By 30 June 2017 0 Comments

இலங்கையில் நிலக்கண்ணிவெடி அகற்றல்: குதிரைக் கொம்பு எடுக்கப்படுகிறதா?..!! (கட்டுரை)

image_0bd654cdcdகுதிரைக்கொம்பு முயற்சியாக, இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு முன்பு நாட்டில் நிலவிய மோதல் நிலைவரத்தைத் தொடர்ந்து, மீள்குடியேற்றச் செயன்முறையை முன்னெடுப்பதில் தாக்கம் செலுத்திய மிக முக்கிய தடைக்கல்லாக நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கை இருந்துவருகிறது.

இதை வெற்றிகரமாக முன்னெடுத்து, நிலக்கண்ணிவெடி அபாயமற்ற ஒரு வலயமாக மட்டக்களப்பு மாவட்டம் மாற்றப்பட்டுள்ளமை ஒரு மைல்கல் முன்னேற்றமாகப் பார்க்கப்படவேண்டும்.

இது தொடர்பான நிகழ்வு, கடந்த வாரம் (21.06.2017) மட்டக்களப்பு நகரில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வரவேற்புடன், அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப், கிழக்கு மாகாண முதலமைச்சர், பொறியியலாளர் நசிர் அகமட், ஐக்கிய இராட்சியத்தின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஜ் டோரிஸ், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரேஸ் ஹற்சன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாகிர் மௌலானா, எஸ்.வியாழேந்திரன், ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கூட்டுத்தாபனப்பிரிவின் தலைவர் சாக்கி வரதனி, கனடா உயர்ஸ்தானிகராலய அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் ஜெனிபர் ஹார்ற், பிரிகேடியர் அமித் செனவிரத்ன ஆகியோரது பங்குபற்றலுடன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்ற, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்
டி.எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையில், நிலக் கண்ணிவெடி அபாயமற்ற முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு, மட்டக்களப்பு பாடுமீன் விடுதி வளாகத்தில் நடைபெற்றபோது, மிதிவெடி அகற்றல் தொடர்பான காட்சிப்படுத்தல்களைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், வெடிபொருள் அபாயக்குறைப்பை அண்மித்த மாவட்டமாக பிரகடனப்பபடுத்தப்பட்டது.

இது, இலங்கையின் கடந்த கால யுத்த வரலாற்றில் இன்னல்களையும் துயரங்களையும் அனுபவித்த மக்களுக்கு நிம்மதியானதொரு அறிவிப்பாகவும் இருந்தது.

நிலக்கண்ணிவெடிகள் இல்லாத இலங்கை என்ற இலக்கை அடைந்து கொள்வதில் சிறப்பானதொரு முன்னேற்றமாக இருந்தாலும், நாட்டில் இன்னமும் விடுவிக்கப்படாத பிரதேசங்களும் இவ்வாறானதொரு நிலைமையை அடைந்தேயாகவேண்டும் என்பதற்கும் இது ஓர் அடையாளமாக இருக்கிறது என்பதே யதார்த்தமாகும்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தற்போது மீள்குடியேற்றத்தில் மிக முக்கியமானதொரு தடையாக இருக்கின்ற நிலக்கண்ணி வெடிகளை அகற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்து வந்தாலும், கடந்த 2002 ஆம் ஆண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட,போர் நிறுத்த சமாதான உடன்படிக்கைக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்பாட்டின் முற்றுப்புள்ளியை நோக்கி நாடு முன்னேறியாக வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

நிலக்கண்ணிவெடி அகற்றல் என்பதை, மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்க ஆரம்பித்த காலத்திலிருந்து, தற்போது வரையில், பெரியளவான உயிரிழப்புகளின்றி, பாதிப்புகள் இன்றி நிறைவேற்றப்பட்டது என்ற விடயத்துக்குள், பல்வேறு தொழில்நுட்பம் சார், சாதாரண கலந்துரையாடல், விழிப்புணர்வுச் செயற்பாடுகள், இயந்திர ரீதியான முன்னெடுப்புகள் எனப் பலவிடயங்கள் உள்ளிருக்கின்றன.

தொழிநுட்ப முறைகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட கணிப்பீடுகளுக்கு அமைய, இலங்கையின் நிலப்பரப்பில், 160 சதுர கிலோ மீற்றர் தூரம் நிலக்கண்ணிவெடிகள் பரம்பி இருப்பதாக அடையாளம் காணப்பட்டது. நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிக்கு அமெரிக்கா, கனடா, ஜப்பான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா, நோர்வே, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கியிருக்கின்றன.

நிதிப்பங்களிப்பு, நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள், தொழில்நுட்ப ரீதியான பயிற்சி, ஆலோசனை சேவைகள், கல்விசார் நிகழ்சித்திட்டங்கள் என்பன இங்கு முக்கிய இடம் வகிப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது.

2002-2013 வரையான காலப்பகுதியில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தின் மேற்பார்வையுடன் நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கான நடவடிக்கையில் இறங்கியது.

2013ஆண்டில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், இந்நடவடிக்கையில் இருந்து விலகிக் கொண்டதையடுத்து, அதன் செயற்பாட்டு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது.

தற்போது நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில், 134 சதுர கிலோ மீற்றர்கள் நிலக்கண்ணிவெடி அபாயமற்ற, பாதுகாப்பான பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அச்சமின்றி மக்களை மீள்குடியேற்றுதல், அவர்களின் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்தல், விவசாய நடவடிக்கைகளை மீள ஆரம்பித்தல், மக்களின் வாழ்கைத்தரத்தைக் கட்டியெழுப்புதல் என்பவற்றுக்கு வழி பிறந்துள்ளது என்பது மகிழ்ச்சியான பிரதிபலிப்பாகும்.

நிலக்கண்ணிவெடி அகற்றல் என்பது நாட்டு மக்களிடையே அதிக கவனம் ஈர்க்கப்படாத ஒரு பணியாக இருந்த போதும், நிலக்கண்ணிவெடி அகற்றும் பணி மிக முக்கிய செயற்பாடாகவே உள்ளது.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் தற்போது இப்பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2020 அளவில் இலங்கையை நிலக்கண்ணிவெடி அபாயமற்ற ஒரு நாடாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இவ் எதிர்பார்ப்பு நிறைவேற வேண்டும் என்று இறைவனைத்தான் பிரார்த்திக்க வேண்டும்.

மிதி வெடிகள், வெடிக்காத வெடிபொருள்கள் எனப் பலவற்றைக் கொண்ட பிரதேசங்களில் நடைபெறும் கண்ணிவெடி அகற்றலானது, மனித உழைப்பு, பயிற்றுவிக்கப்பட்ட மோப்ப நாய்கள், இயந்திரங்கள் என்பனவற்றின் துணையுடன் மேற்கொள்ளப்படுகிறது.

அகற்றல் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் அபாயகரமான தொழில் என்று குறிப்பிடுவதை விட, இதை உலகிலுள்ள அபாயகரமான தொழில்களில் உச்சாணியில் இருக்கும் ஒரு தொழில் என்றே குறிப்பிடலாம்.

பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு, மனிதனால் மேற்கொள்ளப்படும் இப்பணியிலுள்ள பாரதூரமான தன்மை பற்றி இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இப்பணியாளர்கள் நாளொன்றில் சுமார் ஆறு மணி நேரம் கடமையில் ஈடுபடுகின்றார்கள். இவர்களிடம் பொறுமை,அர்ப்பணிப்பு, சங்கற்பம் போன்ற உயர்பண்புகள் குடிகொண்டிருக்க வேண்டும். அப்பணியில் ஈடுபடுபவர் விடும் சிறு தவறு காரணமாகத் தனது உடலில் ஓர் அங்கத்தை அல்லது உயிரைக்கூட இழக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக ஒரு மனிதனுக்கு நாளொன்றில் பரீட்சிக்கக்கூடிய நிலப்பரப்பு ஐந்து சதுர மீற்றருக்கும் குறைவானதாகும். இப்பணியிலுள்ள சிரமத்தை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.

நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் செயற்பாட்டில் கடந்த கலங்களில் ஈடுபட்டிருந்த ஒரு பணியாளர் கருத்து வெளியிடுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில், பாலையடிவெட்டை என்னும் கிராமத்தில் பணியை ஆரம்பிக்க எத்தனித்த வேளை, தனது நண்பனின் காலுக்கருகில் மிதிவெடி ஒன்று இருந்ததைக்கண்டு அதிர்ந்து போனதாகவும் தாங்கள் அந்தப்பணியில் ஈடுபடுபவர்கள் என்ற வகையில் அதைப் பாதுகாப்பான முறையில் மீட்டு, உயிர் காத்ததாகவும் குறிப்பிட்டார்.

தேசிய நிலக்கண்ணிவெடி நடவடிக்கை மத்திய நிலையம் இன்று மாவட்டத்துக்கு மாவட்டம் என்ற தொனிபொருளின் கீழ், நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தை நிலக்கண்ணிவெடி அபாயமற்ற ஒரு பிரதேசமாக மாற்றுவதற்கு அரசாங்கம் துணிந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலப்பரப்பாக அடையாளம் காணப்பட்ட ஆறு சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு நிலக்கண்ணிவெடி அபாயமற்ற பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில், இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவு, வெளி நாடுகளைச் சேர்ந்த எப்.எஸ்.டி நிறுவனம், கொரிசோன் நிறுவனம், மக், சர்வாற்ரா எனும் இந்திய நிறுவனம் என்பன நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தன. சர்வோதயா, யுனிசெப் ஆகிய நிறுவனங்கள் மக்களுக்கு மிதிவெடிகளிலிருந்தான பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வுச் செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்தன.

நிலக்கண்ணிவெடி அகற்றலில், சந்தேகிக்கின்ற பிரதேசம் அடையாளம் காணப்பட்டு, தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி மக்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்துப் பிரதேசங்களிலுள்ளவர்களிடம் கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம், முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதன்மூலம், உறுதிப்படுத்தப்பட்ட பிரதேசம் அடையாளம் காணப்படும். அதே நேரம், நிலக்கண்ணிவெடி அபாயமற்ற பிரதேசங்கள் விடுவிக்கப்படும். பின்னர், நிலக்கண்ணிவெடி அபாயம் உள்ள பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும்.

இது அனேகமாக யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களிலும் இராணுவம், விடுதலைப்புலிகளது முகாம்கள் அமைந்திருந்த பிரதேசம், அவர்களின் பாதுகாப்புகளுக்காக, தற்காப்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே காணப்பட்டன.

ஆட்களை இலக்குவைத்து புதைக்கப்பட்ட நிலக்கண்ணிவெடிகள் பல்வேறு வகைப்படுகின்றன. இவற்றில் மிதிவெடிகள் முக்கியம் பெறுகின்றன. அதேநேரத்தில் யுத்ததாங்கிகளை இலக்காகக் கொண்டு புதைக்கப்பபட்ட, பொருத்தப்பட்ட கிளைமோர் போன்ற கண்ணி வெடிகள் ஆபத்தானவையாகும். இவை மரங்கள் வீதி அடையாள தூண்கள், கட்டங்களிலிருந்தும் இன்னும் பல இடங்களிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளன.

வெடிக்காத நிலையில் இருக்கும் பொருட்கள் மிக ஆபத்தானவையாகும். இதில் யுத்த வேளையில் ஏவப்பட்ட எறிகணைகள், துப்பாக்கிகளின் ரவைகள், செல்கள், கைக்குண்டுகள் போன்றவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவைகளாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக இருந்த பிரதேசங்கள், அதிக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரதேசங்களாக இருந்தன.

விடுதலைப்புலிகள் தவிர இராணுவமும் தங்களது பாதுகாப்புகளுக்காக நிலக்கண்ணிவெடிகளைப் புதைத்திருந்தனர். குறிப்பாக, ஏறாவூர் பற்று பிரதேசத்தின் ஈரளக்குளம்.

அதேநேரம், செங்கலடி, கொம்மாதுறை, சந்திவெளி, சித்தாண்டி, மாவடிவேம்பு, பாலையடிவெட்டை, கறுவாக்கேணி, கிண்ணையடி, கும்புறுமூலை, கண்ணகி புரம், முறக்கொட்டான்சேனை, கருங்காலியடிச்சோலை, கிரான், பிறைந்துறைச்சேனை உள்ளிட்ட பல பிரதேசங்களில் அதிகளவான நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 6.46 சதுர கிலோமீற்றர்கள் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டன. இவற்றில் முதல் கட்ட நடவடிக்கைகளின் ஊடாக விடுவிக்கப்பட்டு, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளின் மூலம் ஆள் இலக்கு வெடி பொருள்கள் 20,096 கண்டுபிடிக்கப்பட்டன. தாங்கிகளை இலக்கு வைத்தவை 10, வெடிக்காத வெடிபொருள்கள் 48,244 மற்றும் சிறிய ரக வெடிக்காத பொருள்கள் 102 உம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இலங்கை இராணுவத்தின் மனிதாபிமான நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவு, ஹலோ ரஸ்ற், மக், டஸ், ஸாப் ஆகிய நிறுவனங்கள் பாரிய பங்களிப்பை வழங்கின. இதற்காக சுமார் 4,000 மில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கம் செலவிட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள் 10,000 மில்லியன் ரூபாய்க்கும் கூடுதலான தொகையைச் செலவிட்டிருப்பதாக அறியக் கிடைக்கின்றது. இதுவரை நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 12,76,898 நிலக்கண்ணிவெடிகள் (மனிதர்களை அழிக்கும் 7,22,029 கண்ணிவெடிகள் ,யுத்தத் தாங்கிகளை அழிக்கும் 1,972 கண்ணிவெடிகள் 5,52,892 வெடித்துச் சிதறாத ஆயுதங்களின் எச்சங்கள் என்பன)அகற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், திருகோணமலை, அம்பாறை,அநுராதபுரம், பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட 27.3 சதுர கிலோமீற்றர் பரப்பளவு இன்னும் நிலக்கண்ணிவெடிகள் பரம்பியுள்ள பகுதியாகக் காணப்படுகின்றது.

எதிர்வரும் மூன்று வருடங்களில் அவற்றை அகற்றும் பணியைப் பூர்த்திசெய்து, 2020 அளவில் இலங்கையை நிலக்கண்ணிவெடி அபாயமற்ற ஒரு நாடாக மாற்றுவதே இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பு நிறைவேறவேண்டும்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டாலும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமாதான நடவடிக்கைகள் முற்றுப்பெற்று விடவில்லை. அதில் காணி விடுவிப்பு என்பது முதன்மை இடத்தில் இருக்கிறது.

இந்தக்காணி விடுவிப்புக்குச் சொல்லப்படுகின்ற பிரதான காரணம், நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் வேலைகள் நிறைவு பெறவில்லை என்பதாகும்.

ஆனால், யுத்தம் நிறைவு பெற்று, பத்து வருடங்களை எட்டும் வேளைக்குப்பின்னரும் இன்னமும் காலம் எடுக்கும் என்று அரசாங்கம் சொல்வதை மக்கள் கவலையுடனேயே கேட்டுக் கொள்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டமானது நிலக்கண்ணி வெடிகள் அற்ற முதலாவது மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டாலும், இலங்கையில் நடைபெற்றுவரும் சமாதான முன்னெடுப்புகளில் சர்வதே நாடுகளின் அழுத்தங்கள், பிரசன்னங்கள், உதவிகள் தொடர்ந்த வண்ணமிருந்தாலும் காலம் தாழ்த்தப்படும் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுறுத்தல்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam