பருவ வயதில் அந்தரங்க பேச்சு அவசியமா?..!!

Read Time:8 Minute, 44 Second

b96c6b544e5e67fa40149135eaf2bbf5-585x307நமிதா 12–ம் வகுப்பு படிக்கும் மாணவி. 16 வயது. ‘‘இவள் போட்டிப்போட்டு படிக்கிறாள். நிறைய மதிப்பெண் வாங்கிக் கொண்டிருக்கிறாள். இவளை நினைத்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் இவளிடம் கொஞ்சம் கூட மகிழ்ச்சியே இல்லை. தோழிகள் இவளோடு பேசுவதில்லையாம். இவளை தனிமைப்படுத்துகிறார்களாம். தோழிகளை பற்றி பேசினாலே அழுகிறாள். அவ்வப்போது பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாள். காரணம் கேட்டால் சொல்ல மறுக்கிறாள்’’ என்று, கவலையை தாயார் பகிர்ந்து கொண்டார்.
தந்தையும், தாயும் அரசு அதிகாரிகள். தாய் சொந்த ஊரில் மகளோடு வசிக்கிறார். தந்தை இன்னொரு ஊரில் வேலை பார்க்கிறார். இவள், அவர்களின் ஒரே மகள்.

நமிதா அமைதியாக இருந்தாள். முகம் இறுகி இருந்தது. தாயாரை அனுப்பிவிட்டு அவளோடு பேசினேன்.
‘‘எல்லோருக்குமே மனம் விட்டு பேசக்கூடிய அம்மாக்கள் கிடைத்திருக்கிறார்கள். பள்ளிகளிலும் நல்ல தோழிகள் அமைந்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் இரண்டுமே சரியாக அமையவில்லை’’ என்று அவள் வருத்தத்தை வெளிப்படுத்தினாள்.

பெற்றோர் மீது அவளுக்கு நிறைய கோபம் இருந்தது.
‘‘எங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் நிறைய இருக்கின்றன. ஆனாலும் அப்பாவும், அம்மாவும் போட்டிப்போட்டு சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இருவரும் வெவ்வேறு ஊர்களில்தான் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என் அப்பா விருந்தினர் போல வீட்டிற்கு வந்து போய்க்கொண்டிருக்கிறார். இரண்டு, மூன்று நாட்கள் அவர் எங்களோடு சேர்ந்து இருந்தாலே அது பெரிய விஷயம்.

எல்லா வேலைப்பளுவும் அம்மாவுக்குத்தான். தினமும் அலுவலகம் முடிந்து சோர்ந்துபோய் வீட்டிற்கு வருவார். சமைப்பார். சாப்பிடுவோம். சிறிது நேரத்தில் தூங்கிவிடுவார். என்னோடு பேசவும் அம்மாவுக்கு நேரம் கிடைப்பதில்லை’’ என்று குறைபட்டாள்.
தோழிகள் பற்றி பேசத் தொடங்கியதுமே அவள் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. தனது தோழிகள் எல்லோருமே கெட்டவர்கள் என்றாள்.

‘கெட்டவர்கள் என்றால் எப்படி?’ என்று கேட்டபோது, அவர்களைப் பற்றி தான் பேச விரும்பாததுபோல் முகம் சுளித்தாள்.

அவளை சகஜமாகப் பேசும் நிலைக்கு கொண்டு வர சிறிது நேரம் பிடித்தது.
‘‘என் தோழிகள் எப்போதும் இரண்டே விஷயங்கள் பற்றிதான் பேசுவார்கள். அவை இரண்டுமே எனக்கு பிடிக்காத விஷயங்கள்’’ என்றாள்.

11–ம் வகுப்பில் இவளது வகுப்பு தோழிகள் பலர் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் ஒன்றாக அமர்ந்து காதல் மற்றும் செக்ஸ் பற்றி பேசிக்கொண்டிருப்பார்களாம்.

‘‘எனக்கு கேட்கவே கூச்சமாக இருக்கும். அந்த அளவுக்கு அந்தரங்கமாக பேசுவார்கள். இரண்டு மூன்று தோழிகள் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போல் செக்ஸ் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் ‘ஆ’வென்று வாயை பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பார்கள்’’ என்றாள்.

தோழிகள் காதல், செக்ஸ் பற்றி பேசுவது நமிதாவுக்கு பிடிக்கவில்லை. ஆர்வமற்றவள் போல் இருந்து விட்டதாலும், சில நேரங்களில் ‘அசிங்கமாக இருக்கிறது! உங்களுக்கு பேசுவதற்கு வேறு விஷயமே கிடைக்கவில்லையா?’ என்று தட்டிக் கேட்டதாலும், ஒருகட்டத்தில் தோழிகள் இவளிடம் இருந்து விலகி இருக் கிறார்கள். பின்பு இவளை தங்கள் கூட்டத்தில் சேர்க்காமல் ஒதுக்கி இருக்கிறார்கள். அவ்வப்போது ‘ஒன்றும் தெரியாத பாப்பா..’ என்று கிண்டலும் செய்திருக்கிறார்கள்.

தோழிகள் தனிமைப்படுத்தியதும், கிண்டல் செய்ததும் நமிதாவை ரொம்ப பாதித்து மன அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பின்பு வேறு வழியில்லாமல் இவளாகவே அவர்களோடு ஒட்டி உறவாட முன்வந்திருக்கிறாள். ஆனாலும் அவர்கள் இவளை இணைத்துக்கொள்ளவில்லை.

அந்த தோழிகளில் பெரும்பாலானவர்கள் 12–ம் வகுப்பிலும் இவளோடு சேர்ந்து படிக்க வேண்டியவர்கள். ‘அவர்கள் இனி தொடங்க இருக்கும் வகுப்பிலும் தன்னை தனிமைப்படுத்தி விடுவார்களோ’ என்ற கவலையில்தான் அவள், பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறாள்.

‘டீன் ஏஜில் காதல், செக்ஸ் பற்றி பேசுவதெல்லாம் பெரிய விஷயமா? இதனை இத்தனை சீரியஸ் ஆக்கி இருக்கிறாயே!’ என்று கேட்டு நான் சிரித்ததும், அவள் ஆச்சரியமாக பார்த்தாள்.

‘வயதுக்கு வந்த பின்பு உன்னைப்போன்ற டீன் ஏஜ் பெண்கள் பருவத்தின் அடுத்த படிகளில் அடியெடுத்து வைப்பீர்கள். அது புதுமை, மாற்றம், ரகசியம் நிறைந்ததாக இருக்கும். அதைப்பற்றி பேசுவது, சிந்திப்பது, கனவு காண்பது எல்லாம் உடலுக்கும் மனதுக்கும் கிளர்ச்சி தரும் விஷயம். அதனால் பருவ வயதில் எல்லோருக்குமே அதில் ஒருவித ஈடுபாடு இருக்கத்தான் செய்யும். இன்றைய தாய்மார்கள் எல்லோரும் கடந்த காலங்களில் இதுபோன்ற கட்டங்களையும், ரசனைகளையும், பேச்சுக்களையும் அனுபவித்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள்.

அதனால் இதுவும் உங்கள் வளர்ச்சியில் ஒரு கட்டம்தான். அதை தவறாக நினைத்து தோழிகளிடமிருந்து ஒதுங்கக்கூடாது. அளவோடு பேசிக்கொள்ளலாம். குறிப்பிட்ட காலம்வரை இப்படி பேசுவீர்கள். பின்பு அடுத்த கட்டத்தை நோக்கி போய்விடுவீர்கள்! அப்போது இந்த பேச்செல்லாம் ஒன்றும் இல்லாத விஷயமாகிவிடும்’ என்றேன்.

காதலையும், செக்ஸையும் ஆர்வமாகப் பேசும் அந்த 16 வயது தோழிகளோடு எப்படி பழக வேண்டும்? எந்த அளவுக்கு நட்பை வைத்துக்கொள்ள வேண்டும்? என்பதை எல்லாம் அவளுக்கு விளக்கினேன். புரிந்து கொண்டாள். மகளிடம் தினமும் மனம் விட்டுப்பேச தாய்க்கும் அறிவுறுத்தப்பட்டது.

நமிதா போன்ற டீன் ஏஜ் பெண்களிடம் தாய்மார்கள் தோழிகள் போல் பழக வேண்டும். அப்படி பழகினால் அவர்களது இளம் வயது உணர்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் தேவைப்படும்போது விளக்கம் கொடுத்துவிடலாம். அதன் மூலம் அவர்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்கும், மன அழுத்தங்களுக்கும் உள்ளாவதை தவிர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜயுடன் கைகோர்க்கும் தனுஷ்…!!
Next post என்னை வலிமையான பெண்ணாக மாற்றியது பாகுபலி: தமன்னா..!!