சைட்டம் எதிர்ப்பு மக்களுக்காகவா?..!! (கட்டுரை)

Read Time:24 Minute, 4 Second

105548745GMOA
சைட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்தை அரசுடமையாக்க வேண்டும் எனக் கோரி, அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக தொடர் வேலைநிறுத்தம் ஒன்றை நடத்துவது தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று முடிவு எடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரச மருத்துவர்களினதும் ஏனைய சில தொழிற்சங்கங்களினதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் வெற்றியளித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் கூறுகின்றது. அது தோற்கடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தில் சில ஆசிரியர் சங்கங்களும் கலந்து கொண்டன. அவர்களது போராட்டமும் தோல்வி கண்டதாகக் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார். பொதுவாக அவர்ரவரது விருப்பத்துக்கேற்ப இந்த வேலை நிறுத்தம் வெற்றி கண்டதாகவும் தோல்வி கண்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு தொழிற்சங்கப் போராட்டம் வெற்றியளித்ததாகவோ அல்லது தோல்வி கண்டதாகவோ முடிவு செய்வது எவ்வாறு? அதற்குள்ள அளவுகோல் என்ன? பொதுவாக அந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தால் எந்தளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதன் அடிப்படையிலேயே அதன் வெற்றி தோல்வி மதிப்பிடப்படுகிறது.

அதாவது, எந்தளவு நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? எந்தளவு நோயாளர்கள் சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார்கள் என்பதே மருத்துவர்களின் வேலைநிறுத்தம் ஒன்று வெற்றியளித்துள்ளதா என்பதைக் காட்டும் சிறந்த குறியீடாகும்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமது போராட்டம் வெற்றியளித்ததாகக் கூறும் மருத்துவர்களும் அந்த அடிப்படையிலா அது வெற்றியளித்ததாகக் கூறுகின்றார்கள்?

உயிர் கொல்லும் போராட்டங்களை நடத்த தார்மிக உரிமை இல்லை

ஒரு தொழிற்சங்கத்துக்கு தமது உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ அல்லது அரசியல் காரணத்துக்காகவோ வேலை நிறுத்தம் செய்வதற்கு சட்ட ரீதியாக உரிமை இருக்கிறது. ஆனால், சில வேளைகளில் சில தொழில்துறையினருக்கு சில தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு தார்மிக உரிமை இல்லை.

உதாரணமாக, க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர்தரப் பரீட்சையை நெருங்கிய காலத்தில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்வது சட்டபூர்வமானதாகக் கருதப்பட்டாலும், அதனைத் தார்மிக அடிப்படையில் அனுமதிக்க முடியாது. அதேபோல், மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வதும் சட்டபூர்வமாகிய போதிலும், அதனைத் தார்மிக அடிப்படையில் எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது.

ஏனெனில், அவர்களது தொழில் மனிதர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதே. தமது பொருளாதார பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவோ அல்லது சலுகைகளைக் கோரியோ, மனிதர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற மாட்டோம் என அடம் பிடிப்பதானது மனிதாபிமானமற்றச் செயலாகும்.

கடந்த காலங்களில், இந்நாட்டு மருத்துவர்கள் தீர்வையற்ற கார்களைக் கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களைக் கோரி, வேலை நிறுத்தம் செய்தனர்.

தமது பிள்ளைகளை ஜனரஞ்சகப் பாடசாலைகளில் சேர்க்க வேண்டும் எனக் கோரி வேலைநிறுத்தம் செய்தனர். இலங்கையில் வேலைநிறுத்தங்கள் தடை செய்யப்படாதிருப்பதனாலும் மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு பலம் இருப்பதனாலும் அவர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

ஆனால், இந்தச் சலுகைகளைத் தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரி, அவர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கு தார்மிக ரீதியில் உரிமை இருக்கிறதா? இந்தச் சலுகைகளைக் கோரி, அவற்றை வழங்காவிட்டால் நோயாளர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற மாட்டோம் என அச்சுறுத்தல் விடுக்க அவர்களுக்கு தார்மிக உரிமை இருக்கிறதா?

இந்தச் சலுகைகளை ஏனைய தொழிற்சங்கங்களும் கோரினால் அவற்றுக்கும் அவற்றை வழங்க வேண்டாமா? அவ்வாறில்லை, எமக்கு மட்டும் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கோருவார்களேயானால் அவர்கள் அதனை எவ்வாறு நியாயப்படுத்தப்போகிறார்கள்?

தமது வேலைநிறுத்தங்களின்போது, தாம் சிறுவர் மருத்துவமனை, புற்றுநோய் மருத்துவமனை, அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றில் வேலைநிறுத்தம் செய்வதில்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் பல நோயாளர்கள் ஆபத்தான நிலையில் இருந்து, நாளாந்தம் மரணித்துவிடுகிறார்கள்.

எனவே, மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வது நியாயமான செயலல்ல; ஆனால், அவர்களுக்கும் தொழில் பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்களும் அவற்றைத் தீர்த்துக் கொள்ள அரசாங்கத்தையோ அல்லது மருத்துவமனை நிர்வாகத்தையோ வற்புறுத்தும் வழிமுறைகள் இருக்க வேண்டும்.

ஆனால், அது வேறு எவையாகவோ இருக்க வேண்டுமேயல்லாது, வேலைநிறுத்தமாக இருக்கக் கூடாது. ஏனெனில், இது நோயாளர்களின் உயிரோடு சம்பந்தப்பட்ட விடயம். அவர்கள் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத வேறு போராட்ட முறைகளைக் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது.

பல்கலைக்கு தெரிவு செய்யப்படாத மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு இரண்டு அடிப்படைகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னணி சோஷலிஸக் கட்சி ஆகியவையும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் சங்கங்களும் தனியார் கல்வி நிலையங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றார்கள். ஏனெனில், அவர்கள் பொது உடமைக் கொள்கையைக் கொண்ட சோஷலிஸவாதிகள்.

அரசாங்கம் தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பித்து, அரச பல்கலைகழகங்களை முடிவிடலாம் என்பதே அவர்களது வாதமாகும். எனவே, அவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்க்கிறார்கள்.

ஆனால், ஒவ்வொரு வருடமும் ஓர் இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படுவதற்கான தகைமையை பெற்றாலும், சுமார் 30,000 மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள். பல்கலைக்கழகங்களில் நிலவும் இட வசதியின்மை காரணமாக ஏனையவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அந்த மிகுதி, ஓர் இலட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் என்ன செய்ய வேண்டும்? ஒரு சிலர் வெளிநாடு சென்று உயர் கல்வி கற்று, நாடு திரும்புகின்றார்கள். ஒரு சிலர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்துள்ள தேசிய நிறுவனங்கள் மூலம், அந்த வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டங்களைப் பெறுகிறார்கள்.

ஆனால், இதற்காகப் பெருந்தொகை பணம் அவசியமாகிறது. எனவே, தகைமை இருந்தும் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வருடா வருடம் உயர் கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியோ அல்லது முன்னணி சோஷலிஸ கட்சியோ, ஆட்சியைக் கைப்பற்றி, சோஷலிஸ பொருளாதாரத்தை உருவாக்கி, தகைமை பெறும் சகலருக்கும் உள்நாட்டிலேயே உயர் கல்வி வசதியைப் பெற்றுக் கொடுக்கும் வரை, அவர்கள் காத்திருக்க வேண்டும் என்று கூற முடியாது. தனியார் உயர் கல்வியை எதிர்ப்பவர்கள் புறக்கணிக்கப்படும் இந்த மாணவர்களையும் அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளுமாறு இதே அழுத்தத்தைக் கொடுத்து போராடுவதில்லை.

அதேவேளை, நாட்டில் எத்தனையோ தனியார் கல்வி நிறுவனங்கள் இயங்கும்போது, அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காது சைட்டம் நிறுவனத்துக்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது புரியாத புதிராக இருக்கிறது.

நாட்டில் பணம் அறவிடும் சர்வதேச பாடசாலைகள் இருக்கின்றன. பணம் அறவிடும்வேறு, அரை அரச (semi-government) பாடசாலைகள் இருக்கின்றன. கொத்தலாவல பல்கலைக்கழகத்திலும் பணம் அறவிடப்படுகிறது. அங்கும் மருத்துவ பீடம் ஒன்று இருக்கின்றது.

ஜனாதிபதி அண்மையில், ‘கிறீன் யுனிவர்சிட்டி’ என்ற பெயரில் ஹோமாகமவில் பணம் அறவிடும் பல்கலைக்கழகமொன்றைத் திறந்து வைத்தார்.

பணம் அறவிட்டு உயர் கல்வியை வழங்கும் ‘அக்வயனாஸ்’ போன்ற நிறுவனங்கள் பல காலமாக நாட்டில் இருக்கின்றன. பணம் அறவிடும், பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இலங்கை பல்கலைக்கழக் மானியங்கள் ஆணைக்குழு அங்கிகாரம் வழங்கியிருக்கின்றது.

இலங்கை மாணவர்கள் அவற்றில் பணம் கொடுத்துப் படித்து, இங்கு வந்து தொழில் செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டில் ஆயிரக் கணக்கில் பணம் அறவிடும் ரியூஷன் வகுப்புகள் இயங்குகின்றன. அவற்றில் பலவற்றில் தனியார் கல்வியை எதிர்க்கும் அரச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களே ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றார்கள். இவற்றையும் எதிர்க்க வேண்டாமா?

இவை அனைத்தும் பணம் அறவிட்டுக் கல்வியை வழங்கும் போது, சைட்டம் நிறுவனத்தை மட்டும் பணத்துக்கு கல்வி வழங்கும் கடை என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?

மாணவர்களிடம் பணம் அறவிடாத பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மட்டுமேதான் ஒரு நாட்டில் இயங்குவதாக இருந்தால், அது மிகச் சிறந்த நாடாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால், அந்த நிலை எப்போது உருவாகும்? அவ்வாறான நாடுகள் எங்கே இருக்கின்றன? அந்தச் சிறந்த நிலை நாட்டில் இல்லாவிட்டால், தனியார் துறையினர் அந்த வெற்றிடத்தை நிரப்ப முன்வந்தால், வசதி படைத்தவர்களாவது அதன் மூலம்பயன் பெறுவதில் என்ன தவறு இருக்கிறது?

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தனியார் கல்வியைத் தாம் எதிர்க்கவில்லை என்றும் ஆனால், சைட்டம் நிறுவனம் போதிய தரத்தில் இல்லை என்றும் கூறுகிறது. அவ்வாறாயின் பொதுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமது மாணவர்களுக்கும் பொதுப் பரீட்சை நடத்தி, தமது மாணவர்களின் தரத்தை பரீட்சித்துப் பாருங்கள் என சைட்டம் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அந்த வாதத்தில் நியாயம் இல்லையா? ஏற்கெனவே, பணம் அறவிடும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்று வரும் மருத்துவ மாணவர்களுக்காக இலங்கையில் ‘எவ் 16’ என்றதோர் பரீட்சையை நடாத்தி, அவர்கள் அரச மருத்துவமனைகளில் மருத்துவர்களாகக் கடமையாற்ற அனுமதி வழங்கப்படுகின்றது.

தனியார் கல்வியை எதிர்க்கவல்ல; சைட்டம் நிறுவனத்தின் தரத்தைப் பற்றித்தான் கேள்வி எழுப்புகின்றோம் என அரச மருத்துவர்கள் கூறுவதாக இருந்தால், அதன் தரத்தை உயர்த்த அவசியமான ஆலோசனைகளை வழங்கி, அதன் தரத்தை உயர்த்த வேண்டும். பிரச்சினை தீர்ந்துவிடும்.

சைட்டம் மாணவர்களுக்கு அவிஸாவலை மற்றும் ஹோமாகம அரச மருத்துவமனைகளில் சிகிச்சைப் பயிற்சி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அதனை எதிர்த்தது.

பின்னர், அம்மாணவர்களுக்குப் போதுமான சிகிச்சைப் பயிற்சி இல்லை எனவும், எனவே அவர்களுக்கு மருத்துவர்களாகும் தகைமை இல்லை எனவும் வாதிடுகிறது. அம்மாணவர்கள் அரச மருத்துவமனைகளில் தடையின்றி சிகிச்சைப் பயிற்சி வழங்கியிருந்தால் அந்தப் பிரச்சினை எழுந்திருக்காது.

மருத்துவர்கள் நோயாளர்களுக்காகவா போராடுகின்றார்கள்?

நாம் நோயாளர்களுக்காகவே போராடுகின்றோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகின்றது. ஆனால் அரச மருத்துவமனைகளுக்குச் செல்லும் நோயாளர்கள், தனியார் மருத்துவமனைகளில் பல விலை கூடிய பரிசோதனைகளைச் செய்து, அதன் அறிக்கையை கொண்டு வருமாறு அரச மருத்துவர்களால் பணிக்கப்படுகிறார்கள்.

சிலவேளைகளில் அவ்வாறான பரிசோதனைகளை தனியார் மருத்துவமனைகளில் செய்வதும், இந்தப் பரிசோதனைகள் உண்மையிலேயே தேவையா என்பது, அந்த மருத்துவர்களுக்கு மட்டுமே தெரியும். சில மருத்துவர்கள் நியமிக்கும் பரிசோதனைகளின் அறிக்கைகளை அவர்களிடம் காண்பிக்கவும் மீண்டும் பணம் கொடுத்துத்தான் அவர்களைச் சந்திக்க வேண்டும்.

அரச மருத்துவமனைகளுக்கு வருவோர் தனியார் மருத்துவமனைகளில் இரத்த பரிசோதனை போன்றவற்றைச் செய்யக் கூடாது என அண்மையில் சுகாதார அமைச்சு தடை விதித்தது.

அரச மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்கள் தாமாக அவ்வாறு தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைகளை செய்து கொள்ளப் போவதில்லை. மருத்துவர்கள் தான் அவர்களை அங்கு அனுப்புகின்றார்கள்.அரச மருத்துவமனைகளில் அந்தப் பரிசோதனைகளுக்கு வசதி இருக்கும் போதே, நோயாளர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதே அதனால் தெளிவாகிறது.

கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியைச் சுற்றியும் நிரந்தரமான தனியார் இரசாயனக் கூடங்கள் உருவாகும் அளவுக்கு இந்தப் பிரச்சினை மோசமான நிலையை அடைந்துள்ளது.

அரச மருத்துவமனைகளில் இது போன்ற சில பரிசோதனைகள் செய்யப்படாதது மட்டுமல்லாது வேறு பல குறைபாடுகளும் இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் நீண்ட வரிசைகள், மருந்துத் தட்டுப்பாடு மற்றும் நோயாளர்களை அவமதிக்கும் வகையில் மருத்துவர்களும் ஏனைய ஊழியர்களும் நடந்து கொள்ளல் போன்றவை சில உதாரணங்களாகும்.

இன்று அரச மருத்துவமனைகளில் அட்டென்டன்டுகள் இருக்கிறார்களா என்று கேட்க வேண்டியிருக்கிறது. ஒரு காலத்தில் ஒரு நோயாளரை மருத்துவமனையில் ஒப்படைத்துவிட்டு, “நானும் அவருக்குத் துணையாக இருக்கவா” என்று கேட்டால், “முடியாது, அதற்காகத் தான் அட்டென்டன்டுகள் இருக்கிறார்கள்” என்று மருத்துவர்களும் தாதிகளும் பதிலளிப்பார்கள்.

ஆனால், இப்போது நோயாளரோடு துணைக்கு ஒருவரையும் தேட வேண்டியுள்ளது. இல்லாவிட்டால், நோயாளரை அழைத்துச் செல்வோர்களில் ஒருவரை வலுக்கட்டாயமாக நிறுத்திக் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் அதற்கும் பணம் கொடுத்து ஆட்களைத் தேட வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க எவராவது போராடுகிறார்களா?

தனியார் மருத்துவமனைகளில் மாலை நேரங்களில் குவிந்துள்ள மக்களைப் பார்த்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் செல்வந்தர்களல்ல என்பது தெளிவாகிறது. அரச மருத்துவமனைகளுக்குச் செல்லாது அல்லது சென்றுவிட்டு தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல எவ்வாறு அவர்கள் தூண்டப்பட்டார்கள்?

அரச மருத்துவர்களில் ஏறத்தாழ அனைவரும் தமது சொந்த மருந்தகங்களில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் கடமையாற்றுகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் கடமையாற்றும் மருத்துவர்கள் ஒரு நோயாளரிடம் அறவிடும் தொகை இன்று நாட்டில் பலர் நாளொன்றுக்கு சம்பாதிக்கும் தொகையை விட அதிகமாகும். சிலர் தமது நாட் சம்பளத்தைப் போல் மூன்று நான்கு மடங்கு அதிகமான தொகையை கொடுத்தே மருத்துவரைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

அதேவேளை, மிகக்குறைவாக பணம் அறவிடும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களாவர். இந்த விடயங்களை மொத்தமாகக் கருத்தில் கொள்ளும் போது, மருத்துவர்கள் நோயாளர்களுக்காகப் போராடுகிறார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

இது தமது ஏகபோக உரிமையை பாதுகாக்கும் போராட்டம்

மருத்துவர்களின் தவறுகளினால் நோயாளர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் உயிரிழந்த சம்பவங்களும் எத்தனையோ இடம்பெற்றுள்ளன. ஒரு காலில் புரையோடிய காயத்துக்காக மற்றக் கால் வெட்டப்பட்டதையும் ஒரு காலில் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சைக்குப் பதிலாக மற்றக் காலில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டதையும் சத்திர சிகிச்சை முடிந்த உடன் கோஸ் துண்டுகளை உடம்புக்குள் வைத்து தைத்ததையும் மருத்துவர்கள் நோயாளர்களைக் கவனியாது இருந்ததனால் நோயாளர்கள் உயிரிழந்ததையும் வேறு இது போன்ற மருத்துவ கவனயீனங்களைப் பற்றியும் நாம் அடிக்கடி ஊடகங்களில் காண்கின்றோம்.

ஆனால், இது வரை எங்காவது ஒரு மருத்துவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளாரா? அந்தச் சம்பவங்களை மற்றொரு மருத்துவரே தான் விசாரிக்க வேண்டும். எனவே, அந்த மருத்துவர் இந்த மருத்துவரைக் காப்பாற்றி விடுகிறார். இதுவும் மருத்துவர்கள் வேலைநிறுத்தங்கள் மூலம் நோயாளர்களுக்காகப் போராடவில்லை என்பதற்கு ஆதாரமாகும்.

உண்மையிலேயே மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தங்கள் மூலம் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். சைட்டம் போன்ற மருத்துவ கல்லூரிகள் மூலம் மருத்துவர்கள் அதிகரித்தால் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளர்கள் கூடுதலான மருத்துவர்களிடையே பிரிந்து ஒவ்வொரு மருத்துவருக்கும் கிடைக்கும் வருமானம் குறையலாம். எனவே, ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளைத் தவிர்ந்த சைட்டம் போன்ற புதிய கல்லூரிகளை அவர்கள் எதிர்க்கிறார்கள். அதற்காக வேலை நிறுத்தங்கள் மூலம் மக்களையே வதைக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என்ன பொண்ணுக டா சாமி செம கூத்து..!! (வீடியோ)
Next post விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா..!!