By 3 December 2016 0 Comments

மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி…!! கட்டுரை

article_1480572627-article_1479829865-prujothமாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்து முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக போருக்குப் பின்னரான கடந்த ஏழு ஆண்டுகளில் அனுமதித்திருக்கவில்லை.

இறந்தவர்களை நினைவுகூருவதற்கான மக்களின் கூட்டுரிமையையே மஹிந்த அரசாங்கம் தன்னுடைய கொடுங்கரம் கொண்டு அடக்கியிருந்தது. ஆனால், இம்முறை அந்தக் கரத்தினை முற்றாக விலக்காமல் பிடியின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தியிருக்கின்றது. (ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.) அதுதான், மக்களைப் பெருவாரியாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நோக்கிப் பகிரங்கமாக வர வைத்திருக்கின்றது.

எந்தவொரு மாற்றமும் அரசியல் அடிப்படை சார்ந்ததுதான். அதுவும் தமிழ் மக்களைப் பிரதானப்படுத்தும் விடயங்களும் அதுசார் நிலைப்பாடுகளும் பெரும் அரசியல் சார்ந்தவை. அதனை, கடந்த காலம் எமக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கின்றது.
அப்படிப்பட்ட நிலையில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காகத் திறந்திருக்கும் ‘வெளி’ அரசியலுக்கு அப்பாலானது என்கிற வாதத்தை யார் வைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இம்முறை கிடைத்திருக்கின்ற நினைவுகூருவதற்கான வெளியை உருவாக்குவதில் தமிழ் மக்கள் பெரும் பங்களித்திருக்கின்றார்கள்.

அவர்கள், கடந்த வருடம் மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவே, அவர்களின் நினைவுகூருவதற்கான கூட்டுரிமையை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகளை வழங்கியிருக்கின்றது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஏறி நின்று அரசியல் பேசுவது அபத்தமானது என்கின்ற வாதங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கேட்க முடிகிறது. ஆனால், மக்களினால் ஏற்பட்ட மாற்றத்தினையும் மீளக்கிடைத்த உரிமையையும் சுட்டிக்காட்டுவது எதிர்கால அரசியலுக்கு அவசியானது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் மாவீரர் நினைவேந்தலும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் காலாகாலத்துக்கும் கொண்டு சுமக்கப்பட வேண்டியவை; நீக்கம் செய்ய முடியாதவை. இந்த இரண்டு விடயங்களையும் அதன் வீரியம் குறையாமல் கொண்டு சுமப்பதுதான், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் அனைத்து வடிவங்களின் போக்கிலும் தன்னுடைய பரப்பினை விரித்திருந்தது என்பதற்கான அடிப்படைகளைத் தக்க வைக்கும்.

அதுபோல, கள – கால யதார்த்தத்தினை உள்வாங்கி எமது அரசியல் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்கிற விடயத்தையும் உணர்த்திக் கொண்டிருக்கும். ‘அடையாள நீக்கம்’ செய்யப்படுகின்றது என்கிற கூச்சல்களை அண்மைய நாட்களில் அதிகமாகக் கேட்க முடிகின்றது. ஆனால், அடையாள நீக்கத்தினை முற்றாக முறியடித்து, கால காலத்துக்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினூடும், மாவீரர் நினைவேந்தலினூடும் பல விடயங்களை நாம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சேர்க்க முடியும்.

அதற்கான அடிப்படைகளைச் செய்ய வேண்டியதும் தமிழ் மக்களின் பொறுப்பாகும். அதுதான், அடுத்த தலைமுறைகளை நோக்கி உண்மையான அர்ப்பணிப்புகள் சார் வரலாற்றைக் கொண்டு சேர்க்கும். அதன்போக்கில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான பகிரங்க வெளி சில ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது.

இறுதி மோதல்களுக்குப் பின்னரான வடக்கு – கிழக்கில் மே மாதங்களிலோ அல்லது நவம்பர் மாதங்களிலோ தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்துதல் என்பது பாரிய குற்றமாக அரசாங்கப் படைகளினால் நோக்கப்பட்டது. கோவில்களிலும் தேவாலயங்களில் அடிக்கப்படும் மணியோசை கூட, நேரங்கள் கணிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அச்சகர்களும் பாதிரியார்களும் அச்சுறுத்தப்பட்டார்கள். வீடுகளின் சாமியறை வரை வந்து இராணுவச் சீருடைகள் பரிசோதித்துச் சென்றிருக்கின்றன. கிட்டத்தட்ட மூச்சுக்குழாயினை ஒட்டுமொத்தமாக நெரிப்பதற்கு ஒப்பான இறுக்கத்தை மஹிந்த அரசாங்கமும் அரசாங்கப் படைகளும் ஏற்படுத்தியிருந்தன.

நவம்பர் மாதங்களில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் துரத்தித் துரத்தித் தாக்கப்பட்ட வரலாற்றையும் இறந்தவர்களுக்கான கிரிகைகளை மே மாதத்தில் செய்ய முடியாத அழுத்தங்களையும் மக்கள் சந்தித்து நின்றார்கள். அந்த இறுக்கம் சொல்லிக் கொள்ள முடியாதவை. அது ஓங்கி ஒப்பாரி வைத்து அழ வேண்டிய துயரத்தை, மனத்துக்குள் புழுங்கிக் கொண்டு, மனநோயோடு அலைய வைத்தது. சமூகமொன்றினை மன ரீதியாக நோயாளியாக்குவதற்கான ஏதுகைகளையும் செய்திருந்தது.

இறந்தவர்களைப் பகிரங்கமாக நினைவுகூருவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று வடக்கு- கிழக்கிலுள்ள மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள். அது, தங்களை ஆசுவாசப்படுத்தி, அடுத்த கட்டங்களை நோக்கிச் சிந்திக்க உதவும் என்றும் கோரியிருந்தார்கள்.

போருக்குப் பின்னரான சமூகமொன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகமானவை. அதுவும், ஒட்டுமொத்தமாகக் கைவிடப்பட்ட சமூகமாக மாறிவிட்ட மக்களின் அழுத்தங்கள் எவ்வளவு என்று அவர்களோடு நெருங்கிப் பேசுபவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

அண்மையில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகளில் அழுது தமது மனப்பாரத்தைக் குறைப்பதற்காக பாவித்தவர்கள் பலர். இந்த அமர்வுகளில் கலந்து கொண்ட முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பெரும்பான்மையான மக்கள் நினைவு கூருதலுக்கான அனுமதியைப் பிரதானமாக வேண்டிக் கொண்டார்கள்.
அரசாங்கப் படைகளினால் அழித்துச் சிதைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி மக்களை அழைத்து வந்து, துப்புரவாக்கி அங்கொன்றும் இங்கொன்றுமாக எஞ்சியிருந்த மாவீரர் நினைவுப் படிகங்களை ஒன்றாக்கி நினைவுத்தூபியாக அடுக்கி வைத்திருக்கும் படங்கள் கடந்த 25, 26 ஆம் திகதிகளில் வெளியாக ஆரம்பித்தன.

இந்தப் படங்களைப் பார்த்ததுமே சில தரப்புக்கள் பதற்றமடைய ஆரம்பித்தன. இராணுவப் புலனாய்வாளர்கள் தலையீடு செய்கிறார்கள் இல்லை; இராணுவமும் பொலிஸூம் உள்நுழைந்து மக்களை அடித்து விரட்டுகிறார்கள் இல்லை என்பது மாதிரியான எண்ணப்பாடுகளின் போக்கில் எழுந்தவை அவை.

ஏனெனில், மக்கள் மீதான அடக்குமுறையை ஒருவகையில் இரசித்துக் கொண்டு அதற்கு எதிராகவே எதிர்வினையாற்றுவதாக காட்டிக்கொள்ள வேண்டிய சில்லறைத்தனமாக அரசியலுக்காக அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அதனையும் மீறி கடந்த 27 ஆம் திகதி சிவப்பு, மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள், மலர்கள் தூவி, தீபங்களை ஏற்றி, அழுது புரண்டு தங்களின் ஆற்றாமையை அழுகையாக வெளிப்படுத்திய போது பெரும் ஆறுதலொன்று ஏற்பட்டது.

ஆனால், சில்லறை அரசியலுக்காகக் காத்திருப்பவர்களினால் இதனைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. என்ன விடயத்தைப் பிடித்துக் கொண்டு, இந்த வெளியை நிராகரிப்பது என்று மூளையைக் கசக்க ஆரம்பித்தார்கள். விளைவு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத அமர்வுகள் கண்ணுக்குத் தெரிந்தன.

ஆரம்பத்தில் கூறியது போலத்தான், எந்தவொரு மாற்றமும் அரசியலுக்கு அப்பாலானது அல்ல! மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான பகிரங்க வெளியை இலங்கை அரசாங்கமும் தென்னிலங்கை அடிப்படைவாத சக்திகளும் சும்மா வழங்கிவிடாது. அவற்றுக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல் உண்டு. அது, அடுத்த ஜெனீவா அமர்வுகளைக் கருத்தில் கொண்டதாக இருக்கலாம்.

அந்த வகையில், எதிர்காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தெளிவாகவும் காத்திரமாகவும் ஒருங்கிணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன.

மாவீரர் துயிலும் இல்லங்களில் பொதுச் சுடரினை மாவீரர் ஒருவரின் தாயாரோ, மனைவியோ, பிள்ளையோ, முன்னாள் போராளி ஒருவரோ ஏற்றிருக்க வேண்டும் என்கிற ஆதங்கம் இந்தப் பத்தியாளருக்கு உண்டு. சில அரசியல்வாதிகள் தங்களை அடுத்த பிரபாகரனான சித்தரிக்க முயலும் அசிங்கமான காட்சிகளையும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் காண முடிந்தது. அது, அற்பமான முயற்சிதான். அதனை, அந்தக் கட்சிகள், குறிப்பாகத் தமிழரசுக் கட்சி எதிர்காலத்தில் தடுத்து நிறுத்த வேண்டும்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நோக்கி இவ்வளவு மக்கள் வந்திருப்பதை தென்னிலங்கை பெரும் ஆச்சரியத்தோடும் ஆற்றாமையோடும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. ‘திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை’ யோடு மேம்போக்காக நல்லிணக்கம் பற்றிப் பேசும் அரசாங்கப் பிரதிநிதிகள் சிலர் தற்போது இருக்கின்றார்கள். ஏனெனில், மக்கள் ஆயிரக்கணக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கிப் படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

தென்னிலங்கை நண்பர் ஒருவரோடு பேசும் போது, பெரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். “திரும்பவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்கலாம் என்று தெரிந்தாலும், தமிழ் மக்கள் தமது தார்மீக உரிமையையும் கடப்பாட்டினையும் நிறைவேற்றுவதற்காக இவ்வளவு அர்ப்பணிப்பாக இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியம் தான். அவர்களை போலியான வார்த்தைகளினூடு வெற்றி கொள்ள முடியாது என்பதற்கு மாவீரர் நினைவேந்தலுக்காகக் கூடிய மக்களே சாட்சி” என்றார். எழுபது ஆண்டுகளை அண்மித்துவிட்ட போராட்ட வரலாற்றை தமிழ் மக்கள் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை அவ்வளவு இலகுவாக யாருமே ஏமாற்றிவிட முடியாது என்பது தான் உண்மை.

‘ஏமாற்றிவிட முடியாது!’ என்கிற வார்த்தைகள் தென்னிலங்கையையும் சர்வதேசத்தையும் நோக்கியது மாத்திரமல்ல. தமிழ் அரசியல்வாதிகளையும் புத்திஜீவிகளையும் நோக்கியதுதான். கடந்த வருடம் ஜனவரி மாதம் தமிழ் மக்கள் மேற்கொண்ட தீர்மானமும் மிகத்தெளிவாக சிந்தித்து எடுக்கப்பட்டதுதான். அது, யாரினதும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி மேற்கொள்ளப்பட்டதில்லை. அதனை, அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதுதான், மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளியை உருவாக்கி தந்திருக்கின்றது!Post a Comment

Protected by WP Anti Spam