By 20 December 2007

சொந்த செலவிலும் திட்டங்களை அமுல்படுத்த முடியவில்லை: தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவேன்- நடிகர் விஜயகாந்த்

vijayakanth.jpgநடிகர் விஜயகாந்த் தனது தொகுதியான விருத்தாசலம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- எனது கட்சியில் 5200 பேர் இணைந்துள்ளனர். இதில் இருந்து தெரியும் என்னுடைய கட்சியின் வளர்ச்சி. எனக்கு நேர்மையாக இருப்பது பிடிக்கும். எனக்கு என் பலம் தெரியும். அதனால்தான் நான் தனியாக நின்று போராடி வருகிறேன். இப்போது இளைஞர் அணி மாநாடு நடத்த அவசியம் என்ன வந்தது. இவ்வளவு பாரம்பரிய மிக்க கட்சியில் இத்தனை இளைஞர்கள் உள்ளனர் என்று மக்களுக்கு காட்டவா? இலவசமாக பேண்ட், சர்ட், ஷூ கொடுத்தால் கூட்டம் வரும். இந்த ஆட்சியில் வேலை வாய்ப்புகள் இல்லை. கல்வி சரியில்லை. உயர் கல்வி முதல் ஆரம்ப கல்வி வரை குதிரை கொம்பாக இருக்கிறது. 10 பேரில் 5 பேருக்கு எழுத படிக்க தெரியவில்லை. தமிழகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை உள்ளது. தொலை நோக்கு திட்டம் இல்லை. இதனை பற்றி கேட்டால் பல காரணம் சொல்கிறார்கள். எங்களுக்கு காரணம் தேவையில்லை. உற்பத்தியை பெருக்க வழி வகை செய்ய வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் 30 கோடி இளைஞர்கள் உருவாகுகிறார்கள் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு அரசு என்ன திட்டம் வைத்துள்ளது. விவசாயிகள் பிரச்சினை, மக்கள் தொகை பெருக்கம் என பல பிரச்சினை உள்ளது. அரசு இளைஞர் அணி மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறது. அது கட்சி மாநாடா அல்லது அரசு மாநாடா என எனக்கு தெரியவில்லை.

இளைஞர்களை விஜயகாந்த் வந்தவுடன்தான் கண்ணுக்கு தெரிகிறது. நெய்வேலியில் 64 கிராம மக்கள் வீடு, வேலை வாய்ப்பு கேட்டு போராடி வருகின்றனர். அரசு முன்பு என்ன ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது தெரிய வேண்டும். கணிம வளம் மத்திய அரசுக்கும், நீர் வளம் மாநில அரசுக்கும் சொந்தம் என்கின்றனர்.

இது என்ன நியாயம். இதனால்தான் நீர் பங்கீடு பிரச்சினைகள் ஏற்படுகிறது. கணிம வளத்தை மாநில அரசுக்கு சொந்தமாக்க வேண்டும். நெய்வேலி பிரச்சினையில் மந்திரிகள் பல கோடி ரூபாய் பினாமி பெயரில் ஊழல் செய்துள்ளனர். ஆனால் நான் நெய்வேலி சென்றால் நெய்வேலி கெஸ்ட் அவுசில் கூட தங்குவதில்லை. தனியார் லாட்ஜில்தான் தங்குவேன்.

விருத்தாசலத்தில் எனது சொந்த செலவில் செய்து கொடுத்த பேரிகாடு கூட வைக்க மறுக்கின்றனர். கொஞ்ச நாள் அவகாசம் கொடுக்கிறேன். அதை வைக்கவில்லை என்றால் நானே அரசை எதிர்த்து போராட போகிறேன்.

தமிழகம் முழுவதும் ரோடு மோசமாக இருக்கிறது. நான் தொகுதிக்கு வந்தாலே அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இருப்பதில்லை. என்னை கண்டாலே அதிகாரிகள் பயப்படுகின்றனர். சுகாதாரம் சுத்தமாக இல்லை. அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றால் மருந்து, மாத்திரை இல்லை. ஸ்கேன் வசதி கூட இல்லை பணம் பணம் என பிடுங்குகின்றனர்.

அமைச்சர்களுக்கு எப்படி சொத்து வந்தது. இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள்.

நான் உழைத்து சம்பாதிக்கிறேன். போலீசை போலீஸ் வேலையை செய்ய விடுவதில்லை. அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டால் நன்றாக செயல்படுவார்கள். அரசியல் தலையீடு அதிகம் போலீஸ் துறையில் உள்ளது.

இலங்கை, மலேசியா, பிரச்சினையில் மனிதாபி மானத்துடன் மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். மனித உரிமை மீறல் கூடாது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டு விட்டது. அதனால் இந்த அரசை காலி செய்தே ஆக வேண்டும். மாற்று அரசை அமைக்கும் நேரம் வந்து விட்டது. அரசியல் கடல். அதில் நீந்த நிறைய விஷயம் தெரிய வேண்டும். 24 மணி நேரம் இதைப் பற்றி தான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன். இளைஞர்களை நல் வழிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்

அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. ராமநாதன், பிரேமலதா ஆகியோர் உடன் இருந்தனர்.Comments are closed.