இன்னா நாற்பது! இனியவை நாற்பது! (மருத்துவம்)

Read Time:12 Minute, 58 Second

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

ரொம்ப பிசியான மகப்பேறு மருத்துவர் என் தோழி. சமீபத்தில் அவரை சந்திக்கும்போது, “இவ்வளவு நாளா வாழ்க்கை ரொம்ப ஓட்டமா போயிடுச்சு. இப்பதான் நின்னு நிதானிச்சு சில வேலைகளைப் பார்க்கணும்னு நினைக்கிறேன். பொறுமையா தலை சீவலாம்னு கண்ணாடியை பார்த்தா நாலு அஞ்சு நரைமுடி எட்டிப் பாக்குது, புத்தகம் படிக்கலாம்னு நினைச்சா எழுத்து தெரிய மாட்டேங்குது” என்றார் சலிப்புடன்.

40 வயது ஆனவுடன் நரை முடிகள் எட்டிப் பார்ப்பதும் எழுத்துக்கள் மங்கலாகத் தெரிவதும் உலக இயல்புதான். மனதளவில் இளமையாக உணர்பவர்கள் ‘அடடே! அதுக்குள்ள வயசாயிடுச்சா வெள்ளெழுத்து வந்துடுச்சே’ என்பார்கள். ‘Life begins after forty’ என்று மேலை உலகம் சொல்கிறது. வயதாவதை, ‘Gracefully aging’ என்று கொண்டாட்டமாக எடுத்துக்கொள்கிறது. நாம் என்ன செய்கிறோம்? பெரும்பாலும் கண்ணாடி அணிவதைத் தள்ளிப் போடுகிறோம், கண்களைச் சுருக்கி, புத்தகத்தைத் தள்ளிவைத்துப் பார்த்துத் தலைவலியை இழுத்துக்கொள்கிறோம்.

நீண்ட நேரம் படிக்கும் மக்கள், எழுத்துப் பணி அதிகம் உள்ளவர்கள், எட்டு மணி நேரத்துக்கு மேலாகக் கணினித் திரையைப் பார்ப்பவர்கள் மற்றவர்கள் அனைவரையும்விட  மூக்குக் கண்ணாடியின் அருமையை நன்கு உணர்ந்தவர்கள். ஒரு சிறிய சாதனத்தை மூக்கில் அணிந்துகொள்வதால் முன்னைக்கு இப்போது எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள். “போன மாசம் வரை நல்லா தெரிஞ்சது. இப்ப ரொம்ப மங்கலா இருக்குதே… என்ன காரணம் டாக்டர்?” என்பது நாற்பது வயதை நெருங்கும் பெரும்பாலானவர்களின் கேள்வி.

ஒரு ரப்பர் பேண்டை கற்பனை செய்து கொள்ளுங்கள். முதல் முறை விரைப்பாக இருக்கிறது, போகப் போக அதன் நெகிழ்வுத்தன்மை சிறிது சிறிதாகக் குறைகிறது. ஒரு கட்டத்தில் ‘கொழகொழா’ என்று ஆகிவிடுகிறது. அதனால் இறுக்கமாக ஒரு பொட்டலத்தைக் கட்ட முடியவில்லை, ஒரு பெண்ணின் சடையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதேதான் லென்ஸுக்கும்.

பிறக்கும் பொழுது ஒரு சிறிய பட்டன் சைஸில் இருக்கும் லென்ஸானது, தூரப்பார்வை கிட்டப் பார்வை இரண்டுக்கும் தகுந்தாற் போல் தன்னை சுருக்கி விரித்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றது. இதற்கு லென்ஸின் அருகேயுள்ள ciliary muscles தசைகளும் உதவுகின்றன. 40 வயதை நெருங்க நெருங்க லென்ஸின் நெகிழ்வுத்தன்மை குறைய ஆரம்பிக்கிறது. தூரப் பார்வை நன்றாக இருப்பதற்கு லென்ஸில் ஒளி ஊடுருவும் தன்மை நன்றாக இருந்தால் போதுமானது. கிட்டப் பார்வைக்குத் தான் லென்ஸ் குறிப்பிட்ட அளவிற்கு சுருங்க வேண்டும்.

நெகிழ்வுத்தன்மை கொஞ்சம் குறைவதால், நாற்பது வயதில் வழக்கமாக படிக்க வேண்டிய ஒரு அடி தூரத்தை விட்டு சற்றுத் தள்ளி ஒன்றரை, இரண்டு அடி தூரத்தில் புத்தகத்தைப் பிடித்தால் வாசிக்க முடியும்.  தூரப்பார்வை 6/6 என்ற அளவில் சரியாக இருக்கும் பட்சத்தில், இதை ஈடு செய்வதற்காக +1.00 Dsph கண்ணாடியை வழங்குவோம். இன்னும் சில ஆண்டுகள் போகும் பொழுது இந்த இரண்டடி, இரண்டரை அடியாக ஆகலாம். இப்படி படிப்படியாக அதிகரிக்கும் அளவு 55 வயதில் +2.50 Dsph வரை வரும். அதன்பின் மெல்ல மெல்ல லென்ஸின் ஒளி ஊடுருவும் தன்மை குறைய ஆரம்பிக்கிறது. சராசரியாக 60 வயதில் தூரப் பார்வையிலும் குறைபாடு ஏற்படும்.

“எங்க அப்பா கடைசி வரை கண்ணாடி போட்டதே இல்லையே? அவர் எழுபது வயசு வரை உயிரோடு இருந்தாரே?” என்றார் அண்மையில் சந்தித்த ஒரு ஆசிரியர். உங்கள் தந்தை என்ன வேலை செய்தார் என்று கேட்டேன். அவர் விவசாயியாக இருந்தார், எழுதப் படிக்கத் தெரியாது, கையெழுத்து மட்டும் போடுவார் என்றார்.

“அவருக்கும் 40 வயதில் நிச்சயமாக வெள்ளெழுத்து ஏற்பட்டிருக்கும். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் அவருக்குக் கையெழுத்து போடும் அவசியம் ஏற்பட்டிருக்கும், அதனால் பக்கத்துப் பார்வைக்கான தேவையை உணர்ந்திருக்க மாட்டார்” என்று கூறினேன். இருக்கலாம் என்றார். “உங்கள் அம்மா கண்ணாடி அணிந்திருந்தார்ளா?” என்று கேட்டதற்கு, “ஆமா அவங்க அரிசியில் கல் பொறுக்குவாங்க, சில சமயம் தையலும் செய்வாங்க. அதனால் அவங்க சீக்கிரமே கண்ணாடி போட்டுட்டாங்க” என்றார் அந்த ஆசிரியர். நம் பணிக்குத் தகுந்தவாறு கிட்டப் பார்வையின் தேவையும் மாறுபடுகிறது என்று அவரிடம் விளக்கினேன்.

சராசரியாக, படிப்பவர்கள், எழுதுபவர்கள், 40 முதல் 41 வயது நிறைவடையும் முன் கண் மருத்துவரை நாடுவார்கள். நகைத் தொழிலாளர்கள், நெசவாளர்கள் போன்ற மிக நுணுக்கமான வேலை செய்பவர்களுக்கு 37 வயது முடிந்த உடனேயே கிட்ட பார்வை கண்ணாடி போடும் அவசியம் ஏற்படும். சர்க்கரை நோய், ஸ்டீராய்டு பயன்பாடு, சில வாதநீர் பிரச்சனைகள் இதனால் பாதிக்கப்பட்டோருக்கு சில சமயம் 35 வயதிலேயே கூட கண்ணாடி போடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Spasm of accomodation என்று ஒரு பிரச்சனை இருக்கிறது. இதில் 40 வயதுக்கு ரொம்பவும் முன்னாலேயே கிட்டப் பார்வை கோளாறு ஏற்படலாம். ஓய்வின்றி தொடர்ச்சியாக கண்களுக்கு வேலை கொடுக்கும் நபர்களுக்கு இது அதிகம் நிகழ்கிறது. விரிவான உடல் பரிசோதனை செய்தால் இவர்களில் பலருக்கு மனஅழுத்தம், வேலைச்சுமை போன்ற மனோவியல் காரணங்களும் இருக்கக்கூடும். அத்தகையவர்களின் மனநிலையை சீர் செய்து, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டும். முடிந்தால் மலைப்பிரதேசம் அல்லது கடற்கரைப் பகுதிகளுக்குச் சென்று வாருங்கள் என்றும் அறிவுறுத்துவோம். ஒரு சிறிய விடுப்பு  அவர்களது கிட்டப்பார்வையை மேஜிக் போட்டது போல் இயல்புக்குத் திருப்பி விட்ட
ஆச்சரியத்தையும் பார்த்திருக்கிறோம்.

“எனக்கு வயது 20 தான். பிறவிக் கண்புரை இருந்து சிறுவயதிலேயே அறுவை சிகிச்சை நடந்தது. அதிலிருந்து கிட்டப் பார்வைக்கான கண்ணாடியைப் போட்டிருக்கிறேன். அது ஏன்?” என்றார் தன் தாயைப் பரிசோதனைக்குக் கூட்டி வந்த ஒரு இளைஞர். இயற்கையான லென்ஸிற்குத் தான் தூரப்பார்வைக்கும் கிட்ட பார்வைக்கும் இடையே தன்னைத்தானே சுருக்கிக் கொள்ளும் தன்மை இருக்கிறது. இயற்கை லென்ஸை அகற்றிவிட்டு செயற்கை லென்ஸ் பொருத்தும் அனைவருக்கும் கிட்டப் பார்வைக்கான கண்ணாடி நிச்சயம் தேவைப்படும். இவர்களது கிட்டப் பார்வை அளவு பெரும்பாலும் +2.50 Dsph ஆகத்தான் இருக்கும்.

“முன்பு என் கணவரின் கண்ணாடியைப் போட்டாலே என்னால் எழுத்துக்களைப் படிக்க முடியும். இப்போது அப்படி முடிவதில்லை. ஏன்?” என்பது போன்ற கேள்விகளும் அடிக்கடி எதிர்கொள்கிறேன். ஒவ்வொருவருக்கும் எப்படி உடையின் அளவு ஒன்று போல் இருப்பதில்லையோ, அதே போல் கண் கண்ணாடியின் அளவும் ஒன்றாக இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட வயதில் நம் உறவினரின் கண்ணாடி நமக்குப் பொருந்தி இருக்கலாம்.

வயதின் காரணமாக அவரது பார்வை நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். உங்களின் கிட்டப் பார்வையிலும் முன்பை விட இப்போது மாற்றம் ஏற்பட்டிருக்கும். உங்களுக்கு புரை கூட தோன்றியிருக்கலாம். உடல் அளவுக்கேற்ப சட்டை தைத்துக் கொள்வதைப் போல், இந்த வருடம் நமக்கு என்ன அளவு கண்ணாடி தேவைப்படுகிறதோ அதை பரிசோதனை செய்து போட்டுக் கொள்ள வேண்டும்; அதுவே சரியானது.

சிறுவயது முதலே கண்ணாடி அணிந்து கொண்டிருக்கும் நபர்களுக்கு நாற்பது வயதில் கிட்டப்பார்வைக்கான கண்ணாடியையும் சேர்த்து (bifocal) வழங்க வேண்டும். புதிதாக இரண்டு விதமான லென்ஸ்களை ஒன்றிணைத்து அணியும் போது ஆரம்பத்தில் கடினமாகவே இருக்கும். ‘படியில் இறங்கும் போது தடுமாற்றம் ஏற்பட்டது, சமைக்கும் போது சிரமமாக இருக்கிறது’ என்பது வழக்கமாக ஏற்படும் குறைகள். படிப்பதற்கான கண்ணாடிகளில் kryptok, progressive, D type என்று பலவகைகள் உண்டு.

மருத்துவரின் ஆலோசனையுடன் தங்கள் வயதுக்கும், பணிக்கும் ஏற்ற வகையில் கிட்டப் பார்வைக் கண்ணாடிகளைத் தேர்வு செய்ய வேண்டும். எனக்கு கிட்ட பார்வை தேவையில்லை, தூரப் பார்வைக்கு மட்டும்தான் கண்ணாடி வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அதையும் உங்கள் மருத்துவரிடம் தயங்காமல் சொல்லிவிடலாம். வெகு சிலர், படிப்பதற்குத் தனியாகவும், மற்ற நேரங்களில் அணிவதற்குத் தனியாகவும் இரண்டு கண்ணாடிகள் வைத்திருப்பார்கள். அதுவும் ஏற்புடையது தான்.

பெரியவர்கள் ஒன்று கூறக் கேட்டிருப்பீர்கள். ஒரு மண்டலம் தொடர்ந்து செய்தால் எந்த பழக்கத்தையும் உடல் பழகிக் கொள்ளும் என்று. அது கண்ணாடிக்கும் பொருந்தும். படிக்க சிரமம் ஏற்படுகிறதா, அடித்துப் பிடித்து 40 நாட்கள் கண்ணாடி போட்டுப் பழகுங்கள். பின் அதுவே உங்கள் இயல்புகளில் ஒன்றாகிவிடும். நாற்பதை நெருங்கும் பொழுது இன்னாதவை என்று நீங்கள் நினைக்கும் பலவற்றை மருத்துவ அறிவியல் மூலம் இனியவையாகவும் மாற்றிக் கொள்ள முடியும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நலம் காக்கும் சிறுதானியங்கள்!! (மருத்துவம்)
Next post பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா! (மகளிர் பக்கம்)