பெண்ணியவாதியாக அடையாளப்படுத்தியதால் நடிகை எம்மா வட்ஸனுக்கு அச்சுறுத்தல்!!
ஹொலிவூட்டின் பிரபல இளம் நடிகையான எம்மா வட்ஸன், ஐ.நா. ஆண் பெண் சமத்துவம் குறித்து உரையாற்றியதையடுத்து அவரின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடப்போவதாக இனந்தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இம்மாத முற்பகுதியில் ஹொலிவூட் நட்சத்திரங்கள் பலரின் நிர்வாணப் புகைப்படங்களை அவர்களின் ஐபோன்களை ஊடுருவுவதன் மூலம் திருடி, அவற்றில் சில படங்கள் இணையத்தளங்களில் கசிய விடப்பட்டன. நடிகைகள் ஜெனிபர் லோரன்ஸ், கெப்ரியெலா யூனியன், மொடல் கிம் கர்தாஷியன் ஆகியோரின் படங்களும் இவற்றில் அடங்கும்.
இந்நிலையில் ஐ.நா. மகளிர் விவகார நல்லெண்ணத் தூதுவர்களில் ஒருவராக விளங்கும் எம்மா வட்ஸன், கடந்த சனிக்கிழமை நியூயோர்க்கில் நடைபெற்ற “அவளுக்காக அவன்” எனும் தலைப்பிலான பாலின சமத்துவம் குறித்த ஐ.நாவின் பிரசார ஆரம்ப நிகழ்வில் உரையாற்றினார்.
தன்னை பெண்ணியவாதியாக அறிவித்துக்கொண்ட எம்மா வட்ஸன், பெண்ணியவாதிகள் ஆண்களை வெறுப்பவர்கள் அல்ல எனக் கூறியதுடன். பெண்ணியம் குறித்த கலந்துரையாடல்களில் ஆண்களும் பங்குபற்ற வேண்டுமெனவும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
இந்த உரை பலரின் கவனத்தை ஈர்த்தது. பலர் எம்மாவை பாராட்டி கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இனந்தெரியாத நபர் ஒருவர், தன்னை பெண்ணியவாதியென அடையாளப்படுத்தியமைக்காக அவரின் நிர்வாணப் புகைப்படத்தை அடுத்ததாக வெளியிடப்போவதாக மிரட்டியுள்ளார்.
24 வயதான எம்மா வட்ஸன், ஹரி பொட்டர் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றதுடன், பல்கலைக்கழக பட்டம் பெறுவதற்காக சிறிதுகாலம் நடிப்புத்துறையிலிருந்தும் ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்மா வட்ஸனுக்கு ஹொலிவூட் நடிக நடிகையர்கள், பெண்ணியவாதிகள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தனது நிர்வாணப் புகைப்படம் வெளியிடப்போவதாக வெளியான மிரட்டல் குறித்து எம்மா வட்ஸன் அஞ்சுவதாக தெரியவில்லை.
அவர் தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களில் பெண்ணிய ஆதரவு கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
Average Rating