ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையிலிருந்து, புலிகளை காப்பாறிய ராஜீவ் காந்தி!! : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -89) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

Read Time:28 Minute, 10 Second

timthumb‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்த போது, ஜுன் 7ம் திகதி இந்திய விமானங்கள் யாழ்ப்பாண வான்பரப்பில் திடீரென்று தோன்றின.

எங்கும் ஒரே பரபரப்பு. மக்கள் பதுங்கிக் கொள்ள பங்கர்களை நாடி ஓடிக்கொண்டிருந்தார்கள். இலங்கை விமானங்கள்தான் குண்டு போட வருகின்றன எங்கும் ஒரே கிலி சூழ்ந்தது.

இந்த வான் நாடகம் அரங்கேறுவதற்கு முன்னர் இலங்கை. இந்திய அரசுக்கிடையே நடைபெற்ற இராஜதந்திர நாடகங்களைப் பற்றிச் சொல்லியேயாக வேண்டும்.

பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் ஒரு விதமாக இருக்கும். திரைமறைவில் நடக்கும் சம்பவங்கள் வேறுவிதமாக இருக்கும். உண்மையில் அவைதான் சுவாரசியமானவை.

முன்கூட்டியே சில முடிவுகளை செய்துவிட்டு அதற்கேற்ப காய் நகர்த்துவதும், நாடகம் ஆடுவதும் இராஜதந்திரம் என்ற பெயருக்குள் அடக்கப்பட்டுவிடுகின்றன.

‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கை, இந்திய அரசுகளுக்கிடையே நடைபெற்ற அராஜதந்திர நாடகத்தின் சில காட்சிகளைப் பார்ப்போம்.

‘ஒப்பரேசன் லிபரேசன்;’ ஆரம்பித்தது மே 26ம் திகதி. இந்தியாவின் விருப்பத்துக்கு முற்றிலும் மாறான நடவடிக்கையாக அது அமைந்தது.

புலிகள் இயக்கத்தினர் இராணுவரீதியான அப்போதிருந்த பலத்தை இழப்பதை இந்தியா விரும்பவில்லை. ஏனெனில் போராளிகள் பலவீனமாகிவிட்டால் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை ஒரு தீர்வுக்கு உடன்பட வைக்க முடியாது என்பது இந்தியாவின் நம்பிக்கை.

கொழும்பு குண்டுவெடிப்புக்களுக்கு இந்தியாவின் ‘றோ’ உளவுப்பிரிவு புலிகள் இயக்கத்தினரையும், ஈரோஸ் இயக்கத்தினரையும் ஊக்குவித்தமையும் ஜே.ஆர். அரசுக்கு காலடியிலும் ஆபத்து வந்துவிட்டதை உணர்த்துவதற்காகவே.

ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை பேச்சுவார்த்தை மேசையில் நியாயமாக நடந்து கொள்ள வைக்கவேண்டுமானால், யுத்தத்தில் வெல்ல முடியாது என்ற நினைப்பை அவரிடம் ஏற்படுத்தவேண்டும்.

பேச்சுவார்த்தைக்கான இந்தியாவின் மூல உபாயம் அதுதான். ஆனால், ஜே.ஆர். ஜெயவர்த்தனாவோ நேரடியாக மோதிப்பார்க்கலாம் என்ற முடிவோடு ‘ஒப்பரேசன் லிபரேசன்’ நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார்.

மே 27ம் திகதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா பின்வருமாறு அறிவித்தார்.

“அவர்கள் வென்றாலும் சரி, நாங்கள் வென்றாலும் சரி. இறுதிவரை போராடிப்பார்த்துவிடலாம்.”

ஜே.ஆர். விடுத்த அறிவிப்பு இந்திய அரசுக்கு அதிர்ச்சியாகிப் போய்விட்டது. அதுவரை இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியிடம் ஜே.ஆர். தான் ஒரு நல்ல பிள்ளையாகவே நடித்துக் கொண்டிருந்தார்.

ராஜீவ் காந்தியும் ஜே.ஆர். விட்டுக்கொடுத்து கீழே இறங்கிவருவார் என்று ஓரளவு நம்பியிருக்கக்கூடும்.

சகல நம்பிக்கைகளும் ஜே.ஆரின் நடவடிக்கையால் தகர்ந்துபோக இந்தியா கோபத்தின் உச்சிக்கே போய்விட்டது.

ராஜீவின் கடிதம்

ராஜீவ் காந்தியிடம் இருந்து வநடத கடிதத்துடன் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் ஜே.என். திக் ஷித் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

ஜே.என்.திக் ஷித் தொடர்பாக கொழும்பில் அதிருப்தி நிலவிய காலகட்டம் அது.

திக் ஷித் ஒரு திமிர் பிடித்தவர் என்றே கொழும்பில் விமர்சிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் குழுவினர் இலங்கை வந்து விளையாடிய போது திக்~pத் அந்தப் போட்டியைக் காணச் சென்றிருந்தார். அப்போது திக்ஷித்த்தை நோக்கி சிலர் வசைமாரி பொழிந்தனர். கிண்டலடித்தனர்.

அதே திக் ஷித்த்தான் ஜே.ஆரை சந்திக்கவும், பாரதப்பிரமர் யின் கடிதத்தோடு சென்றிருந்தார்.

கடிதத்தை வாங்கிப்படித்தார் ஜே.ஆர்.

ஜே.ஆரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் திக் ஷித் . கடிதவாசகங்கள் ஜே.ஆரின முகத்தில் இறுக்கத்தைக் கொண்டு வந்தன.

**கடிதத்தில் காணப்பட்ட முக்கிய விடயங்கள் இவைதான்.

1. தங்களுடைய போக்கு அதிருப்தியையும், வருத்தத்தையும் தருகிறது.

2. 1983 முதல் ஆயிரக்கணக்காண மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

3. யாழ் குடாநாட்டில் தங்கள் அரசாங்கத்தால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தாக்குதல்கள் எமக்கிடையே உள்ள உடன்பாடுகளின் அடிப்படைகளையே சிதைத்து விடுகிறது.

4. இனக்கொலையை இந்தியா வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதில்லை.

5. எமது அரசியல் போக்கினை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தயவு செய்து எம்மை தள்ளிவிடாதீர்கள்.

இக்கடிதத்தை அனுப்பிவைத்ததோடு நில்லாமல் மே28ம் திகதி புதுடில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ராஜீவ் காந்தி.

வழமைக்கு மாறாக ராஜீவ் காந்தி இலங்கை அரசுமீது காட்டமாகவே கருத்து வெளியிட்டார். ஜே.ஆர் தன்னை ஏமாற்ற நினைக்கிறார் என்று ராஜீவ் காந்தி சுடாகி விட்டதாகவே தெரிந்தது.

ராஜீவ் காந்தி சொன்னது இதுதான்.

“இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கை மேலும் உயிரழிவுகளுக்கே வழிவகுக்கும். கடந்த சில நாட்களுக்குள் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். தமிழ் போராளிகளை ஒழித்துக் கட்டுவதாகக்கூ றிக்கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையால் எண்ணற்ற அப்பாவிப் பொதுமக்கள் பலியாக நேர்ந்துள்ளது. இராணுவரீதியில் ஒரு முடிவினைக் காணவே இலங்கை அரசாங்கம் காலம் கடத்துகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.”

எம்.ஜி.ஆர். சென்றார்

தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அப்போது சுகவீனம் அடைந்திருந்தார். அமெரிக்காவிற்குச் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு வந்திருந்தார்.

24 மணிநேரமும் அவரது உடல்நிலையை கண்காணிக்க டாக்டர்கள் குழுவொன்றே வீட்டில் இருந்தது. விமானப் பயணங்கள் அவரது உடல் நலத்துக்கு கேடாகலாம் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர்.

அப்படியிருந்தும் யாழ்ப்பாண நிலைகுறித்து பாரதப் பிரதமருடன் விவாதிக்க புது டில்லிக்கு புறப்பட்டுச்சென்றார் எம்.ஜி.ஆர்.

பிரபாகரனுடன் பாசமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். ராஜீவ் காந்தியும் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை முழுவதுமாக நம்பியிருந்தார்.

பொதுத் தேர்தலும் சில ஆண்டுகளில் வரவிருந்தமையால் தமிழக மக்களை திருப்தி செய்யவேண்டிய அவசியமும் ராஜீவ் காந்திக்கு இருந்தது.

எல்லாக் காரணங்களும் ஒன்று சேர்த்து இலங்கை மீதான கடும் நடவடிக்கைக்கு பாரதப் பிரதமரைத் தள்ளிவிட்டன.

இலங்கை அரசுக்கு பாடம் புகட்டுவது என்று இந்தியா முடிவு செய்து விட்டது. அதற்கிடையே ஒரு முறை ஜே.ஆருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் ராஜீவ் காந்தி

ஜே.ஆரிடம் ஒரு குணம். கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார்.

வடமராட்சிப் போர் நிலவரம் தமக்குச் சார்பாக மாறிக்கொண்டிருந்ததும் ஜே.ஆரின் பிடிவாதக் குணத்துக்கு கொம்பு சீவிவிட்டிருந்தது.

ராஜீவ் காந்தியிடம் ஜே.ஆர் தொலைபேசியில் சொன்ன வார்த்தை: “யாழ்ப்பாணத்திற்கு எது அவசியமோ, அதனையே செய்து கொண்டிருக்கிறேன்.” என்று சொல்லி விட்டார் ஜே.ஆர்.

சுருக்கமாகச் சொன்னால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி விட்டார் ஜே.ஆர்.

நிதானமான நடவடிக்கை

எனவே, இலங்கை அரசின் கையை அதன் முதுகுப்புறமாக வளைத்து திருகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்தியா முடிவு செய்தது.

இந்திய ஒரு ஜனநாயக நாடு. அணிசேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதானமான நாடு. உலக சமாதானத்திறகாக பாடுபட்ட நேரு பரம்பரையின் வாரிசு ராஜீவ்காந்தி.

இலங்கை போன்றஒரு சிறிய நாட்டை இநதியா மிரட்டுகிறது. இலங்கையை ஆக்கிரமிக்க நினைக்கிறது. பக்கத்து நாடுகளை விழுங்கத் துடிக்கிறது என்பது போன்ற அபிப்பிராயங்கள் ஏற்பட்டுவிடக்கூடாதல்லவா.

சர்வதேச அரங்கில் தனது நடவடிக்கை நியாயமானது, மனிதாபிமானது? வேறு வழியில்லாத நிலையில் மேற்கொள்ளப்படுவது என்பதை எடுத்துக்காட்ட வேண்டாமா. வேண்டும் தான்.

அதனை மிகவும் திறம்பட செய்யத் தொடங்கியது.

முதற்கட்டம் யாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கு உணவு அனுப்புவது.

இந்தியா நனைத்திருந்தால் உடனடியாகவே தனது விமானங்களை அனுப்பி யாழ் குடாநாட்டில் உணவு போட்டிருக்கலாம். இலங்கை

அரசின் அனுமதியைக் கேட்காமலேயே இந்திய யுத்த விமானங்கள் இலங்கை வான்பரப்புக்குள் சீறிக்கொண்டு பாய்ந்து வந்திருக்கலாம்.

ஆனால், இந்தியா அப்படிச் செய்யவில்லை. திட்டமிட்டு நிதானமாக ஒவ்வோர் அடியையும் எடுத்துவைத்தது.

இரண்டாவது கடிதம்
1987 ஜுன் 1ம் திகதி இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஏ.சி.எஸ் ஹமீத்தை சந்தித்தார் இந்தியத்தூதர் திக் ஷித்.

புன்னகையுடன் வரவேற்றார் ஹமீத். இருவரும் கைகுலுக்கிக் கொண்டார்கள். கடிதம் ஒன்றை ஹமீத்திடம் கையளித்தார் திக் ஷித்.
இராஜதந்திர, மனஜதாபிமான ரீதியான வாசகங்களோடு கடிதம் அமைந்திருந்தது.

அந்தக் கடிதத்தில் காணப்பட்ட வாசகங்கள் இவைதான்:

“தமது சொந்த அரசாங்கமே விதித்துள்ள பொருளாதார தடை காணமாக யாழ்ப்பாண மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ‘முடிவுவரை போர்’ என்ற அடிப்படையில் அம்மக்கள் மீது இராணுவத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன வன்செயல்களால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். பாதுகாப்பற்ற அப்பாவி பொதுமக்கள் விமானக்குண்டு வீச்சுக்களாலும், ஆட்டிலறிச் n~ல் வீச்சுக்களாலும் நூற்றுக்கணக்கில் பலியாகி வருகின்றனர்.

செய்தித் தணிக்கையால் இத்துயரச் சம்பவங்கள் உலகின் செவிகளுக்கு எட்டவில்லை.

ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் இருப்பிடங்கள் இல்லாமலும், உணவு மற்றும் மருத்து வசதிகள் அனைத்தும் இழந்த நிலையிலும் பரிதவித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், இத்தகைய பரிதாபமான, சோகமான சூழ்நிலையில், இந்திய மக்களும், இந்திய அரசாங்கமும் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். இந்திய செங்சிலுவை சங்கம் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அத்தியவசியமான தேவைகளை அனுப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ் உதவிப் பொருட்களை 1987 ஜுன் 3ம் திகதி முதல் கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்களை பரிசீலனை செய்ய இந்திய செஞ்சிலுவைச் சங்கம் அழைக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இப்பொருட்களை பரீசீலனை செய்ய அழைக்கப்படுகின்றனர்.

மனிதாபிமான ரீதியில் அனுப்பி வைக்கப்படும் இப்பொருட்களுடன் ஆயுதங்கள் எதுவும் அனுப்பிவைக்கப்படமாட்டாது. ஆயுதப்படைப் பாதுகாப்பும் இருக்கப்போவதில்லை.

பொருட்களின் விநியோகத்தைப் பார்வையிட்டு செய்திகள் வெளியிடுவதற்கு ஏற்ற வகையில் இந்திய மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் இப்பொருட்களுடன் யாழ்ப்யாணம் சென்று, தேவையானவர்களுக்கு பொருட்கள் சென்றடைவதை நேரடியாக ஊர்ஜிதம் செய்வார்கள்.

இத்தகைய மனிதாபிமானப் பணியில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் கலந்து கொள்ளும் என்று கருதுகிறோம்.

இலங்கை அரசாங்கத்தின் சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறோம்.”

இலங்கை அரசின் பதில்

இந்த இரண்டாவது கடிதம் இலங்கை அரசை கடுமையாக யோசிக்க வைத்துவிட்டது. இந்தியா வெறும் கண்டனங்களோடு நிறுத்திக் கொள்ளப்போவதில்லை என்பதும் தெரிந்து போயிற்று.

ஜே.ஆர். புத்திசாலி. தந்திரசாலியும்கூட. உதவி செய்யத் தேவையில்லை. உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று சொன்னால் இந்தியா கேட்கப்போவதில்லை. தடுக்கவும் முடியாது.

நேரடியாக முரண்பட்டு முக்குடைபடுவதைவிட விட்டுக்கொடுப்பதே சரியானது என்று முடிவு செய்தார் ஜே.ஆர். தனது சகாக்களுக்கும் நிலமையை எடுத்துச் சொன்னார்.

அதேவேளை இந்திய அரசு கேட்டது, இலங்கை அரசு உடனே சம்மதித்தது என்று செய்திகள் வெளியானால் சிங்கள மக்களிடம் அரசுக்கு விரோதமான எண்ணங்கள் ஏற்படலாம்.

ஜே.ஆர். பணிந்துவிட்டார், இந்திய ஆக்கரமிப்புக்கு உடன்பட்டுவிட்டார் என்றெல்லாம் அரசியல் எதிரிகள் பிரசாரம் செய்யவும் கூடும்.
அதனால்தான் ஒன்றும் பணிந்து விடவில்லை என்பதுபோல பாசாங்கு செய்தபடியே நாசூக்காக இறங்கிவந்தார் ஜே.ஆர்.

இந்திய அரசின் கடிதத்துக்கு பதிலாக இலங்கை அரசு அனுப்பிய கடிதத்தின் வாசகங்களை ஊன்றிக் கவனித்தால் ஜே.ஆர். அரசாங்கத்தின் நாசுக்கான விட்டுக்கொடுப்பு தெரியும்.

இலங்கை அரசின் கடிதம்

இலங்கை அரசு அனுப்பிய கடித்தின் சுருக்கம் இது.

“தங்கள் கடிதத்தின் முற்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தவறானவையும், ஆதாரமற்றவையுமாகும்.

இந்திய உபகண்டத்தின் ஒரு பகுதியான தமிழ்நாடு இலங்கைப் பிரிவினைவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்காவிட்டால் இத்தகைய சூழ்நிலை எழுந்திருக்காது.

வெளிநாட்டு உதவிகள் தேவைப்படும் அளவுக்கு யாழ்ப்பாணத்தின் நிலமை மோசமாகவில்லை. தேவைகள் பூர்த்தி செய்யும் நிலையில் இலங்கை அரசு உள்ளது.

இந்திய அரசும், மக்களும் உண்மையாகவே அயலவர்களின் உதவி என்ற அடிப்படையில் உதவ முன்வருமானால் அதனை ஏற்பதையிட்டு இலங்கை அரசாங்கம் ஆலோசனை செய்யும்.

எத்தகைய பொருட்கள், எவ்வாறு விந்யோகிக்கப்பட வேண்டும் என்பதை இருநாட்டு பிரதிநிதிகளும் சேர்ந்து திட்டமிடலாம்.

இக்கடிதப்பரிமாற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இந்தியப் பிரதமர் ராஜீவுக்கும், ஜே.ஆருக்கும் இடையே நேரடியான தொலைபேசி தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டது. இருவரும் அந்தரங்கமாக பிரச்சனைகளைப் பேசிக்கொள்ளவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை அரசு கடிதத்தை அனுப்பிவைத்த பின் ஜே.ஆருடன் தொடர்பு கொண்டார் ராஜீவ் காந்தி.

இந்திய அரசின் மனிதாபிமான உதவியை ஏற்றுக்கொள்ள முன்வந்தமைக்கு ஜே.ஆருக்கு நன்றி கூறினார் ராஜீவ்.

ஜுன் 30ம் திகதி புதன்கிழமை பொருட்கள் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்படும் என்ற தகவலை ராஜீவ் தொலைபேசி ஊடாகத் தெரிவித்தார்.

ஜே.ஆர் சம்மதித்தார். ராஜீவ்காந்தியிடம் தனது இக்கட்டான நிலையை தெரிவித்தார் ஜே.ஆர். “தயவுசெய்து எனக்கு சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்” ஜே.ஆர் சொன்னது அதுதான்.

ஜே.ஆர் பல்டி

அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் ஜே.ஆர். ‘வேறு வழியில்லை. உடன்பட்டேயாக வேண்டும்’ என்பதை விளக்கினார். அமைச்சரவையில் இருந்து பலத்த கண்டனக்குரல்கள் எழுந்தன. அதிலும் ஒரு குரல் கடுமையாகவே உரத்து ஒலித்தன.

அந்தக்குரலுக்குச் சொந்தக்காரர் அப்போதைய பிரதமர் பிரேமதாசா.

ராஜீவும், ஜே.ஆரும் தொலைபேசியில் தகவல்கள் பரிமாறிக்கொண்டபோதும் இந்திய வெளியுறவு அமைச்சரும் இந்தியாவின் பதிலை இலங்கை அரசுக்கு உத்தியோகபூர்வமாக தெரிவித்தது.

ஜுன் 3ம் திகதி தமிழ்நாடு இராமேஸ்வரத்தில் இருந்து சாதாரண படுகுகள் மூலம் பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். இலங்கை தூதுவரின் பிரதிநிதியும் இப்பொருட்களுடன் செல்ல அறிவுறுத்துங்கள்.

அமைச்சரவையில் ஏற்பட்ட பலத்த எதிர்ப்பு கண்டு ஜே.ஆர். அதிர்ச்சியுற்றார்.

ராஜீவ் காந்தியிடம் தான் சம்மதம் தெரிவித்துவிட்டதை ஜே.ஆர் தனது சகாக்களுக்கு கூறவில்லை.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கடிதத்துக்கு காட்டமான பதில் ஒன்றை அனுப்புவதன் மூலம் தனது சகாக்களின் எதிர்ப்பில் இருந்து தப்பிக்கொள்ள நினைத்தார் ஜே.ஆர். சுருக்கமாகச் சொன்னால் ஜே.ஆர். ஒரு பல்டி அடித்தார்.

இலங்கை அரசின் முதல் கடிதத்தில் இருந்து முற்றிலும் மாறான கடிதமாக அது இருந்தது.

அந்த கடித வாசகத்தின் சுருக்கம் இதுதான்.

“ஜுன் முதலாம் திகதி இந்திய அரசு அனுப்பிய கடிதத்துக்கு இலங்கை அரசு அனுப்பிய பதிலை இந்திய அரசு தவறாக அர்த்தப்பபடுத்திக் கொண்டதையிட்டு திகைப்படைகிறோம்.

அந்நிய உதவி எதுவும் தேவைப்படும் அளவுக்கு இங்கு நிலமை இல்லை என்பதை இலங்கை அரசு சுட்டிக்காட்டுகிறது.

அனுப்பப்படும் பொருட்கள் மற்றும் அவற்றுடன் வருவோர் பற்றிய விபரங்களை இரு அரசாங்கங்களும் தீர்மானிப்பதற்கு முன்னர்

பொருட்கள் அனுப்பப்படுவதை இலங்கை அரசு அனுமதிக்க முடியாது இது பற்றி கலந்துரையாட இலங்கை அரசு ஆயத்தமாகவுள்ளது.” இக்கடிதம் கிடைத்தவுடன் ராஜீவ் காந்தி கொதிப்படைந்து விட்டார்.

உண்மையில் இலங்கை அரசின் முதல் கடிதத்தில் பொருட்களை அனுப்பலாம் என்று நேரடியாக கூறப்படவில்லை. ஆனால் ராஜீவ் காந்தியுடன் தொலைபேசியில் பேசும்போது ஜே.ஆர். சம்மதம் தெரிவித்து விட்டார். அதனை ராஜீவ் தனது வெளியுறவு அமைச்சகத்துக்கு தெரிவிக்க, அதனடிப்படையில்தான் வெளியுறவு அமைச்சகம் இலங்கை அரசுக்கு கடிதம் அனுப்பியது.

ஆனால், ஜே.ஆர். தான் சம்மதம் தெரிவித்த விடயத்தை ஒரே அமுக்காக அமுக்கி விட்டதால், இந்திய அரசுதான் இலங்கை அரசின் கடிதத்தை பிழையாக அர்த்தப்படுத்திக் கொண்டது? அல்லது முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறது என்பது போன்ற கருத்து ஏற்பட வாய்ப்பிருந்தது.

பாரதம் அனுப்பிய படகுகள்

ஆனாலும், இந்தியா தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

ஜுன் 3ம் திகதி பகல் 2 மணி…
தமிழ்நாடு இராமேஸ்வரத்தி ல் இருந்து 19 மீன்பிடிப்படகுகள் உதவிப் பொருட்களுடன் புறப்பட்டன.

இந்திய கடலோரக் காவல் கப்பலான ‘விக்ரம்’ மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்க கடற்படைக் ஹெலிகொப்டர் ஒன்று மேலே பறந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.

படகுகளில் இந்திய செஞ்சிலுவைச் சங்க கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

வழி மறிப்பு

இலங்கை கடல் எல்லையில் வைத்து இலங்கை கடற்படை ரோந்துப்படகு இந்திய படகுகளை வழிமறித்தது.

இந்திய அதிகாரிகளும் இலங்கை கடற்படை ரோந்துப் படகு கொமாண்டரும் 4 மணிநேரம் நடுக்கடலில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இலங்கை அதிகாரிகளும் இலங்கை கடற்படை ரோந்துப் படகு கொமாண்டரும் 4 மணிநேரம் நடுக்கடலில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இலங்கை கடற்படை ஒரே பிடியாக நின்றது. இந்திய படகுகள் திருப்பிச் சென்றன.

இச் செய்தி உலகெங்கும் பரவியது.

ஜே.ஆரின் துணிச்சலைப் பாருங்கள் என்று இலங்கையில் உள்ள அவரது ஆதரவாளர்களும் குதிக்க தொடங்கி விட்டனர்.

இந்திய படகுகள் திரும்பி விட்டதாமே. இனிமேல் என்ன நடக்கும்? புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஆயுதங்கள் போன்ற பாரிய உதவிகளை இந்தியா வழங்கலாம் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

அவசரக் கூட்டம்

ஜுன் 4 அதிகாலை ஒருமணி…

புதுடில்லியில் ராஜீவ் தலைமையில் உயர் அதிகாரிகள் அவசரக்கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள், ‘றோ’ உளவுப்பிரிவு அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஆறு மணிநேரம் கூட்டம் நடைபெற்றது.

கூட்ட முடிவில் அங்கிருந்தே தொலைபேசி மூலமாக எம்.ஜி. ஆருடன் தொடர்பு கொண்டார் எஸ்.சந்திரசேகரன். அவர் சந்திரன் என்று சுருக்கமாக அழைக்கப்படுவார். தமிழ் நாட்டுக்காரர். தமிழர்.

அவர்தான் ‘றோ’வில் இலங்கைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

சுகவீனம் ஒழுங்காகப்பேச முடியாத நிலை. அப்படியிருந்தும் எம்.ஜி. ஆர். சந்திரனுக்கு சொன்னார்:

“எப்படியாவது இலங்கையிலுள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்.”

இந்திய விமானப்படையின் மிராஜ் போர் விமானங்கள் தயாராகிக்கொண்டிருந்தன.

அதே நேரம் இந்திய இராணுவத்தளபதி சுந்தர்ஜியின் மேசையில் முன் கூட்டியே தயாராக இருந்த இரகசிய திட்ட ஆவணம் விரிந்தது. அந்த பைலின் மீது எழுதப்பட்டிருந்த வார்த்தைகள்…

–MO-SL-

(தொடர்ந்து வரும்)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பனை…. ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்…!! வீடியோ
Next post விஜய் படத்தில் விஜய் சேதுபதியின் சகோதரி…!!