By 2 September 2016 0 Comments

இரகசியங்களை ஜனாதிபதி வெளியிடாமல் இருக்கலாமா?

article_1472529983-aubeஎப்போதும் தமது எதிரிகளுக்கு ஆயுதம் வழங்காது பேசுவதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 19ஆம் திகதி மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் கூட்டரசாங்கத்துக்கு ஒரு வருடம் பூர்த்தியாவதையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது வசமாக மாட்டிக் கொண்டார்.

கூட்டு எதிர்க்கட்சி எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை நேரடியாகக் குறிப்பிடாமல் அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, சிலர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாகக் கூறியிருப்பதாகவும் அவ்வாறு அவர்கள் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தால் அவர்களைப் பற்றி தம்மிடம் இருக்கும் பல இரகசியங்களை வெளியிட்டு அவர்களை அரசியல் அரங்கிலிருந்து துடைத்தெறிவதாகக் கூறினார்.இந்தக் கூற்று, இப்போது பல அரசியல்வாதிகள், மேடைகளில் முழங்குவதற்குப் புதிய தலையங்கம் ஒன்றை வழங்கியிருக்கிறது. ஊடகங்களும் அதனை ஒரு புதிய கருப் பொருளாக எடுத்துக் கொண்டுள்ளன. குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலிருந்து ஊழலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் மக்கள் விடுதலை முன்னணி, அந்தக் கூற்றால் ஆவேசமடைந்திருக்கிறது.

ஜனாதிபதியிடம் இருப்பது மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப இரகசியங்களாக இருந்தால், அவற்றை அறிந்து கொள்ள நாட்டு மக்களுக்கு எவ்வித அவசியமும் இல்லை என்றும், ஆனால் அவை அரசியல் சார்ந்தவையாக இருந்தால் மஹிந்த அணியினர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் வரை காத்திருக்காமல், ஜனாதிபதி அவற்றை உடனடியாக வெளியிட வேண்டும் என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் அக்கட்சியின் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அமைப்பாளர் வசந்த சமரசிங்கவும் கூறியிருக்கின்றனர்.

புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டால் இரகசியங்களை வெளியிடுவதாகக் கூறுவதன் மூலம் புதிய கட்சி ஆரம்பிக்கப்படாவிட்டால் அவை வெளியிடப்பட மாட்டா என்பதே அர்த்தம் எனக் கூறிய, ஜே.வி.பியின் தலைவர் புதிய கட்சி ஆரம்பிக்கப்படாவிட்டால் அவை நாட்டுக்கு முக்கியமில்லாமல் போவது எவ்வாறு எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையொத்த ஒரு கருத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்,

2014 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் வெளியிட்டு இருந்தமையினால் மைத்திரிபாலவின் இக்கூற்றுக்கு மேலும் வலுச் சேர்க்கப்பட்டுள்ளது. அந்நாட்களில் எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதற்காக தமது அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்வோர்களைப் பற்றிக் குறிப்பிட்ட மஹிந்த, அவ்வாறு செல்வோர் தொடர்பான ‘பைல்கள்’ தம்மிடம் இருப்பதாகக் கூறியிருந்தார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஊழல்களை மையமாக வைத்துத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் மஹிந்தவைத் தாக்க இது பெரும் ஆயுதமாக மாறியது. மஹிந்த அது வரை ஊழல்ப் பேர்வழிகளை பாதுகாத்து வந்தமை இந்தக் கூற்றின் மூலம் தெரிய வருவதாகக் கூறிய மைத்திரியின் ஆதரவாளர்கள், அந்தப் ‘பைல்களை’ வெளியிடுமாறு மஹிந்தவை வற்புறுத்தினர்.

ஆனால், இம்முறை இரகசியங்களைப் பற்றி மைத்திரி வெளியிட்ட கருத்தைப் பற்றி மஹிந்த அணியினர் அவ்வளவாக அவட்டிக் கொள்ள விரும்பவில்லை. அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிகளின் 19 ஆவது மாநாட்டில் உரையாற்றும் போது, மைத்திரியின் கூற்றைப் பற்றிக் குறிப்பிட்ட முன்னாள் ஜனாதிபதி, மிரட்டல்களால் புதிய கட்சி உருவாவதைத் நிறுத்த முடியாது என்றும் மிரட்டல்கள் தமக்கு புதிய தெம்பை ஊட்டுகின்றது என்றும் கூறியிருந்தார்.

அதனைவிட அவர், மைத்திரியின் கூற்றைப் பற்றி எதனையும் கூறவில்லை. அதைப் பற்றிக் குறிப்பிடுவதன் மூலம் ‘பைல்களை’ப் பற்றித் தாம் வெளியிட்ட கருத்தை விமர்சிக்க மீண்டும் தமது எதிரிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் நினைத்திருக்கலாம். அதேபோல் அவ்வாறு இரகசியங்கள் இருந்தால் வெளியிடுமாறு மைத்திரிக்கு சவால் விடுக்காமல் இருக்கவும் மஹிந்த கவனமாக இருந்துவிட்டார். அவ்வாறு இரகசியங்கள் இருப்பின் வெளியிடுமாறு கூறிய மஹிந்த அணியின் ஒரே உறுப்பினர் பிவிதுறு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில் மட்டுமே.

ஜனாதிபதியின் கூற்றும் அவர் அதனை வெளியிடும் போது அவரிடமிருந்து காணப்பட்ட ஆவேசமும், ஸ்ரீ.ல.சு.கவிலிருந்து சிலர் பிரிந்து சென்று புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதாக மஹிந்த அணியினர் வெளியிடும் கருத்துக்களால் அவர் அச்சமடைந்துள்ளாரா எனச் சந்தேகம் எழுகிறது. அவ்வாறு புதிய கட்சி அமைக்கப்பட்டால் ஸ்ரீ.ல.சு.கவுக்குள் தமது நிலை என்னவாகும் என, ஜனாதிபதி நினைக்கிறார் எனவும் சிலர் வாதிடலாம்.

நாடாளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் மஹிந்த அணியை விட மைத்திரி அணி சற்று பலம்வாய்ந்தாகத் தெரிகிறது. ஆனால் உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீ.ல.சு.கவின் பொது வாக்காளர்கள் மத்தியிலும் எவருக்கு அதிகம் ஆதரவு இருக்கிறது என்பது தெளிவாக இல்லை. பல பகுதிகளில் மஹிந்தவின் ஆதரவாளர்களான

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாகவே பத்திரிகையாளர் மாநாடுகளை நடத்தி மைத்திரியை விமர்சிக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடமிருந்து மஹிந்தவுக்கு ஸ்ரீ.ல.சு.கவின் அதிகாரம் கைமாறியதைப் போல் மஹிந்தவிடமிருந்து மைத்திரிக்கு அக்கட்சியின் அதிகாரம் கைமாறவில்லை. சந்திரிகா ஜனாதிபதியாக இருக்கும் போதே அவருக்கும் மஹிந்தவுக்கும் இடையே பனிப் போரொன்று நிலவி வந்தது. அப்போது கட்சியின் பெரும்பாலானவர்கள் நாட்டிலும் கட்சியிலும் அதிகாரத்தை தம்கையில் வைத்திருந்த சந்திரிகாவையே ஆதரித்தனர்.

ஆனால், 2005 ஆம் ஆண்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்தவை ஏற்றுக் கொள்ள அப்போதிருந்த சில நிலைமைகள் சந்திரிகாவை நிர்ப்பந்தித்தன. ஜனாதிபதித் தேர்தலின் போது முழு கட்சியுமே மஹிந்தவை மனப்பூர்வமாக ஆதரித்தது. ஏனெனில், அது அதிகாரம் தொடர்பான விடயமாக இருந்தது.

ஜனாதிபதியானதன் பின்னர் கட்சியின் நிகரில்லாத் தலைவராக மஹிந்த மாறிவிட்டார். முன்னர் குறிப்பிடப்பட்ட பனிப் போரின் போது சந்திரிகாவை ஆதரித்தவர்களும் அவரைப் புறக்கணித்துவிட்டு கட்சி யாப்பையும் மாற்றி, கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்ற மஹிந்த மேற்கொண்ட நடவடிக்கையின் போது மஹிந்தவின் பக்கம் சாய்ந்தனர்.

ஆனால், 2014-15 ஆம் ஆண்டுகளில் அவ்வாறு நடைபெறவில்லை. மைத்திரி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது ஸ்ரீ.ல.சு.க முழுவதும் அவருக்கு எதிராக செயற்பட்டது. அவர் பிரதானமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளாலேயே ஜனாதிபதியானார். ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர், ஸ்ரீ.ல.சு.க தலைவராக நிமிக்கப்பட்ட போதிலும், மஹிந்த தொடர்ந்தும் அவருக்கு எதிராக அரசியலில் ஈடுபட்டமையினால் கட்சியில் பலர் தொடர்ந்தும் மஹிந்தவின் ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர்.

இதன் காரணமாக, உண்மையிலேயே கட்சிக்குள் பலம் யாரிடம் இருக்கிறது என்பது தெளிவில்லாத விடயமாகவே இருக்கிறது. மஹிந்த, நாடு முழுவதிலும் கூட்டங்களை நடத்திக் மைத்திரியை விமர்சித்துக் கொண்டு இருக்கிறார். அந்தக் கூட்டங்களுக்கு பெருமளவில் மக்கள் வருகின்றனர். அதேவேளை, மஹிந்தவின் ஆதரவாளர்கள் ‘மஹிந்தவுடன் எழுந்;திடுவோம்’ என்ற கோஷத்துடனும் பெரும் பிரசாரத்தோடும் நடத்திய கூட்டங்கள் எதிர்பார்த்த பயனை அளிக்கவில்லை. அந்தக் கூட்டங்களை அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ.ல.சு.க தோல்வியடைந்தது. இதில் விந்தையான விடயம் என்னவென்றால், அந்தத் தோல்வி கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தோல்வியாகவன்றி, பிரதமர் பதவிக்காகப் போட்டியிட்ட மஹிந்தவின் தோல்வியாகவே கருதப்படுகிறது.

மறுபுறத்தில், அத்தேர்தல் மஹிந்த – மைத்திரி குழுக்களிடையிலான தேர்தல் அல்லாததால் உண்மையிலேயே கட்சிக்குள் அதிக பலம் கொண்டவர் மஹிந்தவா, மைத்திரியா, என்பதை அறிந்து கொள்ள அத்தேர்தலும் உதவவில்லை. இந்த விடயத்தில் ஸ்ரீ.ல.சு.க பெற்ற வாக்குகளுக்கு மஹிந்த உரிமை கோருவாரேயானால் ஜனாதிபதி தேர்தலில் பெற்றதை விட பத்து லட்சம் வாக்குகளை குறைவாக பெற்றதன் பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டியிருக்கும்.

இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளும் பொது, ஸ்ரீ.ல.சு.கவில் உண்மையிலேயே அதிக பலம் உள்ளவர் மஹிந்தவா, மைத்திரியா, என்பதை கண்டறிய முடியாது. எனவே, மஹிந்தவின் தலைமையில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுவதையிட்டு மைத்திரிபால குழப்பமடைந்தாலும் அது நியாயம்தான்.

எவருமே எதிர்பார்க்காத சந்தர்ப்பங்களில் எவருமே எதிர்பாரா விடயத்தின் ஊடாக மஹிந்த அணியின் மீது அரசியல் ரீதியாகப் பல தாக்குதல்களை, மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளார். பொதுத் தேர்தலின் போது தமது கட்சியே தோல்வியடையும் வகையில் சில அறிக்கைகளை வெளியிட்டமை மற்றும் அத்தேர்தல் நெருங்கும் வரை காத்திருந்து ஸ்ரீ.ல.சு.கவினதும் ஐ.ம.சு.கூவினதும் பொதுச் செயலாளர்களை அப்பதவிகளிலிருந்து நீக்கியமை, அவரது அவ்வாறான கெரில்லாத் தாக்குதல்களாகும்.

எனவே இரகசியங்கள் தொடர்பான அவரது புதிய கூற்றும், கட்சி மாநாட்டைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட கருத்தாகவும் இருக்கக்கூடும். அதாவது இது, மஹிந்த அணி ஸ்ரீ.ல.சு.கவிலிருந்து விலகிச் சென்று தனிக் கட்சி ஆரம்பிக்கட்டும் என்றே மேற்கொள்ளப்பட்ட கூற்றாகவும் இருக்கலாம். இவ்வாறு கூறியபோது மஹிந்த அதனை சவாலாக ஏற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவர், இரகசியங்கள் வெளிவரும் எனப் பயந்து தனிக் கட்சி அமைக்க முன்வரவில்லை என வாதிடலாம்.

மஹிந்த இதனைச் சவாலாக ஏற்பாரா என்பது இன்னமும் தெளிவாக தெரியவில்லை. மிரட்டல்களால் புதிய கட்சி அமைப்பதை தடுக்க முடியாது என்றும் இது போன்ற கூற்றுக்களால் தாம் மேலும் தெம்பூட்டப்படுவதாகவும் அவர் கூறிய போதிலும், புதிய கட்சி பற்றிய மஹிந்த அணியினரின் நிலைப்பாடு அவ்வளவாக உறுதியாகவும் இல்லை.

இரகசியங்கள் பற்றிய மைத்திரியின் கூற்று, மஹிந்தவை ஆத்திரமூட்டி புதிய கட்சி அமைப்பதற்கான தூண்டுதலோ என்று சந்தேகிக்க மற்றுமொரு காரணம் என்னவென்றால், எதிர்வரும் நான்காம் திகதி நடைபெறவிருக்கும் கட்சியின் 65ஆவது மாநாட்டுக்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்க, அவர் மஹிந்த அணியின் 13 அமைப்பாளர்களைப் பதவிகளிலிருந்து நீக்கியமையாகும். ஒரு வகையில் இது மாநாட்டுக்கு முன்னர் கட்சிக்குள் தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் மேற்கொண்ட நடவடிக்கையாகக் கருதலாம். அதேவேளை, மாநாட்டுக்கு முன்னர் மஹிந்த அணியினரை ஆத்திரமூட்டியும் அசௌகரியத்துக்குள்ளாக்கியும் அவர்கள் மாநாட்டுக்கு வராமல் செய்வதற்கு மேற்கொண்ட நடவடிக்கையாகவும் கருதலாம். இரகசியங்களை வெளியிடுவதாக மிரட்டுவது, ஒரு வகையில் இலங்கை அரசியலில் புதிய விடயமுமல்ல. இலங்கைக்கு பெருமளவில் ஹெரொய்ன் கொண்டு வரும் 11 வர்த்தகர்கள் இருப்பதாகவும் அவர்களில் 9 பேர் முஸ்லிம்கள் என்றும் விரைவில் தாம் அவர்களது பெயர்களை வெளியிடுவதாகவும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் பலகொடஅத்தே ஞானசார தேரர், 2012ஆம் ஆண்டு கூறினார். ஆனால் அவர் இன்னமும் அந்த இரகசியத்தை வெளியிடவில்லை.

ஜனாதிபதி, இரகசியங்களைப் பற்றிக் கூறி மூன்று நாட்களில் அவருக்கு அவ்விரகசியங்களை வெளியிடுமாறு கூறிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர திஸாநாயக்கவும் அதைப் போன்றதோர் மிரட்டல் கருத்தை வெளியிட்டார். மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மாபெரும் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தடுக்கும் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் பெயர்களை தாம் வெளியிடத் தயார் என அவர் கூறினார். அந்தப் பெயர்களை அவருக்குத் தெரியும் என்றால், வெளியிடத் தயார் என்று கூறிக் கொண்டிருக்காது வெளியிட வேண்டியது தானே. அந்தப் பெயர்களை அவர் வெளியிடாவிட்டால், மஹிந்தவும் மைத்திரியும் செ;யததைப் போல் அவரும் ஆட்களை மிரட்டுகிறார் என்றும் குற்றவாளிகளை பாதுகாக்கிறார் என்றும் கூறலாம்.

மற்றவர்கள் கூறுவதை விட இரகசியங்களை வெளியிடுவதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துப் பாரதூரமாகும். அவர் அவற்றை வெளியிடுவதாக இருந்தால் அதற்குச்p சிறந்த சந்தர்ப்பம் எதிர்வரும் நான்காம்; திகதி நடைபெறும் கட்சியின் மாநாடாகும்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..Post a Comment

Protected by WP Anti Spam