‘பிக் பொஸ்’ வீடாக மாறிவிட்டதா வடக்கு மாகாண சபை?..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 9 Second

image_6dac2e10edஇந்தியத் தொலைக்காட்சிகளில் இது ‘பிக் பொஸ்’ (BiggBoss)காலம். தமிழில் ஒளிபரப்பாகும் ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார்.

தெலுங்குப் பக்கம் ஜூனியர் என்.டி.ஆரும், ஹிந்தியில் 11வது தடவையாக சல்மான் கானும் தொகுத்து வழங்கப் போகிறார்கள்.

வெளித்தொடர்புகள் ஏதுமற்ற ஒரு வீட்டுக்குள் பல தளங்களிலும் இயங்கும் பத்துக்கு மேற்பட்டவர்களை வசிக்கவிட்டு, அவர்களுக்கிடையிலேயே நிகழும் ஊடாடல்கள் மற்றும் போட்டிகளை மையப்படுத்தி 100 நாட்களுக்கு நீட்டி நிகழ்ச்சியை முடிப்பார்கள்.

குறித்த நிகழ்ச்சி, தெளிவான திரைக்கதையோடு வடிவமைக்கப்பட்டாலும், அதன் ஒளிபரப்பின் போது, தோற்றுவிக்கப்படும் இயல்பு நிலை (Reality), மக்களை மணிக்கணக்கில் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார வைக்கின்றது. அதுதான், நிகழ்ச்சியின் வெற்றியாகவும் பெரு வர்த்தகத்துக்கான வாசலாகவும் இருக்கின்றது.

தமிழில் தற்போது ஒளிபரப்பாகும் ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சி தொடர்பில் பெருமளவானோர் தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றார்கள். ஆனால், அதிருப்தி வெளியிடுபவர்களிலேயே அதிகளவானோர் தொடர்ந்தும் நிகழ்ச்சியைப் பார்த்து வருகின்றார்கள். அது ஏன் என்று அவர்களைக் கேட்டால், “முழுமையான நிகழ்ச்சியையும் பார்த்தால்தான், அந்த நிகழ்ச்சி தொடர்பில் வெளிவரும் நையாண்டி வீடியோக்களைப் புரிந்து கொள்ளமுடியும்; இரசிக்க முடியும்” என்கிறார்கள். அந்த நிகழ்ச்சியை திட்டிக் கொண்டே அந்த நிகழ்ச்சியின் பெரும் வெற்றிக்கு இவர்கள் காரணமாக இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு நாளுக்குமான நிகழ்ச்சி முன்னோட்டங்களை (Promo)சர்ச்சைக்கான வழிகளோடே ஒளிபரப்புவார்கள். அந்த முன்னோட்டங்களைப் பிடித்துக் கொண்டே நூற்றுக்கணக்கான நையாண்டி வீடியோக்கள் (ROLF Videos) இணையத்தை நிரப்பத் தொடங்கிவிடும். இதுதான் இன்றையநிலை.

‘பிக் பொஸ்’ நிகழ்ச்சி போன்றதொரு சூழலே இப்போது வடக்கு மாகாண சபைக்குள்ளும் அதை முன்னிறுத்தியும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பத்தியாளர் கடந்த நான்கு வாரங்களாக வடக்கு மாகாண சபை மற்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முன்னிறுத்திய பத்திகளையே எழுதியிருக்கின்றார்.

இதுதான், இங்கு அரசியல் எழுதும் பெரும்பாலானவர்களின் நிலை. ஒரு கட்டத்தில் சலிப்பு ஏற்பட்டு, மற்றைய விடயங்களைத் தொடவேண்டும் என்று கவனம் செலுத்தினாலும், அதை மீறிய விடயங்கள் ஏதாவது, வடக்கு மாகாண சபைக்குள் நிகழ்ந்து, திரும்பவும் அதற்குள்ளேயே மீண்டும் மீண்டும் புரள வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

‘பிக் பொஸ்’ நிகழ்ச்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டே, கொட்டக் கொட்ட முழித்திருந்து பார்ப்பவர்களின் நிலைதான், இந்த அரசியல் பத்தியாளர்களுக்கும்.
சரி, இப்போது கடந்த வார காட்சிகளுக்கு சென்றுவிடுவோம்,
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை வெளியாகிய பின், நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர், கூடிய மாகாண சபை அமர்வு அமைதியாக நடைபெற்று முடிந்தது.

புதிய அமைச்சர்கள் இருவரது நியமனம் தொடர்பிலும் பெரிய பிரச்சினைகள் இன்றி விடயம் தீர்க்கப்படும் என்று பலரும் நம்பினார்கள். குறிப்பாக, இம்முறை தமிழரசுக் கட்சி பெரும் தலையீடுகளைச் செய்யாது; முதலமைச்சரிடமே விடயங்களை விட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடும் என்று நோக்கப்பட்டது.

கல்வி அமைச்சுக்கான பரிந்துரையாக இம்மானுவேல் ஆனோல்ட்டை தமிழரசுக் கட்சி முன்மொழிந்தாலும் முதலமைச்சர் அதைக் கருத்தில் கொள்ளாத நிலையில், விடயத்திலிருந்து தமிழரசுக் கட்சி வேண்டாவெறுப்பாக விலகிவிட்டது.

ஆனால், இப்போது பிரச்சினைகள் தோன்றியிருப்பது முதலமைச்சருக்கு ஆதரவான கூடாரத்துக்குள்; பிரச்சினைகளைத் தோற்றிவித்திருப்பது முதலமைச்சர்(!). முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட காலத்தில் அவருக்கு ஆதரவாக இயங்கியவர்களில் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கியமானவர்.

அப்போதே, அவரை, அமைச்சுப் பதவியை ஏற்குமாறு முதலமைச்சர் கேட்டிருக்கின்றார். எனினும், தனக்கு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்கும் எண்ணம் ஏதும் இல்லை என்று சிவாஜிலிங்கம் மறுத்துவிட்டார். அதை, அவர் ஊடக சந்திப்பொன்றை நடத்தியும் அறிவித்தார்.

இந்தநிலையில், முதலமைச்சர் ஆதரவுக் கூடாரத்துக்குள், வெற்றிடமான அமைச்சுப் பதவிகளுக்கான போட்டியும் திரைமறைவு காய்நகர்த்தல்களும் பெருமளவு இடம்பெற்றன. இறுதியில், முதலமைச்சரின் வீட்டுக்குள் இருக்கும் சிலரின் தலையீடுகளோடு விடயம் முடிவுக்கு வந்தது.

அனந்தி சசிதரனும் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டார்கள். அவர்கள் அமைச்சர்களாக பதவியேற்கும் போதும், அவர்கள் தமது பொறுப்புகளை ஏற்கச் செல்லும் போதும், அவர்களோடு சென்ற ஒரே மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மட்டுமே.

பொ.ஐங்கரநேசன் வகித்த அமைச்சுப் பதவியின் கீழ் நிதிப் பங்கீடுகள் அதிகமுள்ள விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றாடல் உள்ளிட்ட முக்கிய விடயங்களைத் தன்னோடு வைத்துக் கொண்ட முதலமைச்சர், புனர்வாழ்வு,கூட்டுறவு பிரிவுகளை மட்டும் வழங்கி, அனந்தியை ஒப்புக்கு அமைச்சராக்கியிருக்கின்றார். அனந்தியிடம் வழங்கப்பட்ட அமைச்சுகளில் கூட்டுறவு மட்டுமே சற்று அதிகாரமும் நிதிப் பங்கீடும் கொண்டது.

இந்த விடயம் பற்றிக் கேட்டபோது, முதலமைச்சர் ஆதரவு அணி உறுப்பினர் ஒருவர் கூறினார், “அனந்தியிடம் இப்போது வழங்கப்பட்டுள்ள அமைச்சுகளுக்கு நிதிப் பங்கீடே கிடையாது. சமூக நலம், புனர்வாழ்வு என்றுபெயர் இருந்தாலும், அங்கு நிதி இல்லை. கூட்டுறவு அமைச்சே சற்று அதிகாரம் பொருந்தியது.

ஆனால், கூட்டுறவு அமைச்சைப் பயன்படுத்தி, மே தினத்துக்கு கூட்டத்தைச் சேர்க்க முடியும். அதைக் கருத்தில்கொண்டுதான், முதலமைச்சர் அந்த அமைச்சை அனந்தியிடம் வழங்கியிருக்கின்றார். அனந்தி இப்போது பெற்றிருக்கின்ற அமைச்சுக்கு அலுவலகமே கிடையாது. முதலமைச்சர் அலுவலகத்துக்குள் ஏதாவது மூலைக்குள்அமர்ந்திருக்க வேண்டி வரும்.” என்றார்.

இன்னொரு பக்கம், முல்லைத்தீவு மாவட்டம் இம்முறையும் ஏமாற்றப்பட்டிருக்கின்றது. இறுதி மோதல்களினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டமொன்றுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவது அவசியமானது என்று, வடக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்ததும் வலியுறுத்தப்பட்டது. அந்தக் கோரிக்கை தொடர்ந்தும் இருந்து வந்தது.

அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலிங்கக் கூடிய சந்தர்ப்பமொன்று வந்த போதும், அதைக் கருத்தில்கொள்ளாமல் முதலமைச்சர் தட்டிக் கழித்திருக்கின்றார். அவர், தட்டிக் கழிப்பதற்காக முன்வைத்த காரணமொன்றும் இன்னொரு பெரும் பிரச்சினையைத் தோற்றுவித்திருக்கின்றது.

அதாவது, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மாகாண சபைக்குத் தெரிவான புளொட் உறுப்பினரான க.சிவநேசன் மீது, ஊடகவியலாளர் சிவராம் படுகொலையோடு சம்பந்தப்படுத்தி முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்வைத்துள்ள பாரதூரமான குற்றச்சாட்டு. மற்றும், அந்தக் குற்றச்சாட்டை ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியமையாகும்.

அமைச்சர்கள் நியமனம் தொடர்பில், தனது ஆதரவு அணி உறுப்பினர்களிடம் சுயவிவரக் கோவையைக் கோரிய முதலமைச்சர், அதைப் பரிசீலித்துப் பதில் கடிதம் அனுப்பியிருக்கின்றார். முதலமைச்சரின் கோரிக்கையை அடுத்து, க.சிவநேசனும் தனது சுயவிவரக் கோவையை அனுப்பியிருக்கின்றார்.

அதைப் பரிசீலித்த முதலமைச்சர், அமைச்சுப் பொறுபை வழங்க முடியாமைக்கான காரணங்களை நேரடியாகக் கூறாது, சிவராம் படுகொலை தொடர்பில் புளொட் அமைப்பும் சிவநேசனும் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சாட்டி, பதில் கடிதம் எழுதியிருக்கின்றார்.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட தருணத்தில், முதலமைச்சருக்கு ஆதரவாக இருந்த 14 உறுப்பினர்களில், மூவர் புளொட் உறுப்பினர்கள். குறித்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதில் ஈடுபட்டவர்களில் புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் முக்கியமானவர்.

தன்னுடைய அணியைப் பலப்படுத்தும்போது, சிவராம் படுகொலையோடு சம்பந்தப்பட்டவர்களாகத் தோன்றாத புளொட் அமைப்பும், அதன் உறுப்பினர்களும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவியைக் கோரியதும், குற்றவாளிகளாகத் தோன்றுவது எவ்வாறான ‘நீதி’ என்பதை நீதியரசர் விக்னேஸ்வரன் கூற வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அத்தோடு, தனிப்பட்ட ரீதியில் எழுதப்பட்ட பதில் கடிதத்தை, ஊடகங்களிடம் பகிரங்கப்படுத்தியமையை எவ்வாறான நிலையாகக் கொள்வது. அது, அரசியல் ஆளுமையின் என்ன வடிவம்?

சிறுமிகள் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலைக் குற்றங்களில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட பிரேமானந்தா என்கிற நபரை, “குற்றவாளி இல்லை” என்று ஊடகங்களின் முன்னால் எந்தவித தார்மீகமும் இன்றி கூறிக் கொள்ளும் நீதியரசர் விக்னேஸ்வரன், வழக்கு விசாரணைகளின்போது, எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத, விசாரிக்கப்படாத, சாட்டப்படாத க.சிவநேசன் என்கிறவர் மீது, சிவராம் படுகொலையோடு சம்பந்தப்படுத்தி, அமைச்சுப் பதவிக்கான கோரிக்கையை மறைமுகமாக நிராகரித்திருப்பது, என்ன வகையிலான நீதி? தமிழ்த் தேசிய அரசியலின் அஞ்சலோட்டக் கோல் (Race Baton) இன்னும் முதலமைச்சரிடமே இருக்கின்றது என்று எந்தவித தயவு தாட்சண்யமும் இன்றிக் கூறிக் கொள்பவர்கள், இதற்கும் பதில் எழுத வேண்டும்.

விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபை என்கிற ‘பிக் பொஸ்’ வீட்டுக்குள் ஒரு போட்டியாளர். ஆனால், அவருக்கான ஆணையை அவரின் வீட்டுக்குள் இருக்கும் மூலோபாய ஆலோசகர்கள் என்கிற அடையாளத்தோடு இருக்கும் நபர்களே வழங்குகின்றார்கள். அவர்கள், முதலமைச்சரின் முகத்தை முன்னால் வைத்துக் கொண்டு கருமங்களை ஆற்றுகின்றார்கள்.

அதுதான், அபத்தங்களின் வழிகளைத் திறப்பதுடன், அந்தப் பழிகளை முதலமைச்சர் மீதும் போடுகின்றது. அனந்தி சசிதரனுக்கு வழங்கப்பட்ட அதிகாரமில்லாத அமைச்சுப் பதவியின் பின்னாலும், க.சிவநேசன் மீதான குற்றச்சாட்டுக்களிலும் அதுவே மேலோங்கி நிற்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘அந்த’ இடத்தில் சத்திர சிகிச்சை செய்துக் கொண்ட அஜித் பட நாயகி..!!
Next post ஜெயம்ரவியுடன் ஜோடியாக நடித்தது அதிர்ஷ்டம்: சாயிஷா..!!