சென்னை பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை…!!
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி செக்கடி தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் கோமதி (வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், சங்கரன்கோவில் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பரமசிவன் மகன் ராஜசேகருக்கும் (32), கடந்த 1 3/4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. என்ஜினீயரான ராஜசேகரும், சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
திருமணத்துக்கு பின்னர் புதுமணத்தம்பதியர் சென்னையில் வசித்து வந்தனர். கோமதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கர்ப்பம் தரித்த கோமதியை பிரசவத்துக்காக டி.என்.புதுக்குடியில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் ராஜசேகர் விட்டுச் சென்றார்.
இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோமதிக்கு ஆண்குழந்தை பிறந்தது. அடிக்கடி ராஜசேகர் சென்னையில் இருந்து சென்று குழந்தையையும், மனைவியையும் பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தன்னையும், குழந்தையையும் சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கோமதி தனது கணவரிடம் கேட்டுள்ளார். ராஜசேகரும் விரைவில் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். அதன்படி கடந்த 7 நாட்களுக்கு முன்பு மனைவியையும், குழந்தையையும் சென்னைக்கு அழைத்து வருவதற்காக ராஜசேகர் ஊருக்கு சென்றார். அப்போது குழந்தையின் உடல்நிலை சரியில்லாததால், உடல்நிலை சரியானதும் அழைத்துச் செல்கிறேன் என கூறிவிட்டு அவர் சென்னைக்கு வந்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த கோமதி, தன்னையும், குழந்தையையும் கணவர் சென்னைக்கு அழைத்துச் செல்லாமல் இருப்பது குறித்து பெற்றோரிடம் புலம்பியுள்ளார். அதற்கு அவர்கள் கோமதியை சமாதானம் செய்துள்ளனர். இந்தநிலையில், நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த கோமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு மற்றும் போலீசார் விரைந்து சென்று, கோமதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கோமதிக்கு திருமணமாகி 1 3/4 ஆண்டுகளே ஆவதால், இந்த சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்த உள்ளார்.