புர்காவும் நிக்காப்பும் ‘பயங்கரவாத அச்சுறுத்தலும்…!!

Read Time:15 Minute, 39 Second

article_1472101119-12முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகளான புர்காவையும் நிக்காப்பையும் தடை செய்வதற்கான முன்மொழிவொன்று, தேசிய பாதுகாப்புச் சபையால் கருத்திற்கொள்ளப்பட்டதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அது நிராகரிக்கப்பட்டதாகவும் வெளியான செய்தி, பல்வேறு வகையான உணர்வுகளையும் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியொருவரால் அந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதாகவும், சர்வதேச அளவில் அதிகரித்துள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கருத்திற்கொண்டு, இந்த முன்மொழிவை அவர் சமர்ப்பித்ததாகவும், அவ்வாறான தடையொன்று, அரசாங்கத்துக்குப் பாதிப்பாக அமையுமென்பதாலேயே அந்தத் திட்டத்தை பிரதமர் ரணில் நிராகரித்தார் எனவும் தகவல்கள் தெரிவித்திருந்தன.

முஸ்லிம் மக்களுக்கெதிராக இலங்கையிலும் உலகில் பல்வேறு நாடுகளிலும் எழுந்துள்ள எதிர்ப்பலைகளுக்கு மத்தியில், இந்தக் கோரிக்கையென்பது ஆச்சரியமளிக்கும் ஒன்று கிடையாது. உலகமெங்கிலும் அதிகரித்துவரும் கடும்போக்கு வலதுசாரிகளின் ஆதிக்கம் அல்லது பிரபல்யத்தன்மையின் பக்க விளைவுகளாகவே அமைந்துள்ளன. இவ்வாறான தடையொன்று உருவாக்கப்பட வேண்டுமென்று, பிரித்தானியாவில் குரல்கள் அதிகரித்துள்ளன. ஏற்கெனவே பிரான்ஸில், பொது இடங்களில் புர்கா அல்லது நிக்காப் தடை செய்யப்பட்டுள்ளது.

இவற்றை அணியும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, இவற்றை அணிய வலியுறுத்தும் எவருக்கும் அபராதமோ அல்லது ஓராண்டுக்குச் சிறைத்தண்டனையோ வழங்கப்பட முடியும். பெல்ஜியம், நெதர்லாந்து, எகிப்து, சாட் போன்ற நாடுகளிலும் சுவிற்ஸர்லாந்தினதும் இத்தாலியினதும் சில பிராந்தியங்களிலும், புர்காவுக்கும் நிக்காப்புக்கும் முழுமையான தடையோ அல்லது பகுதியளவிலான தடையோ காணப்படுகிறது. இவற்றைப் பின்பற்றித் தான், இலங்கையிலுள்ள கடும்போக்குவாதிகளும், இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். அதன் விளைவாகத்தான், இந்த முன்மொழிவும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தோரில் எத்தனை பேருக்கு, புர்காவுக்கும் நிக்காப்புக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியுமென்பது சந்தேகமே. அதேபோல், சாதாரண பொதுமக்களுக்கு அவ்வாறான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள முடியுமா என்பது கேள்விக்குரியது.

புர்கா என்பது, முகம் உட்பட உடலின் அனைத்துப் பகுதிகளையும் மூடிய ஆடையாகும். பார்ப்பதற்காக, கண் இருக்கும் பகுதியில் வலை போன்றதொரு வடிவம் காணப்படும். நிக்காப் என்பது, உடலின் அனைத்துப் பகுதிகளையும் மூடி, பார்ப்பதற்காக கண்கள் மாத்திரம் வெளியே தெரியும்படியான ஆடையாகும்.

இவற்றின் தடைகளுக்கான கோரிக்கைகளை முன்வைப்போரின் வாதம் என்னவெனில், உலகில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரித்து வருகிறது, எனவே உடலை முழுமையாக மூடும் ஆடைகளின் உதவியுடன், தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பது தான். சாதாரணமாகப் பார்க்கும் போது, இந்த வாதத்தில் தவறிருப்பதாகத் தெரியவில்லைத் தான். ஆனால், இந்தக் கோரிக்கை பற்றி முழுமையாக ஆராய்வது அவசியமானது.

அடுத்த ஆண்டோ அல்லது அதற்கடுத்த ஆண்டோ, இவ்வாறானதொரு முன்மொழிவு மீண்டும் சமர்ப்பிக்கப்படக் கூடும். அப்போது, அதை எதிர்ப்பதற்கான காரணங்கள், அரசாங்கத்துக்கோ அல்லது பிரதமருக்கோ இல்லாமல் போகலாம். அவ்வாறான சூழலில் தான், இந்தத் தடை சரியானதா அல்லது தவறானதா என்பதை ஆராய முயன்றால், அது காலம் பிந்தியதாகப் போய்விடும்.

முதலாவதாக, உலகெங்கிலும் அதிகரித்துவருகின்ற இஸ்லாமிய அடிப்படைவாதத்தில், பெண்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை நோக்க வேண்டும். இஸ்லாமிய ஆயுதக்குழுக்களில் முக்கியமானதான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவில் பெண்கள் பிரிவொன்று காணப்படுகின்றதோடு, அவர்கள் புர்காவை அணிகின்றனர். எனினும் அப்பிரிவு, நேரடியான மோதல்களில் பங்குபற்றியதாகவோ அல்லது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாகவோ உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடையாது.

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் பெண்கள் பிரிவின் முக்கிய பணி, தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலுள்ள பெண்களை ஒடுக்குவதால் அல்லது தங்கள் வழியின்படி நடக்க வைத்தல் ஆகும். ஆகவே, புர்கா அணிந்த பெண்களால் இலங்கையில் தாக்குதல் நடத்தப்படுமென்ற வாதம் முன்வைக்கப்பட்டால், அது ஆதாரமற்ற, சாத்தியப்பாடுகள் குறைவான ஒன்று ஆகும்.

மறுபக்கத்தில், புர்காவை அணிந்துகொண்டு தாக்குதல் நடத்துவதற்கு, ஆண்கள் முயலக்கூடும் என்ற வாதம் முன்வைக்கப்படலாம். ஆனால், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இதுவரை பதிவாகவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவினருக்குப் பெண்கள் மீது ஒருவகையான வெறுப்பு அல்லது தீண்டக்கூடாது என்ற எண்ணம் காணப்படும் நிலையில், பெண்களைப் போல தங்களை மறைத்துக்கொண்டு, அக்குழுவோ அல்லது அக்குழுவைப் போன்ற கொள்கைகளையுடைய ஏனைய குழுக்களோ தாக்குதலில் ஈடுபடுமென்பது, யதார்த்தத்துக்குப் புறம்பான எதிர்பார்ப்பாகும்.

இந்நிலையில், புர்கா அல்லது நிக்காப்பினால் விசேடமான ஆபத்துகள் எவையும் இல்லையென்ற நிலையில், புர்கா அல்லது நிக்காப்பை விரும்பி அணியும் ஒரு பெண்ணுக்கு, அதை அணிவதற்கான உரிமையை மறுப்பதென்பது, அவரது அடிப்படையான மனித உரிமையை மீறுவது போன்றதாகும் என்ற வாதம் உள்ளது. பிக்கினிகளை அணிவதற்கு ஒருவருக்கு எவ்வாறு உரிமையுள்ளதோ, அதேபோன்று தனது உடலை மூடுவதற்கான உரிமையும் ஒருவருக்கு உள்ளது என்பது, அந்த வாதம். அந்த வாதத்திலும் ஓரளவு நியாயமுள்ளது.

இவ்வாறான காரணங்கள், புர்கா அல்லது நிக்காப் மீதான தடை என்பது, தவறான ஒன்று என்ற எண்ணத்தை விதைக்கின்றன.

ஆனால் மறுபக்க வாதங்களையும் ஆராய்வது அவசியமானது. அதில் முக்கியமான வாதம் என்னவெனில், வங்கிகளிலோ அல்லது அலுவலகங்களிலோ தலைக்கவசத்துடன் அல்லது முகத்தை மூடிக்கொண்டு செல்வது தடையாகும். அவ்வாறான நிலையில், முகத்தை மூடும் ஆடைகளைத் தடை செய்யும் கோரிக்கையில் என்ன தவறு என்பதாகும். அதேபோல், அமெரிக்காவின் சில மாநிலங்களிலும் உலகில் பல நாடுகளிலும், முகமூடிகளைப் பொது இடத்தில் அணிவதற்கான தடை (விசேட சந்தர்ப்பங்களில் தவிர) காணப்படுகிறது. அதற்கான தனியான சட்டங்களே காணப்படுகின்றன. முகமூடியே தடை என்றால், முகத்தை மூடும் ஆடைகளுக்கு ஏன் தடை விதிக்க முடியாது என்பது அடுத்த கேள்வி.

இனமொன்றின் கலாசார ஆடைகளையும் விசேடமான சில சந்தர்ப்பங்களையும் ஒப்பிட முடியாது என்ற போதிலும், மேற்கூறப்பட்ட வாதங்களிலும் நியாயம் காணப்படுகிறது. ஆனாலும் கூட, சட்டரீதியாகத் தடை விதிப்பதென்பது, எந்தளவுக்குப் பொருத்தமானது என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால், தமிழ்ப் பெண்கள் அணியும் சேலையைக் கூட, முகத்தை மூடும் ஆடையாக மாற்ற முடியும். சாதாரணமாகச் சேலை அணிந்திருக்கும் பெண்ணொருவர், விரும்பிய உடனேயே, முகத்தை மூடி, தனது அடையாளத்தை மறைக்க முடியும். இந்நிலையில், சேலைகளையும் அதற்காகத் தடை செய்ய முடியுமா?

இதற்காக, புர்காவையும் நிக்காப்பையும் வரவேற்றுக் கொண்டாட வேண்டிய தேவையும் அவசியமும் கிடையாது. முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்புக்கெதிராக, முஸ்லிம்களையும் புர்காவையும் நிக்காப்பையும் விரும்பி அணியும் அவர்களின் தெரிவையும் நியாயப்படுத்த வேண்டிய தேவைக்காக, அவ்வாடைகளை உயர்ந்ததொன்றாகவோ அல்லது விடுதலைச் சின்னமாகவோ மாற்றும் தவறையும் செய்யக்கூடாது. இந்தத் தவறை, மேற்கத்தேய ஊடகங்கள் அதிகமாகச் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.

அமெரிக்கா சார்பாக ஹிஜாப் (நிக்காப்ஃபுர்காவை விட வேறானது. முகம் மாத்திரம் வெளியே தெரியும்படியான ஆடை) அணிந்துகொண்டு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய முதலாவது பெண்ணான இப்திஹாஜ் மொஹமட்டை, உலகெங்கிலுமுள்ள ஊடகங்கள் போற்றிக் கொண்டாடின. அவர், வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்ற, அந்தக் கொண்டாட்டங்கள் அதிகரித்தன. ஆனால், அமெரிக்கா சார்பாக 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் பங்குபற்றித் தங்கப்பதக்கம் வென்ற தலிலா மொஹமட்டை, ஊடகங்கள் பெரிதாகக் கவனித்திருக்கவில்லை. இதற்குக் காரணம், அவர் ஹிஜாப் அணிவதில்லை என்பதால் ஆகும். அமெரிக்காவிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர், சாதாரண நிலைமைகளில் ஹிஜாப் அணிவதில்லை என்ற நிலையில், ஹிஜாப் அணியும் ஒருவரை மாத்திரம் போற்றிக் கொண்டாடுதல், அந்த ஆடைக்குப் பின்னாலுள்ள கலாசாரக் கொடுமைகளை மறைப்பது போன்றாகும்.

இன்னமும் பல நாடுகளில், ஹிஜாப், நிக்காப், புர்கா அணியாத பெண்கள், தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கொலை கூடச் செய்யப்படுகிறார்கள். அதனால், இவ்வாறான ஆடைகளை அணிபவர்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர், நேரடியான அச்சத்தின் காரணமாகவே இவற்றை அணிகின்றனர். நேரடியான அச்சம், அச்சுறுத்தல் இல்லாமல் அணிபவர்கள் கூட, சமூக அழுத்தத்தின் காரணமாக அணிகிறார்கள். சமூகம் விரும்பும் ஆடைகளை அணியாவிட்டால், சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்படுவர் என்ற அச்சம் உள்ள நிலையில், அவற்றை அணிகின்றனர். இந்தியாவிலும் இலங்கையின் சில பகுதிகளிலும், தமிழ்ப் பெண்கள், இன்னமும் கூட மேற்கத்தேய ஆடைகளை அணியாமல் இருப்பதற்கும் இதே சமூக அழுத்தமே காரணமாக இருக்கிறது.

இவற்றுக்கு மத்தியில், கலாசார ஆடைகளை (புர்கா, ஹிஜாப், நிக்காப், சேலை) விரும்பி அணியும் பெண்களின் தெரிவை மதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அந்தத் தெரிவைத் தடுக்கும் முகமாக, அவற்றுக்குத் தடை விதிப்பது, ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம் கிடையாது. அதற்காக, கலாசார ஆடைகளை அணியும் நிர்ப்பந்தம் காணப்படும் பல சமூகங்கள் உள்ள நிலையில், அக்கலாசார ஆடைகளைப் போற்றிக் கொண்டாடுவதும், நீண்டகால நோக்கில் ஆரோக்கிய சமூகமொன்றைக் கட்டியெழுப்ப உதவாது என்பதே நிதர்சனமாகும். உலகிலுள்ள கடைசிப் பெண்ணும், தான் விரும்பிய ஆடையை அணிவதற்கான தெரிவை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, அரசாங்கங்களும் சிவில் சமூக அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, இத்தடைகள் என்பன, அடிப்படைவாதக் குழுக்களுக்கு நன்மைபயப்பனவாகவே அமைந்துபோகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி மாணவியை தனியாக தவிக்க விட்டு போனால் இப்படித்தான் நடக்கும் | அணைத்து ஆண்களும் பாருங்கள்..!! வீடியோ
Next post வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை இதை வைத்தே கண்டுபிடித்திடலாம்..!!