கத்திக் குத்தில் முடிவடைந்த பூப்புனித நீராட்டு விழா…!!
பூப்புனித நீராட்டு வைபவத்துக்கு சென்றிருந்தவர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்த பிரிவில், நேற்று (08) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த அறுவரும், மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரும், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 32 வயதுடைய ராமசாமி ரவிக்குமார் என்பவரே மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். காயமடைந்த, 28 வயதுடைய பிரேமகாந்தன், 22 வயதுடைய கீர்த்திஸ்ரீ, 45 வயதுடைய சுசிகலா, 41 வயதுடைய ஆதி செட்டி, 28 வயதுடைய பிரதீபன் ஆகியோரே மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.