சேத்தியாத்தோப்பு அருகே கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டி ரூ.2 லட்சம் நகை கொள்ளை…!!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேலவளையமாதேவி பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி மங்கையர்க்கரசி(40) இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.
மாதவனுக்கு மேல வளையமாதேவியில் சிதம்பரம் -விருத்தாசலம் சாலையில் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டினார். அந்த பகுதியில் வேறு வீடுகள் எதுவும் இல்லை. மாதவன் தனியாக குடும்பத்துடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று இரவு மாதவன் தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு அந்த பகுதிக்கு 8 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் கையில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
கும்பலைச் சேர்ந்தவர்கள் மாதவன் வீட்டுக் கதவை தட்டினர். தூங்கிக்கொண்டிருந்த மாதவன் எழுந்து வீட்டின் கதவை திறந்தார். மர்ம மனிதர்களை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டார். உடனே மர்ம மனிதர்களில் ஒருவன் கையில் வைத்திருந்த அரிவாளால் மாதவன் தலையில் ஓங்கி வெட்டினான்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். அலறல் சத்தம் கேட்டு மங்கையர்க்கரசி எழுந்து வெளியே வந்தார். கொள்ளை கும்பல் அவர் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறிக்க முயன்றது. மங்கையர்க் கரசி தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த மர்ம மனிதர்கள் மங்கையர்க் கரசியின் கழுத்து மற்றும் காலில் அரிவாளால் வெட்டினர். ரத்தம் அதிகம் வெளியேறியதால் அவர் மயக்கம் அடைந்தார். கொள்ளை கும்பல் மங்கையர்க் கரசியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதைபார்த்ததும் கொள்ளை கும்பல் தங்க சங்கிலியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. துணைபோலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த மாதவன், மங்கையர் கரசியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள குளக்கரைக்கு ஓடியது. பின்னர் அங்கிருந்து ஓடி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றது. அங்கு ஒரு போர்வை கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர்.
கொள்ளையர்கள் நகையை கொள்ளையடித்து விட்டு அந்த வழியாக தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். பொதுமக்களும் போலீசாரும் வளையமாதேவியின் பல்வேறு பகுதிக்கு சென்று கொள்ளையர்களை வலைவீசி தேடினார்கள்.
இந்தநிலையில் வளையமாதேவியில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கரிவெட்டிப் பகுதியில் இன்று அதிகாலை 8 பேர் முள்புதரில் பதுங்கி இருந்தனர். அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களில் 4 பேர் தப்பி ஓடினார்கள். மீதி உள்ள 4 பேரை பொதுமக்கள் பாய்ந்து பிடித்தனர். அவர்களுக்கு தர்மஅடி கொடுத்தனர்.
பின்னர் அவர்களை சேத்தியாத்தோப்பு போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் வீரமணி அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது பிடிபட்ட கொள்ளையர்கள் அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவன் பெயர் மாதவன் என்றும் தெரியவந்தது. பிடிப்பட்ட கொள்ளையர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மற்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு பகுதியில் தொடர்ந்து வழிப்பறி மற்றும் வாகன திருட்டுகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டி மர்ம மனிதர்கள் நகையை பறித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..