By 21 November 2007

சினிமா ஒளிப்பதிவாளருடன் ரகசிய காதல் திருமணம்; நடிகை காவேரி, காதல் கணவர் மீது பரபரப்பு புகார்: `3 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு, 2-வது திருமணம் செய்ய முயற்சிக்கிறார்’

kaveri.jpgசினிமா ஒளிப்பதிவாளரை ரகசிய காதல் திருமணம் செய்த நடிகை காவேரி, போலீஸ் கமிஷனரிடம் தனது காதல் கணவர் மீது பரபரப்பான புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில் `3 மாத கர்ப்பிணியாக்கிவிட்டு, இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறார் என்றும், திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார். `வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் நடிகர் பிரசாந்துடன் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காவேரி. ஆங்கிலோ இந்திய பெண்ணான இவரது உண்மையான பெயர் ஏஞ்சலா. சினிமாவுக்காக தனது பெயரை இவர் காவேரி என்று மாற்றி வைத்துக்கொண்டார். இந்த படத்தில் பரபரப்பாக பேசப்பட்ட காவேரிக்கு, அதன்பிறகு நல்ல படங்கள் அமையவில்லை. இதனால் டி.வி. மெகா சீரியல் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். 3 வருடங்கள் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் 4 சகோதரிகளில் ஒரு சகோதரியாக நடித்து பிரபலமாக பேசப்பட்டார். அதன்பிறகு, `கெட்டி மேளம்’ என்ற டி.வி. தொடரிலும் நடித்தார். அண்மைக்காலமாக காவேரி டி.வி. தொடரில் நடிக்க பல வாய்ப்புகள் வந்த போதும், நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். இந்தநிலையில் அவர் சினிமா ஒளிப்பதிவாளர் ஒருவரை ரகசிய காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்வதாக தகவல் வெளியானது. தனது திருமணத்தை நடிகை காவேரி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

3 மாத கர்ப்பம்

நேற்று பகல் 12 மணியளவில் நடிகை காவேரி 2 வக்கீல்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். கண்ணீர் விட்டு அழுதபடி வந்த அவரிடம் போலீஸ் அதிகாரிகள் பன்னீர்செல்வம், முத்தமிழ்மணி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது அவர் கூறியதாவது:-

`மருதமலை’, `மலைக்கோட்டை’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள வைத்தி என்ற வைத்தீஸ்வரனை கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். கடந்த 11/2 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரை நண்பர்கள் முன்னிலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரகசிய திருமணம் செய்து கொண்டேன்.

நானும், அவரும், கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். எங்கள் திருமணத்தை பதிவு செய்துகொள்ளவில்லை. அவரோடு வாழ்ந்த வாழ்க்கையின் பலனாக நான் கர்ப்பமானேன். தற்போது நான் 3 மாதம் கர்ப்பமாக உள்ளேன். நான் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் கடந்த 3 மாத காலமாக எனது கணவர் வைத்தி வீட்டுக்கு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்தார். சமீபத்தில் ஒருநாள் கோயமுத்தூரில் இருக்கும் தனது தாயாரை பார்த்து வருவதாக சென்றவர் திரும்பி வரவில்லை.

2-வது திருமணம் முயற்சி

அவரது நண்பர்களிடம் விசாரித்த போது என்னுடைய இதயத்தை நொறுக்கும் அதிர்ச்சியான தகவல் ஒன்று கிடைத்தது. அவர் 2-வது திருமணம் செய்யப் போவதாக அவரது நண்பர்கள் கூறினார்கள்.

அவரது தாய்மாமன் மகள் எம்.சி.ஏ. பட்டதாரி. அவரை எனது கணவர் 2-வது திருமணம் செய்யப்போவதாக தெரிய வந்தது. எனது கணவரின் சொந்த ஊர் நெல்லை ஆகும். நெல்லையில் வைத்து 21-ந் தேதி (நாளை) திருமணம் நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. திருமணத்தை தடுத்து நிறுத்தி, எனது கணவரை மீண்டும் என்னோடு சேர்த்து வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு காவேரி அதிகாரிகளிடம் கூறினார்.

கமிஷனரிடம் மனு

இதே கருத்தை வலியுறுத்தி காவேரி போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் புகார் மனு ஒன்றையும் கொடுத்தார். அந்த மனு உடனடி நடவடிக்கைக்காக, திருமங்கலம் உதவி போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடிகை காவேரி சுடிதார் அணிந்து கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் தற்போது சென்னை மேற்கு முகப்பேரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரை படம் எடுக்கவும், பேட்டி காணவும் பத்திரிகை நிருபர்கள் முயன்றனர்.

என்னை படம் பிடித்தால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி விட்டு காவேரி வேகமாக காரில் ஏறி போய் விட்டார். அவர் கொடுத்த புகார் மனுவின் ஜெராக்ஸ் நகலையும் நிருபர்களிடம் தர மறுத்துவிட்டார்.

திருமணத்தை ரகசியமாக செய்தது போல, புகார் மனு கொடுத்ததையும் நடிகை காவேரி ரகசியமாக வைத்திருக்க விரும்பியதாக தெரிகிறது. அவரது செல்போனில் தொடர்பு கொண்டு நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அதற்கும் அவர் சம்மதிக்கவில்லை. சில நேரங்களில் செல்போனையே எடுக்கவில்லை.

திருமணத்தை நிறுத்த உதவி கமிஷனர் அதிரடி நடவடிக்கை

போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்த நடிகை காவேரி நேற்று பிற்பகலில் திருமங்கலம் உதவி போலீஸ் கமிஷனர் அழகு சோலைமலையை சந்திக்க சென்றார். அவர் விடுமுறையில் சென்றுள்ளதால் திருமங்கலம் பொறுப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராமதாசை சந்தித்து பேசினார். முதலில் கணவரின் 2-வது திருமணம் நெல்லையில் நடப்பதாக காவேரி கூறினார். பின்னர் நண்பர்களிடம் விசாரித்த போது திருமணம் திருச்சி அருகே உள்ள கீரனூரில் நடப்பது தெரிய வந்தது.

திருமணத்தை நிறுத்துவதற்காக உதவி கமிஷனர் ராமதாஸ் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் பசீர் அகமது தலைமையில் தனி போலீஸ் படையை நேற்று மாலை திருச்சி கீரனூருக்கு அனுப்பி வைத்தார். திருமணத்தை நிறுத்தி காவேரியின் கணவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

kaveri.jpgComments are closed.