By 5 October 2017 0 Comments

பிறந்தநாளன்று கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார் கமல்ஹாசன்?…!!

201710051250055605_KamalHaasan-to-announce-his-own-party-on-his-birthday_SECVPFகமல் ஹாசன் பிறந்தநாளான வருகிற நவம்பர் 7-ந் தேதி பொதுமக்களை சந்தித்து தனது புதிய கட்சி குறித்து கமல் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்த பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் மனதில் ஒரு எண்ணம் நிலவுகிறது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைவர்களிடையே உருவான மோதல் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டை வழி நடத்திச் செல்ல தன்னலமற்ற ஒரு தலைவர் வேண்டும் என்பதே மக்களிடம் உள்ள எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பல தலைவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த மே மாதம் ரஜினி தன் ரசிகர்களில் 15 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அழைத்துப் பேசினார். எனவே ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இரு மாதங்களுக்கு முன்பு திடீரென நடிகர் கமல்ஹாசன் மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசத் தொடங்கினார். அவருக்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. அமைச்சர்கள், “முதலில் நீங்கள் அரசியலுக்கு வாருங்கள். அரசியலில் இருந்து கொண்டு மக்கள் பிரச்சினைகள் பற்றி பேசுங்கள்” என்று கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டபடி உள்ளது.

கடந்த மாதம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி அனிதா தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பாக அரசை கடுமையாக விமர்சனம் செய்து டுவிட்டரில் தனது கருத்தை வெளியிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் டெங்கு பரவி இருப்பது பற்றியும் அவர் எச்சரிக்கை விடுத்தார். சென்னையில் மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியான போது அவர் அரசை டுவிட்டரில் விமர்சித்தார்.

கமல்ஹாசனின் டுவிட்டர் கருத்துகள் ரத்ன சுருக்கமாக இருந்தாலும் “சுளீர்” என அடி கொடுப்பது போல உள்ளது. சமூக வலைத்தளங்களில் இதற்கு ஆதரவு அதிகரித்தது.

இதற்கிடையே “பிக்பாஸ்” டி.வி. நிகழ்ச்சியிலும் கமல் ஹாசன் அரசியல் தொடர்பான கருத்துகளை சரவெடியாக வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக அவர் பேசுகையில், “அரசியலுக்கு வந்து விட்டேன்” என்று அறிவித்தார்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா… அல்லது பேசிவிட்டு சத்தம் காட்டாமல் இருந்து விடுவாரா? என்று முதலில் மக்கள் மனதில் லேசாக சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. ஆனால் சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “தமிழக அரசியலில் ஈடுபட போகிறேன். புதிய கட்சித் தொடங்குவது பற்றி பலரிடமும் ஆலோசித்து வருகிறேன்” என்றார்.

இதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது உறுதியானது.

இதையடுத்து கமல்ஹாசன் எப்போது அரசியலுக்கு வருவார்? எப்போது புதிய கட்சி தொடங்குவார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது. இந்த சமயத்தில் அவர் கேரள முதல்-மந்திரியை சந்தித்ததும் அவர் கம்யூனிஸ்டு கட்சியில் சேரக்கூடும் என்றனர். அதுபோல கெஜ்ரிவால் சென்னை வந்து அவரை சந்தித்ததும் ஆம் ஆத்மியில் சேர்ந்து விடுவாரோ என்று நினைத்தனர்.

இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்ஹாசன், “நான் எந்த கட்சியிலும் சேர மாட்டேன். புதிய அரசியல் கட்சிதான் தொடங்குவேன்” என்று அறிவித்தார். தனது அரசியல் பிரவேசம் இந்த ஆண்டு இறுதிக்குள் இருக்கும்” என்றும் தெரிவித்தார்.

சொன்னபடி கமல்ஹாசன் தற்போது தனது அரசியல் பயண தொடக்கத்துக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டார். நேற்று அவர் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளில் 100 பேரை தனது வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று கமல் ரசிகர்கள் கூறினார்கள்.

ஆனால் உண்மையில் தனது ரசிகர்களுடன் கமல்ஹாசன் அரசியல் பற்றி விரிவாக விவாதித்தது உறுதியாகியுள்ளது. மன்றத்துக்கு கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க அறிவுறுத்திய கமல் ஹாசன் புதிய கட்சி தொடங்கும் பட்சத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று கருத்து கேட்டதாக தெரிய வந்துள்ளது.

கமல்ஹாசனுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதி பிறந்த தினமாகும். அன்று அவர் தனது புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதுபற்றி அவர் ரசிகர்களுடன் பேசி ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட்டதாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் தற்போது பல ஊர்களில் டெங்கு காய்ச்சல் பரவியபடி உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்தும் வகையில் தனது நற்பணி மன்றத்தினர் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஏழை – எளியவர்களுக்கு கல்வியறிவை கொடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் படியும் நிர்வாகிகளிடம் கமல் வலியுறுத்தினார்.

புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ள கமல் ஹாசன், அதை தாமதப்படுத்தக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளார். எனவே மக்களை இப்போதே சந்தித்து பேசும்படி அவர் தனது நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளார்.

அடுத்தக் கட்டமாக கட்சி பெயர், கொடி, சின்னம் பற்றி கமல் பலருடனும் ஆலோசனையை தொடங்கி உள்ளார். விரைவில் இவை தொடர்பாக பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் நடிகர் ரஜினியும் விரைவில் தனது ரசிகர்களை மீண்டும் கூட்டி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார். இதனால் தமிழக அரசியலில் புதிய அலை அடிக்கத் தொடங்கியுள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam