வைகோ மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்

Read Time:2 Minute, 18 Second

Vaiko.mdmk.jpgமதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ரவிகுமார் மற்றும் பால் என்கிற இரண்டுபேர், இன்று புதன்கிழமையன்று தமிழகத் தலைநகர் சென்னையில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த திங்கட்கிழமை சென்னை தியாகராய நகர் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிய போது தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள், இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாகவும், இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இவர்கள் இருவரும் தங்களின் புகாரில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவர்களின் இந்த புகார்கள் சட்டப்படி நீதிமன்ற விசாரணையில் நிற்காது என்று கூறுகிறார் மதிமுக வழக்கறிஞர் கோவில்பட்டி எஸ். ராதாகிருஷ்ணன்.

விடுதலைபுலிகளுக்கு தார்மீக ஆதரவளித்து பேசுவது குற்றமல்ல என்று வைகோ மீதான பொடா வழக்கு ஒன்றில் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகவும், எனவே, காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இந்த புகார்களை தாங்கள் சட்டரீதியில் சந்திக்கத்தயாராக இருப்பதாகவும், ராதாகிருஷ்ணன் கூறினார்.

ரவிகுமார் மற்றும் பால் ஆகியோரின் புகார் மனுக்கள் மீது, சென்னை காவல்துறையின் சட்டத்தரணியின் கருத்துக்களை கேட்கப்போவதாகவும், அவரது கருத்தின் அடிப்படையில் தாங்கள் மேல்நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், தியாகராய நகர் பகுதி துணை ஆணையாளர் பாஸ்கரன் தெரிவித்தார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தேனீக்கள் கொட்டியதால் ஒருவர் பலி
Next post இஸ்ரேல் ஜனாதிபதி மீது செக்ஸ் குற்றச்சாட்டு