாவதால், உயிரணுக்களின் எண்ணிக்கையோ, தரமோ பாதிக்கப்படுவதில்லை. ஆனால், பெண்களுக்கு வயது கூடக் கூட கருமுட்டை இருப்பு குறையத் தொடங்குவதுடன், தரமும் குறையும். அதனால்தான் பெண்கள் 30 வயதுக்குள் திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன என்கிறீர்கள். இதுவே கால தாமதம்தான். இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக நீங்கள் இருவரும் குழந்தையின்மை சிகிச்சை நிபுணரை சந்தித்து, ஆலோசனை பெற வேண்டியது அவசியம். உங்கள் கணவருக்கு உயிரணுப் பரிசோதனையும் சில ஹார்மோன் சோதனைகளும் செய்யப்படவேண்டும். உங்களுக்கு கர்ப்பப் பை, கருக் குழாய்களின் அமைப்பு தவிர, முட்டை வளர்ச்சி, முட்டைகள் வெடிக்கிற தன்மை போன்றவற்றை சில முக்கியமான ஸ்கேன் சோதனைகளின் மூலம் கண்டறியப்பட வேண்டும்.
உங்களுக்கும் ஹார்மோன் சோதனைகள் தேவைப்படலாம். சின்ன குறைகள் என்றால் சிகிச்சைகளின் மூலம் சரி செய்து விடலாம். பிரச்னை என்ன என்பதையும், அதன் தீவிரத்தையும் பொறுத்து, சோதனைக் குழாய் முறையில் கருத்தரிப்பதோ, இக்ஸி முறையோ உங்களுக்குப் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே காலம் கடந்து விட்டது. இனியும் நாட்களை வீணாக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
Average Rating