ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்..!!
‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் காலடி எடுத்து வைத்தவர் மகிமா நம்பியார். கேரள வரவான இவர் ‘குற்றம் 23’-ல் நடித்தார். இப்போது ஜி.வி.பிரகாசுடன் ‘ஐங்கரன்’ படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
முதல் முறையாக ஜி.வி.பிரகாசுடன் ஜோடி சேர்ந்து நடித்தது பற்றி கூறிய மகிமா நம்பியார்…
“இந்த படத்தில் முதல் நாளே ஜி.வி.பிரகாசுடன் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டியது இருந்தது. முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடிப்பதை நினைத்து லேசான பயம் இருந்தது. நான் படப்பிடிப்புக்கு வந்ததும் ஜி.வி.பிரகாஷ் வந்து எனக்கு கை கொடுத்து வரவேற்றார். வாங்க எப்படி நடிப்பது என்று ஒத்திகை பார்க்கலாம் என்றார். நீண்ட நாட்கள் பழகியவர் போல ஜி.வி.பிரகாஷ் என்னிடம் பேசினார்.
அவர் என்னிடம் நடந்து கொண்ட விதத்தால் பயம் பறந்துவிட்டது. தைரியமாக நடித்தேன். ஒரு வாரம் அவருடன் சேர்ந்து நடித்தது ஜாலியாக இருந்தது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. மீண்டும் ஜி.வி.பிரகாசுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.