புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் உங்கள் பாலியல் வாழ்க்கையைப் பெறுவது எப்படி..!!
புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுவதும் அதற்கான சிகிச்சை பெறுவதும் ஒருவரின் பாலியல் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவரால் பாலியல் உறவில் ஈடுபடவோ அதில் சந்தோஷம் அடையவோ முடியாமல் போகலாம். இந்நிலையில் எழும் வழக்கமான பிரச்சனை:
பாலியல் நெருக்கத்தில் விருப்பம் குறைதல் அல்லது முற்றிலும் விருப்பமிழத்தல், விறைப்படைவதில் பிரச்சனை அல்லது விறைப்பு நீடிப்பதில் பிரச்சனை அல்லது உடலுறவின்போது பாலியல் கிளர்ச்சி அடைவதிலோ கிளர்ச்சி நீடிப்பதிலோ பிரச்சனை, உடலுறவின்போது வலி அல்லது புணர்ச்சிப் பரவசநிலையில் மாற்றம் (அது ஏற்படும் கால அளவிலோ தாக்கத்திலோ மாற்றம்). உடலுறவு என்பது இருவருக்கிடையே உள்ள உறவின் ஒரு முக்கியமான அம்சமாகும். ஆகவே, இந்தப் பிரச்சனை உங்களுக்குள்ள உறவைப் பாதிக்கும் முன்பே, அதைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு உங்கள் பாலியல் வாழ்க்கையைத் திரும்பப் பெற சிலகுறிப்புகளை இங்கு காணலாம்
a) உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும் (Discuss with your doctor)
பெரும்பாலான சமயங்களில், ‘கேட்கலாமா கேட்கக்கூடாதா’ என்ற பிரச்சனையால் தான், புற்றுநோய் உள்ளவர்களின் பாலியல் பிரச்சனைகளுக்கான சிகிச்சை தாமதமாகிறது. ஆகவே, புற்றுநோய்க்கான சிகிச்சையால் உங்கள் பாலியல் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்க ஒருபோதும் தயங்க வேண்டாம். இந்தத் தகவல், ஆரம்பக் கட்டத்திலேயே இந்தப் பிரச்சனையை திட்டமிட்டு, சிறப்பாக அணுக உதவும்.
b) அவசரப்பட வேண்டாம் (Slow down a bit)
நீண்ட காலத்திற்குப் பிறகு இப்போது நீங்கள் பாலியல் உறவுக்குத் தயாராகிவிட்டீர்கள். ஆனால், அவசரமோ உந்துதலோ வேண்டாம். போதிய அவகாசம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் இணையருடன் நேரம் செலவழியுங்கள். புற்றுநோய் வருவதற்கு முன்பு, உங்கள் ரொமான்சை தூண்டிவிட்ட சூழ்நிலைகள் குறித்த இனிய நினைவுகளைப் பற்றிப் பேசுங்கள். இதுபோன்ற பேச்சுகளால், நீங்கள் மீண்டும் பழைய மனநிலையை அடைய முடியும். உங்கள் பாலியல் வாழ்க்கையை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற, இதுவும் ஒரு சிறந்த வழி.
c) பாலியல் இன்பம் என்பது உடலுறவில் மட்டுமே இல்லை (Sexual pleasure is not limited to intercourse)
எல்லா நேரமும் உடலுறவு வைத்துக்கொள்வது சாத்தியமில்லை. முன்பு இருந்ததைப் போல இருக்க முடியவில்லை என்று உங்களுக்கு குற்ற உணர்வு ஏற்படலாம். இது போன்ற உணர்வுகளை வளரவிட வேண்டாம். இவை புற்றுநோயை சமாளிக்கும் உங்கள் நம்பிக்கையைப் பாதிக்கலாம். அதற்குப் பதிலாக, உங்கள் இணையருடன் மனதில் உள்ளதை வெளிப்படுத்துங்கள். முத்தமிடுதல், சீண்டுதல், தழுவுதல், தொடுதல் போன்ற பல்வேறு வழிகளில் பாலியல் இன்பத்தை வரவழைக்க முயற்சி செய்யுங்கள்.
d) உடல் பற்றிய அபிப்ராயத்தை வென்று உங்கள் சுய மதிப்பீட்டை உயர்த்துங்கள் (Overcome body image and increase your self-esteem)
புற்றுநோயும் அதற்கான சிகிச்சையும் உங்கள் உடல் தோற்றத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம், இதனால் உடல் பற்றிய உங்களது அபிப்ராயத்தில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் உங்கள் நம்பிக்கை குறைந்து சுய மதிப்பீடு குறையலாம், இதன் விளைவாக பாலியல் நெருக்கத்திலான ஆசை குறையலாம். உங்களுக்கு நீங்களே உதவிக்கொண்டுதான் இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய முடியும்.
உதாரணமாக, உங்களுக்கு தலை முடி உதிர்ந்துவிட்டிருந்தால் விக் அல்லது தொப்பி அணிந்துகொள்ளுங்கள், மார்பகங்கள் அகற்றப்பட்டிருந்தால் ப்ராஸ்தெசிஸ் எனும் செயற்கை உறுப்பை அணிந்துகொள்ளுங்கள்பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம், உங்கள் பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசலாம். இன்னும் பல வழிகள் உள்ளன. இந்தச் செயல்கள் எல்லாம் உங்கள் நம்பிக்கையை மீட்டுப்பெற உதவும், இதனால் பாலியல் சார்ந்த உங்கள் விருப்பம் மேம்படும்.
e) மருந்துகள் (Medications)
பாலியல் பிரச்சனைகளை நிர்வகிப்பதற்கு என மருந்துகள் கிடைக்கின்றன. ஆண்களுக்கு விறைப்பைப் பெறவும் தக்கவைக்க்கவும், வாய்வழி எடுத்துக்கொள்ளும் மருந்துகள், ஆணுறுப்பில் செலுத்தப்படும் ஊசி, பொருத்துக் கருவிகள் (இம்ப்ளான்ட்) அல்லது வெற்றிடத்தால் அமுக்கும் கருவிகள் போன்ற பல்வேறு தீர்வுகள் உள்ளன.
பெண்களுக்கு, பெண்ணுறுப்பில் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் வழவழப்பைப் பெறவும் வலி குறைக்கவும் இன்னும் பல்வேறு தேவைகளுக்கும், பல்வேறு வெஜைனல் மாய்ஸ்டுரைசர்கள், லூப்ரிகேன்ட்கள் (வழவழப்புப் பொருள்கள்), வெஜைனல் டைலேட்டர் (பெண்ணுறுப்பை விரிக்கக்கூடிய சாதனங்கள்), லோ-டோஸ் வெஜைனல் ஈஸ்ட்ரோஜென், வெஜைனல் லிடோகெயின் அல்லது DHEA (டிஹைட்ரோஎப்பியான்ட்ரோயீஸ்ட்ரோன்) போன்றவை உள்ளன. எனினும், இது போன்ற மருந்துகள் அல்லது சாதனங்களைப் பயன்படுத்தும் முன்பு, அவற்றால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.