தவறியோர் தப்பினர்…!!

Read Time:25 Minute, 17 Second

article_1470902896-Article (4)உலகில் அழியாமல் நிலைத்த செல்வம், கல்விச் செல்வம் மாத்திரமேயாகும். அதனால் தான், அவ்வாறான கல்விச் செல்வத்தைப் போதிக்கும் ஆசிரியர்களை, பெற்றோருக்கு அடுத்தபடியாகவும் கடவுளுக்கும் முந்திய தெய்வமாகவும் இவ்வுலகம் போற்றி வருகின்றது. ‘நான் ஏன் ஓர் ஆசிரியராகவே இருக்கிறேன்? ஆசிரியர் பணி சிரமமாகவும் களைப்பூட்டுவதாக இருந்தாலும், கற்பதில் பிள்ளைகளின் ஆர்வத்தையும் அவர்களுடைய முன்னேற்றத்தையும் காண்பதே இப்பணியைத் தொடர உந்துவிக்கிறது’ என்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த லீமரீஸ் என்ற பிரபல ஆசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

எத்தனைச் சவால்கள், சிரமங்கள், ஏமாற்றங்கள் எதிர்ப்பட்டாலும், இவை அனைத்தின் மத்தியிலும், உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான ஆசிரியர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த பணியை விட்டு விடாமல் அதில் நிலைத்திருக்கிறார்கள். அதே சமயத்தில் போதியளவு மரியாதை கிடைக்காமல் போகலாம் என்பதை அறிந்தும், ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாடுபட்டு உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தனைப் பெருமைத்துவமிக்க ஆசிரியர் சேவை, சிலரது தேவையற்ற நடவடிக்கைகள் காரணமாக, சீரழிந்து வருகின்றது என்றே கூறவேண்டும். முன்னொரு காலத்தில், ஆசிரியர்கள் என்றால், எம் அனைவர் மத்தியிலும் மரியாதையொன்றே உருப்பெடுக்கும். அந்த மரியாதை, அவர்கள் மீது அச்சத்தைத் தோற்றுவித்து, அதுவே, எம்மை நல்வழிக்கு இட்டுச்சென்று வந்தது. ஆனால், இன்றை காலகட்டத்தில் உள்ள மாணவர்களில், எத்தனை பேர் தான், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள்? ஆசிரியர்களைக் கண்டு பயப்படுகிறார்கள்?. உண்மையைச் சொல்லப்போனால், ஆசிரியர்கள் தான், இன்று மாணவர்களைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள். காரணம், மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டிக்கச் செல்லும் ஆசிரியர்கள், அம்மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பொலிஸாரினால் தண்டிக்கப்படும் சம்பவங்களே தற்காலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன.

இப்பிரச்சினை இவ்வாறிருக்க, மறுபுறத்தில், மாணவர்களை துன்புறுத்துவது, பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்துவது, வன்புணர்வுக்கு உள்ளாக்குவதென்ற பல்வேறு கொடூரச் செயல்களைப் புரிந்து வருவதான குற்றச்சாட்டுக்களும், ஆசிரியர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அண்மைக் காலத்தில், இவ்வாறான சில சம்பவங்கள், வட மாகாணப் பாடசாலைகளில் இடம்பெற்றதான செய்திகள் வெளியாகியிருந்தமை நினைவிருக்கலாம்.

கடந்த வாரத்தில், அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள பிரத்தியேக வகுப்பொன்றுக்குச் சென்ற 12 மாணவியொருவரை, அவ்வகுப்பை நடத்திவந்த ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிய சம்பவமொன்று பதிவாகியிருந்தது. இச்சம்பவத்தை விட, அதிகளவில் பேசப்பட்ட மற்றொரு பாரிய சம்பவமொன்று கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற செய்தியானது, மிகப் பரந்தளவில் பேசப்பட்டு வருகின்றது. மாணவிகளை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கவென்றே, கல்வி நிறுவனமொன்றை நடத்திவந்த ஆசிரியர் ஒருவர், பொலிஸாரிடம் சிக்குண்டுள்ள நிலையில், தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றார்.

கண்டி, ஹந்தான பிரதேசத்தில், மாணவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதற்காக நடத்தப்பட்டு வந்த தனியார் வதிவிடப் பயிற்சி முகாமொன்றிலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த கல்வி நிலையத்தில் தங்கியிருந்து பயற்சிபெற்று வரும் 18 மாணவிகளை, அந்நிலையத்தின் தலைவரும் ஆசிரியருமான ஒருவரே, பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தி வந்துள்ளார் என்றும், அம்மாணவிகளில் சிலரை, அம்மாவட்டத்திலுள்ள பிரபல வர்த்தகர்களிடமும் அழைத்துச் சென்று, அவ்வாறான தொந்தரவுகளுக்கு உள்ளாக்கி வந்துள்ளார் என்றும் குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றன. குற்றஞ்சாட்டப்பட்டவரின் இவ்வாறான ஈனச் செயல் பற்றி, கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதியன்றே, அனைவரும் அறிந்துகொண்டனர்.

அந்த 31ஆம் திகதி, ஒரு ஞாயிற்றுக்கிழமை தினமாகும். குறித்த கல்வி நிலையத்தில் தங்கியிருந்து பயற்சி பெற்றுவரும் மாணவிகள், வழமைபோன்று, தங்களது கல்வி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு, தங்களது தங்குமிடம் நோக்கிச் சென்றனர். அப்போது, இருளும் சூழ்ந்துகொண்டு வந்தது. ஆனால், அன்றைய இரவுப் பொழுதில் ஏதோவோர் மாற்றத்தை, அம்மாணவிகள் உணர்ந்து வந்தனர்.

இரவு 9 மணியிருக்கும், வதிவிடத்தின் பெண் தலைமை மேற்பார்வையாளர், சமயலறைக்குச் சென்று, இறைச்சி பொறிக்க ஆரம்பித்தார். அந்த இறைச்சி பொறிக்கும் வாசனை, வதிவிடத்தின் அனைத்துப் பகுதிகளையும் வியாபித்தது. அந்நேரத்தில், வதிவிடத்திலிருந்த சுமார் நான்கு மாணவிகளைத் தவிர்ந்த ஏனையோர், உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில், இரவு பத்து மணியாகியிருக்கும், மேற்படி கல்வி நிலையத்தின் தலைவர், தன்னுடைய நெருங்கிய நண்பரான கோடீஸ்வர வர்த்தகர் மற்றும் சிலருடன் இணைந்து, கல்வி நிலைய வளாகத்துக்குள், மதுபான விருந்தொன்றுக்கு தயாராகிக்கொண்டிருந்தார்.

இந்த விருந்து, நள்ளிரவு வரை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தாங்கள் இருக்குமிடம் அறியாத வகையில், அங்கிந்தவர்கள் மது போதையில் மூழ்கியிருந்தனர். வழமைக்கு மாறான சில சத்தங்கள், மற்றும் கூச்சல்கள் காரணமாக, சில மாணவிகளின் தூக்கம் கலைந்தது. சத்தம் யாதென அறிந்துகொள்ள முடியாத அந்த மாணவிகள், உறக்கத்திலிருந்த ஏனைய மாணவிகளையும் எழுப்பிவிட்டு, சத்தம் தொடர்பில் நன்றாகக் காதுகொடுத்துக்கொண்டிருந்தனர். அத்துடன், தங்களது ஜன்னல் கதவுகளுக்கூடாக, வளாகத்தை நோட்டமிட்டனர்.

அப்போது தான், அம்மாணவிகளில் சிலர் அறிந்திருந்த நபர் ஒருவரும் அங்கிருப்பது தெரியவந்துள்ளது. அவர் தான், அந்த கோடீஸ்வர வர்த்தகர். அவர்கள் அனைவரும், வதிவிட வளாகத்திலிருந்து பென்ஷ்களில், மதுபான போத்தல்களை வைத்துக்கொண்டு அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது மணி, நள்ளிரவு பன்னிரண்டரை இருக்கும். தங்களைச் சுதாரித்துக்கொண்ட மாணவிகள், தாங்கள் இருக்கும் அறையின் ஜன்னல் பகுதியிலுள்ள மின்விளக்குகளை ஒளிரச் செய்தனர். அப்போது, அந்த ஜன்னல் வழியாக, தங்களுக்கு கணிதப் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியை, மதுபானம் அருந்திக்கொண்டிருந்தவர்களுக்கு எதையோ எடுத்துக்கொண்டுச் சென்றார். ஜன்னலோரம் நின்றிருந்த மாணவிகளைக் கண்டு திடுக்கிட்ட அந்த ஆசிரியை, ‘ஆ… நீங்கள் இன்னும் தூங்க இல்லையா?’ என்று கேட்டதுமே, ‘இல்லை’ என்று மாணவிகள் பதிலளித்துள்ளனர். ஆனால், அம்மாணவிகளின் மனதில் ஒருவித அச்ச உணர்வும் பற்றிக்கொண்டது. அதனால், உறக்கத்திலிருந்த அனைத்து மாணவிகளையும் அவர்கள் எழுப்பிவிட்டனர். அதற்குப் பின்னர் அங்கு நடந்த சம்பவங்களை, அவ்வதிவிடத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர் இவ்வாறு கூறத் தொடங்கினார்.

‘சந்திமால் சேரைப் பற்றி எங்களுக்குத் தெரியும். அதனால், நாங்கள் பயந்துவிட்டோம். அந்த பயத்தில், சில மாணவிகள் உலறத் தொடங்கினார்கள். எங்களை அந்த சேர் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றார். எங்களுடைய ஆடைகளைக் களைத்தார். எங்களுக்கு அப்படி செய்தார், இப்படி செய்யச் சொன்னார் என அம்மாணவிகளில் சிலர் கூறத்தொடங்கினர். இக்கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்த நாம் எல்லோரும் நன்றாகப் பயந்துவிட்டோம். சரி, என்ன செய்ய, இன்றைக்கு இங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி செய்வோம் என்று எல்லோரும் பேசிக்கொண்டோம். அதன் பின்னர், எமது வதிவிடத்தின் மின்விளக்குகளை எல்லாம் ஒளிரச் செய்துவிட்டு, சத்தமாக சிரித்துப் பேசத் தொடங்கினோம். பாடல்களைப் பாடினோம். சிறிது நேரத்தின் பின்னர், வதிவிட வளாகத்தில் அமர்ந்திருந்த சந்திமால் சேரையும் அவருடன் கூடவே இருந்தவர்களையும் காணவில்லை.

இருப்பினும், எங்களுக்கு உண்டாகியிருந்த பயம் போகவில்லை. அதனால், அங்கிருந்த எங்களது நண்பிகளில் சிலர், வதிவிட சமயலறைக்குச் சென்று, மிளகாய்த் தூளை எடுத்துவந்தனர். இன்னும் சிலர், தங்களது கவராயப் பெட்டிகளிலிருந்த கவராயங்களைக் கையில் எடுத்துக்கொண்டனர். மேலும் சிலர், தும்புத்தடி, பொல்லுகள் தடிகளை ஏந்திக்கொண்டனர். எவரேனும், எமது வதிவிடத்துக்குள் நுழைந்தால், அவர்களைத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் செல்லவே நாம் தீர்மானித்திருந்தோம். இருப்பினும், எங்களது சத்தம் கேட்டு தான் என்னவோ, அங்கிருந்த எவரையும் காணக்கிடைக்கவில்லை. எமது வதிவிடத்தின் தலைமை மேற்பார்வையாளர் பற்றியும் நாம் அப்போது சிந்திக்கவில்லை. காரணம், அவர் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. நாம் எமது பெற்றோருடன் தொலைபேசியில் உரையாட வேண்டுமாயின், அதற்கு அவர் தன்னுடைய உதவியாளர்களை காவலில் வைப்பார். இங்கிருந்து எந்தவொரு விடயமும் வெளியில் செல்லாதவாறே, அவர் எம்மைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார். அதனால், அவரிடம் கூறவோ, உதவி கோரவோ நாம் முயற்சிக்கவில்லை.

வதிவிட வளாகத்தில் இருந்தவர்கள், அங்கிந்து போயிருக்கக் கூடிய வாய்ப்பு இருப்பினும், அவர்கள் அங்கிருக்கலாம் என்ற சந்தேகமும் எமக்குள் ஆட்கொண்டது. சரி, என்ன நடந்தாலும், விடியும் வரையில் உறங்கப்போவதில்லை என்ற முடிவெடுத்தோம். அப்படியே, காத்திருந்தோம். அதிகாலை இரண்டு மணியிருக்கும். வதிவிட வளாகத் தோட்டத்திலிருந்து, டோர்ச் லைட் வெளிச்சமொன்று தென்பட்டது. சிலர், வதிவிடத்தைச் சுற்றி நடந்து திரியும் பாதச் சத்தம் கேட்டது. ‘மெதுவா… மெதுவாகப் போ…’ போன்ற குரல்களும் கேட்டன. இதனால், நாம் இன்னுமின்னும் பயந்துவிட்டோம். அதனால், வதிவிடத்திலிருந்து ஓரிருவர் தப்பிச் சென்று, அருகிலுள்ள வீடொன்றில் உதவி கோருவதாகப் பேசிக்கொண்டோம். அந்த யோசனையை நிறைவேற்ற, எமது நண்பிகள் நால்வர் முன்வந்தனர். இருவர் என்ற அடிப்படையில், அந்த நால்வரும், வதிவிடத்தை விட்டு தப்பிச் சென்றனர். அவர்கள் செல்லும் போது, எமது நண்பிகளின் பெற்றோர்களது தொலைபேசி இலக்கங்களையும் எடுத்துக்கொண்டு தான் தப்பிச் சென்றார்கள்’ என அம்மாணவி கூறினார்.

அவர்கள் அங்கிருந்து தப்பி, எங்கு சென்றார்கள், யாரிடம் உதவி கோரினார்கள் என்ற விடயங்களைச் சொல்ல மறுத்த அந்த மாணவி, மேற்படி வதிவிடம் தொடர்பில் நீண்ட நாட்களாகவே நோட்டமிட்டு வந்த ஒருவரின் உதவியையே நாடியதாகக் கூறினார். தன்னிடம் வந்த மாணவிகளிடம் விவரங்களை அறிந்துகொண்ட அந்த நபர், அதிகாலை 3.30 மணியிருக்கும், தனது அலைபேசியை வழங்கி, பெற்றோர்களுக்கு தகவல் வழங்குமாறு, அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, அவ்வதிவிடத்திலிருந்த அனைத்து மாணவிகளின் பெற்றோர்களுக்கும் அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் தகவலளித்த, வதிவிடத்தைச் சேர்ந்த மாணவியொருவரின் தந்தையொருவர், ‘அதிகாலை 3.45 மணியிருக்கும். எனக்கொரு அழைப்பு வந்தது. ‘அங்கில், நாங்க இந்த வதிவிடத்திலிருந்து பேசுகிறோம். எங்களுக்கு இங்கே பிரச்சினை. தப்பி வந்து தான் பேசுகிறோம். உடனடியாக, ஹொஸ்டலுக்கு வாருங்கள்’ என்று மாணவியொருவர் கூறினார். பின்னர், அம்மாணவிகளுக்கு உதவிய நபரும், என்னிடம் விவரத்தைக் கூறி, உடனடியாக வரச்சொன்னார். அத்துடன், இது சம்பந்தமாக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்துவிட்டு வருமாறும் கூறினார். அப்போது தான், அதற்குள்ளிருக்கும் அனைத்து மாணவிகளையும் பாதுகாப்பாக வெளியேற்ற முடியுமென்று கூறினார்’ என அந்தத் தந்தை சொன்னார்.

அதிகாலை 5.30 மணியிருக்கும், வதிவிடத்திலிருந்த அனைத்து மாணவிகளதும் பெற்றோர், வதிவிட வாயிலுக்கு வந்துவிட்டனர். இருப்பினும், அவர்களில் எவரும் வதிவிடத்துக்குள் நுழைய முடியாத வகையில், வாயிற்கதவு மூடப்பட்டிருந்தது. அதனைத் திறக்குமாறு, பெற்றோர்கள் கூச்சலிட்டனர். இருப்பினும், எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. அதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், வாயிற்கதவை அடித்து உடைக்க முற்பட்டனர். அப்போது, அங்கிருந்த மாணவியொருவரின் சகோதரர் ஒருவர், வதிவிடத்தின் மதிலால் குதித்து உள்ளே சென்று, வாயிற்கதவைத் திறக்க முற்பட்டுள்ளார். அப்போது, அவ்வித்துக்கு விரைந்துள்ள வதிவிடத்தின் பெண் மேற்பார்வையாளர்கள் மூவர், அந்தச் சகோதரரை, தும்புத்தடிகளால் பலமாகத் தாக்கியுள்ளனர்.

அப்போது அங்கு விரைந்த கண்டி பொலிஸார், வதிவிடத்துக்குள் சென்று, வாயிற்கதவைத் திறந்துள்ளதுடன், மாணவிகளையும் பாதுகாப்பாக மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்திமால் கமகே என்ற ஆசிரியரை, கைது செய்து விசாரணை நடத்திய பின்னர், கடந்த 4ஆம் திகதியன்று வியாழக்கிழமை, கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அத்துடன், சந்தேகநபரான ஆசிரியரை, மனநல வைத்தியரொருவரிடம் முன்னிலைப்படுத்தி, அவரது மனநிலை தொடர்பான வைத்திய அறிக்கையைப் பெறவேண்டியுள்ளதாகக் கூறினர். இதற்கு, நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

இதேவேளை, குறித்த கல்வி நிறுவனத்தின் தலைமை மேற்பார்வையாளரும் காசாளரும், நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மேற்படி மாணவிகளை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தினார் என்று கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகரான, நிமல் பீரிஸ் என்பவர், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் தனக்கு முன்கூட்டிய பிணை வழங்குமாறு, கண்டி நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கோரியிருந்த போதிலும், நீதவான் அக்கோரிக்கையை நிராகரித்தார்.

இதற்கிடையே, பல்வேறு பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் 9 மாணவிகளில் அறுவர், கண்டி சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு, வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மூவர், தங்களால் வைத்திய பரிசோதனைக்கு முன்னிலையாக முடியாது என்று அறிவித்துவிட்டனர். இருப்பினும், வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட மாணவிகளில் எவரும், வன்புணர்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும், அவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கே உள்ளாகியுள்ளனர் என்றும் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக, சட்ட வைத்திய அதிகாரியினால், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், இங்கு தங்கியிருந்த 18 மாணவிகளும், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றே, ஊடகங்களில் சில, செய்திகளை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில், குறித்த மாணவிகளின் பெற்றோர்களும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, மாணவிகளுக்கு எதுவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றே பெற்றோர்கள் கூறுகின்றனர். இதனை, வைத்திய பரிசோதனைகளும் உறுதி செய்துள்ளன. ‘இங்கிருந்தவர்கள் பெண் பிள்ளைகள். அவர்கள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்று கூறினால், அவர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாகும். எப்படியோ, பாரியதொரு கொடுமையிலிருந்து எமது பிள்ளைகளை மீட்டுவிட்டோம். இனியும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமலிருக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றே, அம்மாணவிகளின் பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவிகளுக்கான கல்வியறிவை வழங்கி, அவர்கள் மீண்டும் அப்பரீட்சையில் தோன்றி, வெற்றியீட்டுவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காகவே, மேற்படி பயிற்சி நிலையம் அனுமதி பெற்றிருந்தது. இருப்பினும், அங்கு இணைந்துகொண்ட மாணவிகளை தவறான வழிகளில் பயன்படுத்தவே, அங்கிருந்தவர்கள் முயற்சித்துள்ளார்கள். கல்வி என்ற போர்வையில், காம இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சிக்கும் இவ்வாறான ஆசிரியர்களால், ஒட்டுமொத்த ஆசிரியர் சேவையும் இழிவுக்குள்ளாக்கப்படுகிறது. இவ்வாறானவர்கள் மீது, சட்டம் தன் கடமையை முறையாகப் பயன்படுத்தப்படல் வேண்டும். அப்போது தான், இவ்வாறான எண்ணங் கொண்டவர்கள், அத்திசையைப் பற்றித் திரும்பியேனும் பார்க்கமாட்டார்கள்.

எவ்வாறாயினும், மேற்படி வதிவிடத்திலிருந்து மீட்கப்பட்ட மாணவிகளின் மனநிலை, வெகு விரைவில் சீர் செய்யப்படல் வேண்டும். அவர்களால் வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன், இவ்வருடம் டிசெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள பரீட்சைக்கு அவர்கள் தோன்ற வேண்டும். அதற்கான மன வலிமையையும் உற்சாகத்தையும், அம்மாணவிகளின் பெற்றோரோ வழங்க வேண்டும். தாங்கள் எதிர்நோக்கிய பாரியதொரு பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தது மாத்திரமன்றி, அது தொடர்பில் சமூகத்துக்கு வெளிப்படுத்தக்கூடிய தைரியமிக்க இம்மாணவிகள், பரீட்சையிலும் வெற்றியிட்டி, இந்தச் சமூகத்துக்கு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவி வீட்டிலிருந்து ஓட்டம்…!!
Next post தம்பி மனைவி மீது ஒருதலைக் காதல்… செல்போன் டவரில் ஏறி மிரட்டிய சைக்கோ அண்ணன்..!! (வீடியோ)