By 3 March 2016 0 Comments

மாட்டிக் கொண்ட இரா.துரைரத்தினமும், சாட்டை சுற்றியவர்களும்! -புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)

timthumbஈழத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும், ‘தினக்கதிர்’ இணையத்தளத்தின் ஆசிரியருமான இரா.துரைரத்தினம் அண்மையில் ‘சாதி’ வசை பொழிந்து சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார்.

யாழ். பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாடு விதிகளை கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் விடுத்திருந்தது. இது தொடர்பில் பேஸ்புக்கில் இடம்பெற்ற விமர்சன உரையாடலொன்றின் போது, ஆடைக் கட்டுப்பாட்டிற்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட இரா.துரைரத்தினம், விவாதத்தின் போக்கில் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான து.ரவிக்குமாரை நோக்கி சாதி வசை பொழிந்தார்.

புதிய ஆடைக்கட்டுப்பாட்டுக்கு எதிராக எழுந்த கடும் விமர்சனங்களையடுத்து கடந்த வாரத்தின் இறுதி நாட்களிலேயே யாழ். பல்கலைக்கழகம் அதனை மீளப்பெற்றுக் கொண்டு விட்டது.

ஆனால், அதனை முன்னிறுத்திய உரையாடலில் சாதி வசை பொழிந்த இரா.துரைரத்தினத்தின் நிலைமை பேஸ்புக்கில் பெயர் மாற்றி இயங்குமளவுக்கும், பின்னராக பேஸ்புக்கினை விட்டுச் செல்லுமளவுக்கும் ஆகியிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்திலிருந்து இயங்கிய தமிழ் ஊடகவியலாளர்களில் முக்கியமானவரான இரா.துரைரத்தினம், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சுவிஸ்லாந்தில் தஞ்சமடைந்தார்.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் சில காலங்களில் முக்கியமான முனைப்புக்களில் ஈடுபட்ட மறைந்த ஊடகவியலாளர் ‘தராகி’ சிவராம் உள்ளிட்டவர்களோடு இணைந்து பணியாற்றிவர்களில் இரா.துரைரத்தினமும் ஒருவர். ஆனால், அவரின் உரையாடல் மொழி அல்லது விமர்சன மொழியில் அடிக்கடி அதீத உணர்ச்சி மேலிடுகையும், நிதானமிழந்த நிலையும் வெளிப்பட்டு வந்திருக்கின்றது.

அவர், எந்தவித குற்றவுணர்ச்சியுமின்றி ‘வந்தேறிகள், வடக்கத்தியான்’ என்கிற வார்த்தைகளையெல்லாம் பாவித்து வந்திருக்கின்றார். அதன் தொடர்ச்சியாகவே, து.ரவிக்குமாரை நோக்கிய சாதி வசை மொழி உரையாடலுமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் அந்த இடத்தினை உரிமை கோருவதற்கான போக்கில் பல குழுக்களும், தனி நபர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அல்லது, விடுதலைப் புலிகளின் நேரடி அங்கீகாரம் பெற்றவர்கள் என்கிற தொனியிலான உரையாடல்களை அல்லது நடவடிக்கைகளை வெளிப்படுத்துவர்கள் எம்மிடையே நிறைய உண்டு. அந்தத் தரப்பின் ஒரு கூறாக இரா.துரைரத்தினத்தினையும் கொள்ள முடியும்.

அவர், அரசியல் ரீதியாக எதிர்த்தளத்திலிருப்பவர்களை நோக்கி எந்தவித அடிப்படையும்- அர்த்தமுமின்றி ‘துரோகிகள், சிங்களக் கைக்கூலிகள்’ என்கிற தொனியிலான முன்வைப்புக்களையும் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கின்றார்.

அப்படிப்பட்ட முன்வைப்பொன்று (அரச கைக்கூலி) தன்னை நோக்கி வைக்கப்பட்டதை அடுத்தே, தான் சாதி வசை பொழிந்ததாக இரா.துரைரத்தினம் கூறியிருக்கின்றார்.

எந்தவித குற்றவுணர்ச்சியும், அடிப்படையுமின்றி மற்றவர்களை நோக்கி துரோகி, கைக்கூலிகள் உள்ளிட்ட சாட்டுதல்களைச் செய்கின்ற இரா.துரைரத்தினத்தினாலேயே அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால், அப்படியான வார்த்தை முன்வைப்புக்கள் எவ்வளவு அசூசையானவை என்பது உணரப்பட வேண்டும்.

ஆக, வார்த்தைகளின் கனதி பற்றிய அடிப்படையை சிரேஷ்ட ஊடகவியலாளரான இரா.துரைரத்தினமும், அவ்வாறான உரையாடல்களை நிகழ்த்துபவர்களும் எதிர்காலத்திலாவது கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் உரையாடல் வெளியில் துரோகிகள், கைக்கூலிகள் வாதம் அடிப்படைகளின்றி தலைவிரித்தாடுகின்றது.

தமிழ்த் தேசிய அரசியலின் முன்நோக்கிய நகர்வின் போது உணர்ச்சி மேலீடுகளையும், நிதானமிழப்பும் எப்படியான சிக்கலுக்குள் மாட்டிவிடும் என்பதற்கும் கூட இரா.துரைரத்தினம் அண்மைய உதாரணமாகின்றார்.

ஏனெனில், இவர்கள் முன்வைக்கின்ற அரசியல் என்பது எவ்வளவு தூரம் உணர்ச்சி மேலிடுகைகளின்றி எடுக்கப்படுகின்றது. அதன், உண்மையான அடைவு நிலை என்ன?, என்பது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும். தமிழுணர்வுக்கும், அதீத உணர்ச்சியூட்டலுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்களுண்டு. அதனை, புரிந்து கொள்வதற்கும் இவ்வாறான சம்பவங்களை படிப்பினையாக கொள்ள முடியும்.

இரா.துரைரத்தினத்துக்கு கடந்த சனிக்கிழமை இலண்டனைத் தளமாகக் கொண்டிங்கும் தமிழ் ஊடகமொன்றினால் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது. விருது வழங்கப்படும் நிகழ்வு நடைபெறுவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் சாதி வசை பொழிந்து அவர் மாட்டிக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து, அவருக்கு விருது வழங்கப்படக் கூடாது என்று பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பெருமளவு முன்வைப்புக்கள் எழுந்தன. ஆனாலும், அதனை குறித்த தமிழ் ஊடகமோ, அதன் நிர்வாகிகளோ கருத்திலெடுக்கவில்லை.

அறிவித்த மாதிரியே விருதினை இரா.துரைரத்தினத்துக்கு வழங்கினார்கள். இதனை தமிழ் ஊடக வரலாற்றில் கறுப்பு நிகழ்வாக சிலர் சொல்லிக் கொண்டார்கள்.

தன்னுடைய வியாபார தளத்தின் விரிவாக்கல் பணிகளின் போக்கில் நிறுவனமொன்று விளம்பர முன்வைப்புக்களையும், நிகழ்வுகளையும் நடத்துவது இயல்பானது. அதன்போக்கில் குறித்த தமிழ் ஊடக நிறுவனம் நடந்து கொண்டிருக்கலாம். இது, உலகமயமாக்கல் வியாபாரத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதுதான்.

அப்படிப்பட்ட நிலையில், தமிழ் மக்களின் உணர்வுளை மதித்து குறித்த ஊடக நிறுவனம் விருதினை வழங்காது என்றோ? அல்லது, அப்படி வழங்காமல் விடுப்பதாலோ அது பெரும் அங்கீகாரமொன்று கருத வேண்டியதில்லை. அது, வியாபார விரிவாக்கல் பணி என்கிற அளவிலானது மட்டுமே.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. அதாவது, சாதி வசை பொழிந்து இரா.துரைரத்தினம் மாட்டிக் கொண்டதும், சாட்டை சுழற்றியவர்களில் குறிப்பிட்டளவானவர்கள் பரபரப்புப் பக்கத்தில் தாமும் இருக்க வேண்டும் என்கிற முனைப்பில் செயற்பாட்டவர்கள். அவர்கள் சாதி, சமயம் சார்ந்த திமிரை உண்மையிலேயே இறக்கி வைத்தவர்கள் அல்ல.

தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து விட்டாலும் சாதியையும், அது சார்ந்த திமிரையும் கொண்டு சுமப்பவர்கள். அவர்களின் ஆட்டத்தினையும் காண முடிந்தது. அது, எம்முடைய சமூக அமைப்பின் நகைப்புக்கிடமான பக்கங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ‘

மாட்டிக்கொள்ளும் வரைதான் உத்தமர்கள்’ என்கிற மொழிவொன்று நம்மிடையே உண்டு. அப்படிப்பட்ட நிகழ்வின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பட்டது. (சாதி எதிர்ப்புக்கு எதிரான உண்மையான அக்கறையாளர்கள் பற்றியது அல்ல இந்தப் பகுதி).

தமிழ்த் தேசிய அரசியல் போராட்டங்கள் என்பது தன்னுடைய உரித்துக்கள், உரிமைகளை எவ்வளவுக்கு முக்கியமாகக் கொள்கின்றதோ, அதேயளவுக்கு, உள்ளக அடக்குமுறைகள்- சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் முனைப்புப்பெற வேண்டும். இது, இன்றைய முன்வைப்பு அல்ல ஐந்து தசாப்த காலத்தினைத் தாண்டிய முன்வைப்பு.

எனினும், குறிப்பிட்ட ஒருதரப்பு மிகவும் தெளிவாக அதனை நிராகரித்து வந்திருக்கின்றது. அல்லது, தமிழ்த் தேசியத்தின் பெயரினால் உள்ளக அடக்குமுறைகள் மற்றும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதிலிருந்து பின்நின்று கொண்டது.

ஆயுதப் போராட்டம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை சில பக்கங்களிலிருந்து நீக்கம் பெறச் செய்தது என்பது உண்மை. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் பின்னராக இன்றைய நிலை எப்படிப்பட்டது. தேசங்கள் கடந்தாலும் சாதி உணர்வும்- திமிரும் தூக்கிக் கடத்தப்பட்டமை எதன் வெளிப்பாடு சார்ந்தது என்பது தொடர்பிலும் நீண்ட நியாயமான உரையாடல்கள் நிகழ்த்தபட வேண்டும்.

மாறாக, இப்போது, ‘தமிழ்த் தேசிய ஒற்றுமையே முக்கியம்’ என்கிற பொத்தம் பொதுவான கூற்றைக் கூறிக்கொள்ளும் சில தரப்புக்கள் சார்ந்தும் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய ஒற்றுமை எமது அரசியல் போராட்டங்களை வென்றெடுப்பதற்கு மிகவும் அவசியமானது. ஆனால், அதனை உள்ளக அடக்குமுறைகள், சாதி ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்தும் தக்க வைக்க முயலும் தரப்புக்களும் கையாள முயலும் போது மிகவும் கவனமாக இருந்தாக வேண்டும். ஏனெனில், இந்த குறுந்தரப்புக்கள் தமிழ்த் தேசியத்தினையும் நடுவீதியில் போட்டு மிதிப்பதற்கு எந்தவித தயக்கமும் கொள்ளாதவை.

ஆயுதப் போராட்டங்களுக்கு முன்னைய வடக்கு- கிழக்கில் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக எழுந்த நியாயமான போராட்டங்களை அதிகாரத் தரப்பு எவ்வாறு அடக்கியொடுக்க நினைத்தது என்பதையும், அது முடியாமல் போனபோது அதனை எவ்வாறு வாக்கு அரசியலாக்கிக் கொண்டது என்பதையும் நாம் கடந்து வந்திருக்கின்றோம்.

சமபந்தி போஜனங்களை நடத்திய தமிழரசுக் கட்சி வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. உண்மையிலேயே, சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அந்தக் கட்சி செயற்பட்டதா என்பதையும், அதன்பின்னர் எழுந்த ஆயுதப் போராட்டத்தின் மீதும், அதனை முன்னெடுத்த தரப்புக்கள் மீதும் சாதிய அடையாளங்களை எவ்வாறு முன்வைத்தது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

ஆயுதப் போராட்டம் வலுப்பெற்று தம்முடைய அதிகார எல்லைகள் தகர்ந்துபோன புள்ளியில் தமிழரசுக் கட்சி (தமிழர் விடுதலைக் கூட்டணி) உள்ளிட்ட பெரும் கட்சிகள் தமது தேவைகளுக்காக இறங்கி வந்த வரலாறுளே உண்டு. அப்படிப்பட நிலைகளினூடு, உண்மையான சமூதாயங்கள் வீச்சம்பெற முடியாது.

பொத்தம் பொதுவான முன்வைப்பொன்றினூடு எல்லோரும் சமமானவர்கள், ஏற்றத்தாழ்வுகள் அற்றவர்கள் என்கிற நிலையைக் காண்பிக்க அதிகாரத்திலுள்ள தரப்புக்களும், அதனை நோக்கிய நகரும் தரப்புக்களும் முயல்கின்றன. தமிழ் சூழலிலும் தற்போதும் அதுவே பெரும் சாக்கடையாக நீள்கின்றது.

அப்படிப்பட்ட தொனிகளின் போக்கில் எழும் சாதி அடையாளமும்- அது சார்ந்த திமிரும் எதிர்காலத்துக்கு எவ்வளவு அச்சுறுத்தலானது என்பதை உணராதவரையில் நியாயமான விடிவு சாத்தியமில்லை. அது, தமிழ்த் தேசியப் போராட்டத்தினை முட்டுச் சந்துகளுக்குள் மட்டுமே கொண்டு சேர்க்கும்.

(தமிழ்மிரர் பத்திரிகையில் (மார்ச் 02, 2016) வெளியான இந்தக் கட்டுரையை நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு ATHIRADY.COM),

(*** கடந்த வருடம் மே மாதம் புங்குடுதீவு பகுதியில் நடைபெற்ற மாணவி வித்தியாவின் படுகொலையை அடுத்து, புங்குடுதீவையும், அந்த ஊர் மக்களையும்; குறிப்பாக சுவிசில் உள்ள புங்குடுதீவு மக்களையும், “உண்மைக்கு புறம்பாக, தரக்குறைவாக” (தூஷண வார்த்தைகளிலும், சாதியையும், பிரதேசவாதத்தையும் பயன்படுத்தி) கேவலப்படுத்திய, இரா.துரைரத்துனத்துக்கு ஐ.பி,சி.நிகழ்வில் வைத்து “வாழ்நாள் சாதனையாளர்” எனும் விருதை திரு.நிராஜ் டேவிட் அவர்கள், தனது “தனிப்பட்ட நண்பன்” எனும் காரணத்துக்காக வழங்கியமைக்கு, பலரும் தமது எதிர்ப்பை தெரிவித்து, எமது ஊடகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சல் காரணமாகவும் இக்கட்டுரை மீள் பிரசுரிக்கப் படுகிறது.)Post a Comment

Protected by WP Anti Spam