தமிழ், முஸ்லிம் இன அடையாள கட்சிகளின் செல்வாக்கில் வீழ்ச்சி?..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 1 Second

image_90bfd9ea20வடக்கு, கிழக்கின் அரசியல், ‘எதிர்நிலை’ மாற்றங்களை நோக்கிச் செல்கிறதா? இந்தப் பிராந்தியங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முன்னரை விட, வாய்ப்பானதொரு சூழல் ஒன்று உருவாகி வருகிறதா?

பிராந்தியக் கட்சிகள் அல்லது இன அடையாளக் கட்சிகள் என்பவற்றின் செல்வாக்கு வீழ்ச்சியடைகிறதா? அதாவது, தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதக் கட்சிகளின் ஆதிக்கம் வலுவிழக்கிறதா?

மக்கள் தமது தேவைகளுக்குப் பொருத்தமானது என நம்பும் புதிய வழிகளைத் தேடுகின்றனரா? அதற்கான காரணம் என்ன?

பிராந்தியக் கட்சிகளை விட, தேசியக் கட்சிகள் என்று குறிப்பிடப்படும் சு.கவும் ஐ.தே.கவும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு எந்தளவுக்கு உபயோகமாக இருக்கும்?

இந்த மாதிரியான கேள்விகள் இன்று தமிழ், முஸ்லிம் சமூகங்களில் சிந்திக்கும் தரப்பினரிடையே பலமாக எழும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்குக் காரணம், வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக் கொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதக் கட்சிகளினதும் அவற்றின் அரசியல் செயற்பாடுகளினதும் பலவீனமான, குறைபாடான போக்கேயாகும்.

அதாவது தமிழ், முஸ்லிம் மக்களுடைய எதிர்பார்க்கைகளையும் தேவைகளையும் நிறைவேற்றக்கூடிய நிலையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை என்பதால் ஏற்பட்ட விளைவே இது எனலாம்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் அரசியலே செல்வாக்குச் செலுத்துகின்றது. இரண்டு மாகாணங்களிலும் உள்ள மாகாணசபைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பின் கைகளிலேயே உள்ளன.

இரண்டு மாகாணங்களிலும் உள்ள எட்டு மாவட்டங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் மொத்தமாக 29. போனஸ் இரண்டு.

இருந்தாலும் இவற்றினால் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தேவைகளையும் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவு செய்ய முடியவில்லை.

இந்தப் பிராந்திய மக்களின் பொருளாதார முன்னேற்றம் உட்பட இயல்பு வாழ்க்கையின் மேம்பாடானது எதிர்பார்க்கும் உயர் நிலையை அடைய முடியாதிருக்கிறது. அதற்கான முயற்சிகளில் தமிழ்க் கட்சிகளும் சரியாக முறையில் இறங்கவில்லை; முஸ்லிம் கட்சிகளும் முயற்சிக்கவில்லை என்ற மனக்குறையே மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

அதைப்போல, அரசியல் ரீதியான தீர்வு முயற்சிகள், சமூகங்களின் பாதுகாப்பு, அவற்றுக்கான அந்தஸ்து, இராணுவ நெருக்குவாரத்தை நீக்குதல், அரசியல் உரிமைகள் போன்றவற்றிலும் இந்தத் தரப்புகள் வெல்லும் திறனற்றவையாகவே உணரப்படுகின்றன.
முக்கியமாக வடக்கு, கிழக்கு மாகாணசபைகளின் இயங்கு முறைமை மக்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. வடக்கு மாகாண சபை, இதில் இன்னும் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. வட மாகாணசபையின் வினைதிறனற்ற செயற்பாடுகள், ஊழல், அதிகாரப்போட்டி போன்றவையெல்லாம் மக்களைச் சலிப்படைய வைத்துள்ளன.

இதனால், இந்த மாகாணசபை ஆட்சியையும் நிர்வாகத்தையும் மக்கள் எரிச்சலோடுதான் பார்க்கின்றனர். இவற்றைச் சரிப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் மந்த நிலையைக் கொண்டிருப்பது மக்களுக்கு மேலும் சினத்தை உண்டாக்கியிருக்கின்றன.

ஏறக்குறைய இதேநிலைதான் கிழக்கு மாகாணசபையின் நிலையிலும் காணப்படுகிறது. கடற்படை அதிகாரி ஒருவர் கிழக்கு மாகாண முதலமைச்சரை அவமதித்த பிரச்சினையில் முஸ்லிம் தலைமைத்துவங்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை என்பது முஸ்லிம் மக்களுக்குப் பெரிய மனக்குறையை உண்டாக்கியிருக்கிறது.

முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களாகிய எங்களுடைய நிலை என்ன என்பதே அவர்களுடைய மனதில் உள்ள கேள்வி. முஸ்லிம்கள், சிங்களப் பௌத்த மேலாதிக்கச் செயற்பாடுகளால் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை கிழக்கு மாகாணசபையும் முஸ்லிம் தலைமைகளும் தீர்க்க முடியாதிருப்பது இன்னொரு ஏமாற்றம்.

ஆகவே, உச்ச செல்வாக்கைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தம்மீதான நம்பிக்கையைத் தக்கவைப்பதற்குத் தவறியிருக்கின்றன.

இதனால், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடத்திலே வேறு வகையான எண்ணப்பாடுகள் உருவாக்கம் பெற்றுவருகிறது. பிராந்தியக் கட்சிகளை விட, இன அடையாளக் கட்சிகளை விட, அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற ஐ.தே.கவையும் சு.கவையும் ஆதரிப்பதன் மூலமாகத் தமக்குத் தேவையான ஆகக்கூடிய வாய்ப்புகளைப் பெறமுடியும் என்ற ஒரு நம்பிக்கை சனங்களிடம் ஏற்பட்டு வருகிறது; அல்லது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஏனெனில், இன்றைய நிலையில் பிராந்தியக் கட்சிகள் அல்லது இனத்துவக் கட்சிகளினால் ஒரு நிறைவான அரசியல் தீர்வையோ அரசியல் உரிமைகளையோ பெற்றுத் தர முடியாதிருக்கிறது என்பது ஏறக்குறைய நிரூபணமாகிவரும் ஒன்று.

தற்போது ஆட்சியிலிருக்கும் நல்லாட்சி அரசாங்கம் என்ற கூட்டரசாங்கத்துக்குக்கூட தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான அரசியல் உரிமைகளைப் பற்றிய, தெளிவான விளக்கங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

அரசாங்கத்துக்கு ஆதரவளித்துக்கொண்டும் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில்கூட, இந்தச் சமூகங்களின் அரசியல் உரிமைகள் பற்றிய தெளிவான சித்திரத்தை அரசாங்கத்திடமிருந்து பெற முடியாதிருக்கும் சக்திகளால் எப்படி நிரந்தரமான ஒரு தீர்வை நோக்கிப் பயணிக்க முடியும்? என்ற எளிய கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இதுவே இந்தச் சக்திகளின் மீதான நம்பிக்கையீனமாக உருவாகியுள்ளது.

ஆகவே குறைந்த பட்சமாக, நிலவுகின்ற இந்தச் சூழலுக்குள் தமது வாழ்க்கைத் தேவைகளையாவது நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றே மக்கள் சிந்திக்க முற்படுகின்றனர்; இதையே அரசாங்கமும் எதிர்பார்க்கிறது.

பிராந்தியக் கட்சிகளிடமிருந்து அல்லது தமிழ், முஸ்லிம் கட்சிகளிடமிருந்து விடுபட்டுத் தம்மை நோக்கி வரக் கூடிய ஒரு பொறியை, அது உருவாக்கியிருக்கிறது. இதில் ஐ.தே.கவும் சு.கவும் ஒரே நிலைப்பாட்டுடன்தான் செயற்படுகின்றன.

இதற்கேற்ற வகையான தெரிவுகளை நோக்கிச் செல்வதற்கான மன நிலை தற்போது தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடம் உருவாக்கம் பெற்று வருகிறது. இதைச் சிலர் மறுத்துரைக்கக்கூடும்.

மக்கள் இந்த அலையில் அடிபட்டுப்போக மாட்டார்கள். அவர்கள் எந்த நிலையிலும் தங்கள் அடையாளங்களைக் கொண்டிருக்கும் கட்சிகளை விட்டு வெளியே சிந்திக்க மாட்டார்கள் என சு. க, ஐ.தே.க இரண்டும் தமது சார்பாக நியமித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் வடக்கு, கிழக்கில் பெரிய அளவில் ஒரு செல்வாக்கு மண்டலத்தை மேற்குறித்த கட்சிகளுக்கு உருவாக்க முடியவில்லை எனவும் கூறலாம். இதற்கு அவர்கள் கடந்த காலத்தின் உதாரணங்களை அடுக்க முடியும்.

ஆனால், அன்றைய நிலை வேறு; இன்றைய நிலை வேறு. அப்போது கூட மெல்ல மெல்ல இந்தக் கட்சிகளை நோக்கி மக்கள் செல்லும் ஒருநிலை வளர்ச்சிபெற்று வந்தது.

அதற்கு ஆயுதந்தாங்கிய அரசியல் இடமளிக்கவில்லை. சிங்களக்கட்சிகளுக்கு ஆதரவளிப்போர் துரோகிகள்; தண்டிக்கப்படுவார்கள் என்று கூறி அந்தக் கட்சிகளின் முகவர்களும் பிரதிநிதிகளும் கொல்லப்பட்டனர். பின்னர், அவற்றுக்கான ஆதரவுச் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டன.

இன்றைய நிலை அப்படியான ஓர் இயங்குமுறைக்குரியதல்ல. தவிர, சனங்கள் போரினால் ஏற்பட்ட இழப்பு, அலைச்சல்களினால் மிகக் களைப்படைந்த நிலையில் உள்ளனர். இந்த அவல நிலையிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுபடவே அவர்கள் விரும்புகிறார்கள்.

தவிர, என்னதான் தமிழ்த்தேசிய உணர்வையூட்டினாலும் சமூகத்தின் அத்தனை மேல்நிலைத்தரப்புகளும் தமிழ்த்தேசியம், முஸ்லிம் தேசியம் என்று பேசினாலும் அதையெல்லாம் கடந்து மக்கள் வேறு தெரிவுகளையும் செய்தே வருகிறார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

எல்லாக் காலத்திலும் அவர்கள் ஒரே தெரிவுகளுக்குள் மட்டுப்பட்டிருக்கவில்லை. அவர்கள் பன்மைத்துவத்தெரிவுகளுக்கு இடமளித்தே வந்திருக்கின்றனர். எப்போதும் சு.க, ஐ.தே.க, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என வேறு தெரிவுகளைச் செய்திருக்கிறார்கள். ஏன், இயக்கங்களின் உருவாக்கத்தின்போது கூட பன்மைத்துவ அடிப்படையில் இடது சாரிய நிலைப்பட்ட இயக்கங்கள், தீவிர இனநிலைப்பட்ட தேசியவாத இயக்கங்கள் என 30 க்கு மேற்பட்ட இயக்கங்கள் உருவாகியுள்ளன. முஸ்லிம் அரசியலிலும் ஒரு கட்சி, ஒற்றைத் தெரிவு என்பதற்கு அப்பாலான பன்முகம் உண்டு.

ஆகவே வடக்குக் கிழக்குச் சமூகங்கள் பல தெரிவுகளுக்கு இடமளிக்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டவை என்பதை மனங்கொண்டே சிந்திக்க வேணும். எனவேதான் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாத அல்லது அடையாளக்கட்சிகள் செயலாற்ற வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் சு.கவுக்கும் ஐ.தே.கவுக்குமே மழை பொழியும்.

நிச்சயமாக இது ஒரு அபாயகரமான போக்கேயாகும். வெளித்தோற்றத்தில் இன அடையாளத்தை விட இலங்கை முழுவதற்குமான தேசியவாத அரசியலில் சங்கமிப்பது முற்போக்கானதாகவும் சிறந்ததாகவும் தோன்றலாம். ஆனால், ஏனைய இனங்களின் இருப்பு மற்றும் அவற்றின் அடையாளம் குறித்த கரிசனையற்ற ஐ.தே.க, சு.க அரசியலில் பிற சமூகங்கள் உள்வாங்கப்படுவது அந்தச் சமூகங்களைக் கரைத்துப் பலவீனமடையவே செய்யும். தமிழ், முஸ்லிம் தரப்புக் கட்சிகளிடத்திலும் அந்த அரசியலிலும் குறைபாடுகளும் பிற்போக்குத் தன்மைகளும் இருக்கலாம். ஆனால், அந்தச் சமூகங்களின் அடிப்படைகளை இழக்கும் நிலையைக் கொள்ளும் அரசியலைத் தெரிவு செய்ய முடியாததே.

யுத்தகால நெருக்கடி, யுத்தம் முடிந்த பிறகான மஹிந்த ராஜபக்ஷ கால ஆட்சி ஆகியவை தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாத அரசியலை உறுதிப்படுத்தி வைத்திருந்தன. இப்பொழுதும் கூட மென்னிலை இராணுவப் பிரசன்னங்களும் பௌத்த மேலாதிக்கச் செயற்பாடுகளும்தான் தமிழ், முஸ்லிம் தேசியவாதத்தைக் கட்டிறுத்தி வைத்திருப்பதற்கு உதவுகின்றனவே அல்லாது; தமிழ், முஸ்லிம் தேசியவாதக் கட்சிகளின் செயற்பாடுகளல்ல. ஆகவேதான் இவற்றின் செல்வாக்கை மீறி ஐ.தே.கவும் சு.கவும் இன்று இந்தப் பிராந்தியத்தில் செல்வாக்கைப் பெறும் போக்குத் தென்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹாலிவுட்டில் கால்பதித்த ஏ.ஆர். ரகுமானின் தங்கை..!!
Next post கேளிக்கை வரி: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது – டி.ராஜேந்தர்..!!