பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்..!!
இணையதள பத்திரிகை ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். விஜய் நடித்துள்ள சுறா படத்தை பார்த்தபோது, இடைவேளையில் வெளியே வந்துவிட்டதாகவும், ஷாருக்கான் நடித்துள்ள இந்தி படத்தை பார்த்தபோது இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.
இதனால் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படத்துடன் பலர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுபற்றி அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அத்துடன், இதுபோன்ற செயலுக்காக நடிகர் விஜய்யும் உரிய அறிவிப்பு வெளியிட்டு அவரது ரசிகர்கள் என்று சொல்பவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என நடிகர் விஜய் அறிக்கை விடுத்து உள்ளார்.
“சமுதாயத்தில் பெண்களை மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிக்க கருத்து சுதந்திரம் உள்ளது. எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும். அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.