By 1 March 2017 0 Comments

இதுவும் மறந்தே போகும்..!! (கட்டுரை)

downloadதமிழர் வரலாறு, போராட்டங்களையும் கொலைகளையும் துப்பாக்கிச்சூடுகளையும் வன்முறைகளையும் அழிவுகளையும் சந்தித்து மரத்துப்போன மனோநிலையைக் கொண்டதாகவே வளர்ச்சி பெற்றிருக்கிறது. அத்தோடு, எதனையும் சாதாரணமாகக் கொள்ளும் வேண்டா வெறுப்பான வாழ்க்கைக்கும் பழகிப்போனது. அதனால், எல்லா விதமான மோசமான பிரச்சினைகளையும்கூட மிகச் சாதாரணமாக எண்ணிக்கொள்ளும் மனோநிலைக்கும் பழகிப்போனதாகவே இருக்கிறது. இருந்தாலும், ஆயுதம்சார் விடுதலைப் போராட்டத்தின் முடிவு, 2009 மே மாதத்துக்குப் பின்னர், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி, நிம்மதிப் பெருமூச்சை விட்டுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திய போதும், கடந்த நான்கு தசாப்தகால இன விடுதலைப் போராட்டத்துக்கான தீர்வு என்கிற எதிர்பார்ப்புக்கான நிறைவானதொரு விடயத்தினை ஏற்படுத்தி விடவில்லை.

இவ்வாறான சூழலில், இவ்வருடம் கிழக்கில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளைச் சுமந்ததாக இருக்கிறது. கிழக்கு யாராலும் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்று சொல்லப்பட்டாலும், 2017 ஜனவரி மாதத்தில் தமிழ் மக்கள் பேரவை, ஜெனீவாவை எதிர்நோக்கியதான எழுக தமிழ் பேரவையினை ஏற்பாடுசெய்தது. அது ஜனவரி மாதத்தில் இடம்பெறவில்லை. அதற்குப் பல முன் பின்னான காரணங்கள் இருந்தன.

அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் பங்குபற்றலோடு, பொங்கல் விழாவை நடத்தியது. தமிழ் மக்களின் பண்பாடு, அரசியல் அபிலாஷைகள் என்பவற்றினைப் பிரதிபலிப்பதாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து, நாட்டின் ஜனாதிபதி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கிழக்குக்கு வருகை தந்தார்.

அவர் மட்டக்களப்பின் தனித்தமிழ் தேர்தல் தொகுதியான பட்டிருப்பின் முக்கிய வைத்தியசாலையான களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைத்தியக்கட்டத் தொகுதியினைத் திறந்து வைத்தார். அதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் வந்திருந்தார். இந்தநிகழ்வில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுகுறித்து முக்கியமான கருத்துகளை ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் முன்வைத்திருந்தனர். முக்கியமாக சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார். அந்தக்கருத்து அரசியல் சார்ந்து ஒரு பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, ஏறாவூர் பிரதேசத்தில் இயந்திரத் துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது. அதனது விசாரணை எந்தளவில் இருக்கிறது என்பது இதுவரையில் தெரியவில்லை. கிழக்கினை மையப்படுத்தியதாக, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதற்கு அடுத்ததாக எழுக தமிழ் நிகழ்வு பல்வேறு இழுபாடுகளுக்குப் பின்னர் மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில் வடக்கு முதல்வர், ஓய்வு பெற்ற நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.

இது அரசியல் தீர்வுப் பரப்பினை மிகவும் காட்டமாக விமர்சிக்கின்ற தமிழர் போராட்டத்தின் ஊடான, நிரந்தரமான அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் பிரச்சினைகள், அடக்குமுறைகளுக்கு ஆளும் தரப்பு தீர்க்கமானதொரு தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்பதனை உரத்துச் சொல்லியது. ஆனாலும், இந்த எழுக தமிழ் பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானது. எழுக தமிழ், நடந்து முடிந்த மறுநாளே விடுதலைப்புலிகளின் கிழக்குத் தளபதியாக இருந்து, அந்த இயக்கத்திலிருந்து பிரிந்து விடுதலைப் போராட்டத்தின் முடிவுக்குக் காரணமானார் என்ற விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக இருந்து, பிரதி அமைச்சராகவும் இருந்த கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன், தனிக்கட்சி தொடங்கினார்.

அந்த அறிவிப்பு பல்வேறு குழப்பகரமான விமர்சனங்களையும் கொண்டு வந்திருந்தது. அதேபோன்று, பட்டதாரிகள் நியமனங்கள் சில வழங்கப்பட்டபோதும் அவர்களின் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஏழு நாட்களாக மட்டக்களப்பு மாவட்டப் பட்டதாரிகள், நகரின் மத்தியில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குள் இருக்கின்ற அரசியல் வெளிப்படையற்றது என்பதற்கில்லை. இவ்வாறான, அரசியல் நகர்வுகளுக்கிடையில்தான் மட்டக்களப்பில் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த இருவருமாக நான்கு பேர் இயந்திரத்துப்பாக்கி ஒன்றுடன் கடந்த 20ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்கள்.

இவர்கள் ஏன் இந்தத் துப்பாக்கியினை கொண்டு வந்தார்கள்? இவர்கள் துப்பாக்கியைக் கைமாற்றுவது, எப்படிப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிந்திருந்தது என்பதுதான் இந்த இடத்திலுள்ள கேள்விகள். இதன் அரசியல் பின்னணி விளக்கத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்குப்பிறகு, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீதான துப்பாக்கிச் சூடு பெப்ரவரி 22 ஆம் திகதி இரவு மட்டக்களப்பின் களுதாவளையில் நடைபெற்றது.

அதில் தெய்வாதீனமாக அவர் உயிர் தப்பினார். சந்தர்ப்பங்கள் உருவாவதில்லை; உருவாக்கப்படுகின்றன என்பதே உண்மையாகும். வெறுமனே காணிப் பிரச்சினைகளுக்காக நேசகுமார் விமல்ராஜ் என்கிற காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டதா என்ற கேள்வியும் இந்த இடத்தில் எழுகிறது. காணிப்பிரச்சினை என்பதும் அதற்கான தீர்வுகளும் அரசியல் தீர்வு விடயத்தில் மிக முக்கிய இடம் பிடித்திருக்கிறது. காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஓர் ஏற்பாடாகவே காணிச் சீர்திருத்த ஆணைக்குழு ஏற்படுத்தவும்பட்டது.

கடந்த கால இடம் பெயர்வுகளில் காணிகளை இழந்தவர்கள், அச்சுறுத்தல்களால் மிகக்குறைந்த விலைகளுக்கு விற்றவர்கள் எனப்பலருடைய பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன. அரசியலில் அடுக்கடுக்கான சம்பவங்களும் நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டே போனாலும் அவை தொடர்பான முடிவுறுத்தலான எந்த ஒரு சம்பவங்களுக்கு இதுவும் மறந்தே போகும்.

ஆயுதக் கலாசாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் நிம்மதி அடைந்து கொள்ள முடியாத வகையில் உருவாக்கப்படுகின்றவைகளுக்கு வரைவிலக்கணங்கள் கொடுக்க முடியாவிட்டாலும் அவற்றுக்கான தோற்றுவாய்கள் ஆராயப்படுவது தேவையானதே. ஏதேதோ சொல்லி ஒவ்வொரு விடயத்துக்கும் காரணம் கற்பிக்கின்ற தன்மையில் திருத்தத்தினை கொண்டு வரவேண்டுமாக இருந்தால் தோற்றுவாய்களும் காரணங்களும் கண்டறியப்பட்டாக வேண்டும்.

இந்த இடத்தில்தான் நேற்று திங்கட்கிழமை (27.02.2017) ஆரம்பமாகியிருக்கிற ஜெனீவா ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபையினது 34ஆவது கூட்டத்தொடருக்கும் சம்பந்தம் ஏற்படுகிறது. 2015ஆம் ஆண்டு இலங்கை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையானது முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்காத சூழலில் இம்முறை நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை மீது நம்பகத்தன்மையான புதியதொரு தீர்மானம் தேவை என்கிற விடயம் பிரதிபலிக்கப்போகிறது.

மார்ச் 02, 15, 22 இலங்கை விவகாரங்கள் குறித்து நடைபெறும் விவாதங்களின் முக்கியப்படுத்தலும், 23ஆம் திகதி நடைபெறப்போகும் இலங்கை குறித்தான பிரேரணை மீதான வாக்கெடுப்பும் சொல்லப்போகும் பதிலுக்காகக் காத்திருப்போம். இலங்கையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் திறக்கப்பட்டது. ஆனால் காணாமல் போனோர் நடத்தும் போராட்டத்துக்குப் பதில் சொல்ல ஜனாதிபதியாலோ பிரதமராலோ முடியவில்லை. ஏன் சந்திப்பதற்கு நேரம் கூட ஒதுக்க முடியவில்லை.

தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு அமுலுக்கு வந்திருக்கிறது. இருந்தாலும் வெளிப்பூச்சுக்கு ஏதோ நடக்கிறது. மீள்குடியேற்றம் நடைபெற்றது. மக்கள் தங்களது சொந்த மண்ணில் வாழ்வதற்கு காணிகளை வழங்குவதில் பிரச்சினைகள். அதே போன்றுதான் கிழக்கின் பாதுகாப்பற்ற நிலையின் உருவாக்கமும் அமைந்திருக்கிறது. முன்னர் பல சம்பவங்கள் இருந்தாலும், அரசியல் ரீதியாக முன்னாள் போராளிகள் மீண்டும் களத்தில் இறக்கிவிடப்படுவதற்கு தொடக்கமாக சுமந்திரன் மீதான கொலை முயற்சி ஆரம்பமாக இருந்தது. அதற்கு அடுத்த படியாக கிழக்கின் மட்டக்களப்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஏன் இந்த இடத்தில் வடக்குடன் சம்பந்தப்படுத்தி வெளிக்கொணரப்பட்டார் என்பது பார்க்கப்பட வேண்டும்.

ஜெனீவா, எல்லோருமே கண்களில் எண்ணெய் ஊற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிற விடயப்பரப்பு, இது தமிழர்களுக்குச் சாதகமாக நடைபெறுவதும் பாதகமாவதும் எதனைக் கொண்டுவரும் என்ற சந்தேகம் மக்களிடம் இருக்கிறது. வெளித் தெரிகின்ற விடயங்களை விடவும் உள்ளே இருக்கிற அரசியலை அடிமட்ட மக்கள் கணக்கிலெடுப்பதில்லை. யாருக்கும் விட்டுக் கொடுப்பில்லாத வகையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் அரசியல் பல்வேறு தோல்விகள், இழப்புகளினால் கட்டியெழுப்பப்பட்டதே.

ஆனாலும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற யாவற்றையும் எதிர் கொள்கின்ற அரசியலைக் கண்டுகொள்வதே முக்கியமானது. எல்லாவற்றுக்கும் மேலாக மீண்டும் தலைதூக்க ஆரம்பிக்கின்ற ஆயுதக்கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி எவ்வாறு வைக்கப்படும் என்ற கேள்வியையும் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். நாட்கள் எண்ணப்படும் மனித உரிமைகள் சபையின் அடுத்த பிரேரணையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு கிழக்கு காரணங்களை வைத்திருக்கிறது. இந்தக்காரணங்கள் மீண்டும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான தேவைகளுக்கு தற்காலிகமாகத் தீனி போடுவதாக இருக்கப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

இருந்தாலும் ஏன் கிழக்கின் அடுக்கடுக்கான சம்பவங்களையும், நிகழ்வுகளையும் முடிச்சுப் போடுகிறோம் என்ற பார்வை மற்றொரு படி என்றே சொல்லலாம். எது எப்படியிருந்தாலும் இதுவும் மறக்கப்பட்ட விடயங்களாகவே போகும். எப்படியானாலும் கிழக்கில் ஏற்பட்டிருக்கின்ற ஆயுதம் சார் அச்சநிலைக்கு யாரைக் குற்றம் சொல்லமுடியும் என்பது கேள்வியே. காணாமல் போனோருக்கான விவகாரம், தகவல் அறியும் சட்டமூலம், மீள்குடியேற்றம் என்பவற்றுக்கப்பால் கிழக்கின் பாதுகாப்பற்ற சூழ்நிலையினையும் தாண்டிய அரசியலை நாம் கண்டுபிடிப்பது, இதுவும் மறந்து போகும் என்பதற்குத் தீர்வாகும்.Post a Comment

Protected by WP Anti Spam