வட இலங்கை வன்செயல்களில் 5 பேர் பலி

Read Time:4 Minute, 33 Second

vavuniya.2.jpgஇலங்கையின் வடக்கே வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் யாழ் வேலணை பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் ஒன்றில் இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியா தோணிக்கல் மயானப்பகுதியில் காலை இரண்டு சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவர் ஊர்காவல் படையைச் சேர்ந்த 23 வயதுடைய சஞ்சீவகுமார பெனடிக்ற் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றவர் பொன்னையா ஞானகுமார் என அறியப்பட்டுள்ள போதிலும் உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இந்த சடலங்களை வவுனியா மாவட்ட பதில் நீதவான் ஏ.பி.அருணகிரிநாதன் பார்வையிட்டு, அவற்றை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சடட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் பிற்பகல் ஒரு மணியளவில் 67 வயதுடைய திருநாவுக்கரசு என்பவரை அடையாளம் தெரியாத ஆயுதபாணிகள் சுட்டுக்கொன்றுள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை நல்லூர் பகுதியில் மேலும் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் ஆயதபாணிகளினால் இந்த இளைஞர்கள் இருவரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையில் யாழ் வேலணை பங்களாவடி பகுதியில் கடற்படையினர் மீது காலை 10.30 மணியளவில் நடத்தப்பட்ட கையெறிகுண்டு தாக்குதலில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் காயமடைந்ததாக இராணுவ ஊடக மையம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் இரண்டு கடற்படையினர் காயமடைந்ததாகவும், படையினர் திருப்பிச் சுட்டதில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்ததாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மயிலிட்டி மற்றும் வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள் காணாமல் போயிருப்பதாக கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மயிலிட்டி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் 35 வயதுடைய ஜஸ்டின் குரூஸ் பருத்தித்துறைக்கு வந்தவேளை நேற்று வெள்ளை வானில் வந்ததாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத ஆட்களினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆதிகோவிலடி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவராகிய 38 வயதுடைய இராசதுரை இந்திரராஜா வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறையில் உள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தபோது மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் உறவினர்கள் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் முறையிட்டுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜாவா தீவு அருகே பலத்த பூமி அதிர்ச்சி இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி பீதி
Next post லெபனானில் மசூதி- டி.வி.கோபுரம் தகர்ப்பு