தனியார் துறையினருக்கு சம்பள அதிகரிப்பு குறித்து தொழில் தருநர்களுடன் அரசு பேச்சுவார்த்தை

Read Time:3 Minute, 44 Second

தனியார் துறையினருக்கு சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தொழில் தருநர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அதாவுட செனவிரட்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தொழில் தருநர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் துறையினரினதும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற நியாயத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. அரச ஊழியர்களின் சம்பளத்தை இலகுவில் அதிகரிக்கலாம். அதாவது பொதுமக்களிடம் வரியை அறவிடுவதன் மூலம் அரசு ஊழியரின் சம்பளத்தை அதிகரிக்கலாம். ஆனால், தனியார் துறையினரின் சம்பளத்தை அவ்வாறு இலகுவில் அதிகரிக்கமுடியாது. திங்கட்கிழமை நடைபெற்ற தொழில் அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்திலும் தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு குறித்து கலந்துரையாடினோம். இதுவொரு ஆரம்பகட்ட நடவடிக்கையே ஆகும். மேலும் பல பேச்சுகளை இது தொடர்பாக நாம் நடத்தவுள்ளோம்.

தொழில் தருநர்கள் எமது நாட்டில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களின் ஒத்துழைப்புடன் தான் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்கலாம். சம்பளம் அதிகரிக்கும்போது தொழில் தருநர்களின் நலன்களும் பேணப்படுவது அவசியமாகும். தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பு எவ்வாறு பிரதானமானதோ அவ்வாறு தொழில் தருநர்கள் சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு நஷ்டத்தில் செயற்படுவதையும் ஏற்கமுடியாது.

தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்புக்காக போராட்டங்கள் நடத்தப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை. சிறந்த புரிந்துணர்வின் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்.

இதேவேளை, தொழிலாளர் நலன் காக்க அரசாங்கம் ஒருபோதுமே பின்நிற்காது. தொழில் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை தீர்க்க அல்லது இணக்கத்திற்கு கொண்டுவர புதிய திட்டங்களை வகுக்கவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

தொழிலாளர் வேலை அமைவிடம், தொழில் உரிமை, சலுகை, காப்புறுதி உள்ளிட்ட விடயங்களில் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதங்களை உறுதிசெய்வதிலும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். தொழிலாளர்களின் உரிமைகளை எவருமே அபகரித்து விடவோ அல்லது தொழிலாளர்கள் தவறாக வழிநடத்தப்படுவதற்கோ அரசாங்கம் ஒருபோதுமே அனுமதிக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post Thamilselvan should have been tried for multiple murders and hung at the Galle Face Green. -V.Anandasangaree
Next post ஆயுதங்கள் தளவாடங்களை கடத்த கேரள கடற்கரையை பயன்படுத்தும் விடுதலைப்புலிகள்