By 9 July 2016 0 Comments

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சுட்டுக் கொலை: காஷ்மீரில் பதற்றம் – அமர்நாத் யாத்திரை ரத்து..!!

201607090858061981_Amarnath-Yatra-suspended-in-view-of-tension-due-to-killing_SECVPFஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 15 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, ஆயுதமேந்திய தீவிரவாதியாக மாறியவன் புர்ஹான் முசாபர் வானி. புர்ஹான் வானி என்றழைக்கப்படும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் இருந்த ஆளுமையை வைத்து பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு பேர்போன இயக்கமான ‘ஹிஸ்புல் முஜாஹிதீன்’ தலைமை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆயுதமேந்திய தீவிரவாதிகளாக மாற்றும் பணியை கடந்த 2011-ம் ஆண்டுவாக்கில் புர்ஹான் வானியிடம் ஒப்படைத்தது.

அன்றுமுதல் மாநிலத்தில் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களுக்கும் வானிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்.

இதற்கிடையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவனாக வானி நியமிக்கப்பட்டான். அதன்பிறகுதான் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் சில வாலிபர்கள் பாகிஸ்தான் கொடியையும், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் கொடியையும் உயர்த்திக் காட்டி இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்ட சம்பவங்கள் தலைதூக்க தொடங்கின.

சமூக வலைத்தளங்களின் மூலம் இந்தியாவுக்கு எதிரான நச்சுவிதையை காஷ்மீர் வாலிபர்களின் மனங்களில் விதைத்துவந்த வானியை கைது செய்ய பாதுகாப்பு படையினரும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பும்டூரா என்ற கிராமத்தில் வானி தனது கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று பிற்பகல் 2 மணியளவில் சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் அந்த கிராமத்தை முற்றுகையிட்டனர்.

பாதுகாப்பு படையினரை உள்ளே நுழைய விடாமல் அங்குள்ள மக்கள் கற்களைவீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை முறியடித்த வீரர்கள் முன்னேறி கிராமத்துக்குள் நுழைந்தனர். பும்டூரா கிராமத்தின் நாற்புற எல்லைகளும் சுற்றிவளைக்கப்பட்டது. அப்போது, அங்கே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டனர். சிறப்பு அதிரடிப் படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர்.

சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த என்கவுன்ட்டரில் புர்ஹான் வானி மற்றும் அவனது இரு கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீநகர், புல்வாமா உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து ஒருபிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீநகரில் நேற்றிரவு ஊரடங்கு உத்தரவுக்கு இணையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று அதிகாலையில் இருந்து கைபேசி, இண்டர்நெட் சேவைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரெயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

என்கவுன்ட்டரில் புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்த ஹுரியத் அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானி அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றியுள்ள பனி லிங்கத்தை தரிசிக்க சென்று கொண்டிருக்கும் யாத்ரீகர்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறையினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தது. இதையொட்டி, அமர்நாத் யாத்திரை நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா விமானங்களின் மூலமாகவும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், நேற்று புர்ஹான் வானி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நிலையில் அங்குள்ள தீவிரவாதிகளின் ஆத்திரம் அமர்நாத் பக்தர்கள்மீது திரும்பலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து, இன்றைய அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Post a Comment

Protected by WP Anti Spam