By 15 October 2017 0 Comments

நீதிமன்றத் தலையீடும் தலையிடிகளும்..!! (கட்டுரை)

நீதிமன்றங்கள் என்பவை, நவீன கால மனித வாழ்வில் மிக அத்தியாவசியமானவையாக மாறியிருக்கின்றன. நீதிமன்றங்கள் இல்லாத ஒன்றை நினைத்துப் பார்ப்பதென்பது, சாத்தியமற்ற ஒன்றாகவே அமைந்திருக்கிறது. முன்னைய காலங்களில், நீதிபதிகளை மாத்திரமன்றி, நீதிமன்றத் தீர்ப்புகளையோ அல்லது நீதிமன்றக் கட்டமைப்பையோ விமர்சனத்துக்கு உள்ளாக்குவதென்பது, எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகவே காணப்பட்டது.

ஆனாலும், மாறிவரும் சூழலுக்கு மத்தியில், தீர்ப்புகள் பற்றியும் ஒட்டுமொத்தமான நீதிமன்றக் கட்டமைப்புப் பற்றியும், கட்டமைக்கப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இது, நவீன சூழலில், ஆரோக்கியமானதொரு மாற்றமாகவே காணப்படுகிறது.

இந்த ஆரோக்கியமான சூழலை, இவ்வார ஆரம்பத்தில், இந்தியாவில் காணக்கூடியதாக இருந்தது. தீபாவளிக் காலத்தில், இந்தியாவின் டெல்லியில், பட்டாசுகளை வெடிக்க வைப்பதற்கு, இந்திய உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டமை, பல்வேறான கலந்துரையாடல்களை ஆரம்பித்து வைத்திருக்கிறது. அதில், அதிகமாகக் கலந்துரையாடப்பட்ட சொற்றொடராக, “நீதித்துறையின் மீஅதிகார முயற்சி” (judicial overreach) காணப்பட்டது.

நீதிமன்றங்களும் நீதித்துறையும், மனித வாழ்வின் சிறிய சிறிய விடயங்களிலும், அளவுக்கதிகமான தலையீடுகளை மேற்கொள்வதைத் தான், மேற்படி சொற்றொடர் குறிப்பிடுகிறது. இப்படியான நிலைமை என்பது, சமூகங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தக்கூடியது என்பது, ஒரு தரப்பினரது வாதமாக இருக்கிறது. எனவேதான், நீதிமன்றங்கள் குறித்தும் அவற்றின் தலையீடுகளின் தாக்கங்கள் குறித்தும், பார்வையைச் செலுத்துவது பொருத்தமானது.

இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு என்பது, நீதிமன்றமாகத் தானாக முன்வந்து எடுத்துக்கொண்ட ஒரு விடயம் கிடையாது. மாறாக, மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, அது தொடர்பான வழக்கு இடம்பெற்றது. எனவே, நீதிமன்றமே சென்று, இவ்வழகத்தில் தலையிட்டது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளப்படக்கூடாது. அத்தோடு, பட்டாசு விற்பனை தொடர்பான சர்ச்சை, நீண்டகாலமாகவே காணப்படும் ஒன்றாகவே காணப்படுகிறது. எனவே, புதிய சர்ச்சையொன்றையும், நீதிமன்றம் ஏற்படுத்தவில்லை.

ஆனால், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பென்பது, அரசியல் ரீதியாகச் சிறந்த முடிவெடுக்கும் தலைவர்கள் இல்லாத நிலையில், பாதிப்புகள் நிறைந்த சமூகமொன்று உருவாகுமென்பதற்கு, மிகச்சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

டெல்லியில், வளி மாசடைந்து காணப்படுகிறது என்பதுவும் அது தொடர்பில் ஏதாவது உடனடியாகச் செய்யப்பட வேண்டுமென்பதுவும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக இருக்கிறது.

இதற்காகத்தான், கடந்தாண்டில், ஒற்றை இலக்கம் கொண்ட வாகனங்கள் ஒரு நாளிலும், இரட்டை இலக்கம் கொண்ட வாகனங்கள் இன்னொரு நாளிலும் செல்ல வேண்டுமென, டெல்லியில் பணிப்புரை வழங்கப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்திலிருந்து ஏராளமான வாகனங்களுக்கு விலக்களிப்பு வழங்கப்பட்டதோடு, போதுமான திட்டமிடல்களும் காணப்படாமையின் காரணமாக, அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. அதன் பின்னர், போதுமான நடவடிக்கைகள், மத்திய அரசாங்கத்தாலேயோ அல்லது மாநில அரசாங்கத்தாலேயோ எடுக்கப்பட்டிருக்கப்படவில்லை என்பது தான் உண்மையானது.

இந்நிலையிலேயே, தீபாவளிக் காலத்தில் பட்டாசுகளை விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு காரணங்களையும் ஆராய்ந்து, தீபாவளிக் காலத்தில் ஏற்படும் வளி மாசடைதல் அதிகரிப்பை ஆராய்ந்த பின்னர், ஏற்கெனவே காணப்படும் சட்டங்களுக்கு அமைவாக, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பிராந்தியத்தின் முக்கிய பகுதிகளில், வளி மாசடையக்கூடாது என்று நீதிமன்றம் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது, இதிலென்ன சர்ச்சை என்று கேள்வியொன்று எழலாம். இங்கு, முக்கியமான விடயங்கள் மறைந்திருக்கின்றன.

தீபாவளி என்பது, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. நவீன கால தீபாவளியில் – அதுவும் இந்தியாவில் – பட்டாசு என்பது, பிரிக்கப்பட முடியாத ஒரு விடயமாக இருக்கிறது. எனவே, ஒரு மதத்தில், பண்டிகையின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது என்பது, எந்தளவுக்கு ஆரோக்கியமானது என்பது தான், இப்போது இருக்கின்ற கேள்வியாக இருக்கிறது. மத விடயங்களில், நீதிமன்றங்கள், எந்தளவுக்குத் தலையிட வேண்டும் என்பது தான், இந்துக்களிடம் தற்போது இருக்கின்ற கேள்வியாக இருக்கிறது.

“மத விடயங்களில், நீதிமன்றங்கள் எந்தளவுக்குத் தலையிட வேண்டும்?” என்ற இதே கேள்வி, சில மாதங்களுக்கு முன்னர், இதே இந்தியாவில் எழுப்பப்பட்டது. அது, இஸ்லாமியர்களால் எழுப்பப்பட்டது. இஸ்லாமியர்களின் விவாகரத்து முறையான “முத்தலாக்” எனப்படும் முறை, அரசமைப்பு ஏற்புடையதா என்பதை, இந்திய உச்சநீதிமன்றம் ஆராயும் போதே, இக்கருத்துகள் எழுப்பப்பட்டன.

இலங்கையில் கூட, “மதங்களின் விடயத்தில் தலையிடக்கூடாது” என்ற கருத்து, சில காலத்துக்கு முன்னர் ஏற்பட்டிருந்தது. இலங்கையின் முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத்தைச் சீர்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களின் போதே, இக்கருத்து முன்வைக்கப்பட்டது. ஆக, மதங்களின் விடயத்தில், எந்தளவுக்குத் தலையிடுவதா? இல்லையெனில், மத விடயமெனில், நாட்டின் நீதித்துறை, அப்படியே தூர நின்றுவிட வேண்டுமா என்பது தான், முக்கியமான விவாதமாக இருக்கிறது.

“முத்தலாக்” வழக்கில், நீதிமன்றத்தின் தலையீட்டை வரவேற்ற தரப்பினர் – இதில் இந்திய மத்திய அரசாங்கமும் உள்ளடக்கம் – முன்வைத்த முக்கியமான வாதம், “மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்ற விடயங்களில், நீதிமன்றம் நிச்சயமாகத் தலையிட வேண்டும்” என்பது தான்.

அது, மறுக்க முடியாத ஒரு வாதமாகும். ஒரு மதத்தில், “எதிரிகளைக் கொல்லுங்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். மத விடயம் என்பதற்காக, அவ்விடயத்தில் தலையீடாமல் இருக்க முடியுமா? மக்களின் இருப்புக்கான ஆபத்து வரும் போது, நீதித்துறையின் தலையீடு என்பது அவசியமானதல்லவா?

இந்துக்களில் ஒரு பகுதியினரில், உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கம் இருந்தபோது, அது மனிதத்துக்கு எதிரானது என்று, தடையைக் கொண்டு வர வேண்டுமாயின், நீதித்துறையில் பங்களிப்பு அவசியப்பட்டிருந்தது. அப்போதும் கூட, பழைமைவாதிகளில் ஒரு பிரிவினர், “மத உரிமைகளில் கை வைக்கிறார்கள்” என்று, தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருக்கக்கூடும். ஆனால், சரியானதைச் செய்ய வேண்டியது அவசியமானது என்பதால், அந்த முடிவும் சிறப்பானதே.

அப்படிப் பார்த்தால், வளி மாசடைதல் என்பதுவும், மனிதர்களின் இருப்புக்கும் உரிமைக்கும் ஏற்படக்கூடிய சவாலல்லவா? ஏற்கெனவே மோசமாக மாசடைந்த வளியைக் கொண்டிருக்கும் டெல்லி, தீபாவளிக் காலத்தில், இன்னும் அதிக புகைகளைக் கொண்டிருக்கின்றமை, கடந்த காலங்களில் நேரடியாக அவதானிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இதில் தலையிடுவதில் என்ன தவறு என்ற கேள்வி எழுப்பப்படலாம். ஒரு வகையில் பார்க்கும் போது, நியாயமான வாதமாகவே காணப்படும்.

ஆனால், முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகையான பக்ரித் பண்டிகையில் பலியிடப்படும் உயிரினங்கள் தொடர்பாகவும், கிறிஸ்தவர்களுக்கு என ஆரம்பிக்கப்பட்டு, தற்போது மதசார்பற்ற ஒன்றாக மாறிவரும் கிறிஸ்மஸ்ஸுக்கு வெட்டப்படும் மரங்கள் தொடர்பாகவும் வெடிக்க வைக்கப்படும் பட்டாசு தொடர்பாகவும், புத்தாண்டுக்காக வெடிக்க வைக்கப்படும் பட்டாசுகள் தொடர்பாகவும், நீதிமன்றங்கள் தலையிடுமா என்ற கேள்வி காணப்படுகிறது.

இந்தக் கேள்விகள், இந்தப் பத்தியாளரால் எழுப்பப்படும் கேள்விகள் கிடையாது. மாறாக, இந்தியாவில், இந்துக்களின் மரபுகளும் பண்பாடுகளும், மேற்கத்தேய சக்திகளின் துணையுடன் நசுக்கப்படுகின்றன என, பாதிக்கப்பட்டோர் மனநிலையுடன் காணப்படுகின்றவர்களால் எழுப்பப்படும் கேள்விகள் தான்.

அவர்களுடைய கேள்வியின் அடிப்படையான விடயமாக இருப்பது, “எதற்காக எங்களின் பண்பாட்டில் மட்டும் கைவைக்கிறீர்கள்?” என்பது தான். அவர்களின் நோக்கத்தில் வேண்டுமானால் தவறு இருக்கலாம்; அவர்களின் தர்க்கத்தில், தவறுகளைக் கண்டுபிடிக்க முடியாது.

இப்படியான மனநிலையுடன் காணப்படுபவர்கள், பக்ரித் பண்டிகைக்கு எதிராகவோ அல்லது கிறிஸ்மஸ்ஸுக்கு எதிராகவோ, நீதிமன்றங்களை நாடமாட்டார்கள் என்பதற்கு, எதுவித உத்தரவாதமும் கிடையாது.

அவ்வாறான நிலையில், ஏற்கெனவே காணப்படும் சட்ட அமைப்புக்கு ஏற்ப, அப்பண்டிகைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய தேவை கூட, நீதிமன்றங்களுக்கு ஏற்படலாம். இது, மதங்களுக்கிடையில் மேலதிகமான முறுகலை ஏற்படுத்த வழிவகுக்குமே தவிர, இந்நிலைமையை முன்னேற்றுவதற்கு, எவ்விதத்திலும் உதவாது. இந்த நிலைமை தான், தலையிடியாக மாறிவிடுகிறது.

அப்படியானால், வளி மாசடைதலை ஏற்படுத்தும் பட்டாசு வெடிப்பை அப்படியே அனுமதிப்பதா? அவ்வாறு எப்படிச் செய்வது? அடுத்த தலைமுறைக்கு, சுவாசிக்க முடியாத காற்றையா நாங்கள் விட்டுச் செல்லப் போகிறோம்? அது எப்படி நியாயமாகும்?

இந்நிலையில் தான், அரசியல்ரீதியான தீர்வு என்பது அவசியமாகிறது. அரசியல்ரீதியான தீர்வு என்பது, அரசியல்வாதிகளால் எடுக்கப்படுவது மாத்திரமன்று. அரசியல் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான politics என்பது, politik என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது. “நகரங்களின் விவகாரங்கள்” என்பது தான் அர்த்தம். அரசியல் என்பதை, “மக்கள், குழுக்களாக முடிவெடுத்தல்” என்றும் வரைவிலக்கணப்படுத்துவர்.

இப்படியான, உணர்வுகளுக்கு நெருக்கமான விடயங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போது, சமூகரீதியான தீர்வு எட்டப்படுதல் என்பது, அனைத்துத் தரப்புகளுக்கும் பொருத்தமானதாக அமையும். பட்டாசுகளால், வளியும் சுற்றுச்சுழலும் மாசடைகின்றன என்ற விடயத்தை, மக்களிடம் கொண்டுசென்று சேர்த்துவிட்டு, பட்டாசுப் பாவனையை, அந்த மக்களே குறைப்பதற்கான ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும்.

இதற்கு, சில காலங்கள் எடுத்தாலும் கூட, எவரும் “இதில் நானும் எனது சமூகமும் மட்டுமே பாதிக்கப்படுகிறது” என்ற மனநிலையுடன் காணப்பட மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும். இதுவே, நிலைத்திருக்கக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழியாக இருக்கிறது. ஏனென்றால், இந்திய உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு, பட்டாசுகளை விற்பதற்குத் தடை விதிக்கிறதே தவிர, அவற்றை வெடிக்க வைப்பதற்கு அல்ல.

எனவே, கறுப்புச் சந்தையில் பட்டாசுகளை வாங்கி, இம்முறை தீபாவளிக்கு, முன்னரை விட அதிக பட்டாசுகளை வெடிக்க வைக்கப் போவதாக, இந்தியாவில் ஒரு தரப்பினர் புறப்பட்டுள்ளனர். சமூகரீதியான தலையீடு இல்லாமல், உணர்வுகள் பாதிக்கப்படும் இடங்களில் நீதிமன்றத் தலையீட்டைக் கோருவது, இவ்வாறான பிறழ்வான நடவடிக்கைகளை ஊக்குவிக்குமே தவிர, உண்மையான மாற்றத்தை அல்ல என்பதை, இதிலிருந்து விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.Post a Comment

Protected by WP Anti Spam