திரையில் புகைப்பது போல் தோன்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது – நடிகர் சங்கம்

Read Time:4 Minute, 58 Second

திரையில் புகைப்பது போல் தோன்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தேவையற்றது, படைப்பாளியின் உரிமையின் தலையிடும் இப்போக்கை அனுமதிக்க முடியாது என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதற்குக் காரணம் முன்னணி நடிகர்கள் திரையில் விதவிதமாக புகைப் பிடித்தபடி தோன்றுவதுதான் என இரு ஆண்டுகளுக்கு முன் உலக சுகாதார நிறுவனம் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்திருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இனி திரையில் புகைப்பது போல் முன்னணி நடிகர்கள் தோன்றக் கூடாது என அறிவித்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சந்திரமுகி, சிவாஜி படங்களில் சிகரெட், சுருட்டு புகைப்பதை அறவே தவிர்த்துவிட்டார். மது குடிப்பது போன்ற காட்சிகளும் அந்தப் படங்களில் இல்லாமல் பார்த்துக் கொண்டார். இதற்காக அவரை அன்புமணியும், பாமக நிறுவனர் ராமதாசும் வெகுவாகப் பாராட்டினார்கள். ரஜினியைத் தொடர்ந்து விஜய் மற்றும் அஜீத் போன்ற முன்னணி நடிகர்களும் திரையில் இனி புகைப்பது போல் தோன்ற மாட்டோம் என உறுதியளித்தனர். ஆனால் பாலிவுட்டில் அமைச்சர் டாக்டர் அன்புமணியின் வேண்டுகோளைப் புறந்தள்ளி விட்டனர். குறிப்பாக, புகை மற்றும் மது குடிப்பது போன்ற காட்சிகளில் அதிகம் தோன்றுவதன் மூலம் இந்தியாவில் அதிக இளைஞர்களைக் கெடுக்கும் நடிகர் என உலக சுகாதார நிறுவனத்தால் குற்றம்சாட்டப்பட்ட ஷாரூக் கான், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தொடர்ந்து புகைத்தும் வருகிறார் – சினிமாவில் மட்டுமல்ல, கிரிக்கெட் ஸ்டேடியங்களிலும். திரைத் துறையினரைக் கட்டுப்படுத்துவது அன்புமணியின் வேலையல்ல… அவர் தனது அமைச்சர் பணியை ஒழுங்காகச் செய்தாலே போதும் என அவர் கடுப்பாகக் கூறிவிட்டார். அதே போல அமிதாப் உள்ளிட்ட பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் அனைவரும் அன்புமணியின் வேண்டுகோளைப் புறக்கணித்ததுடன், கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இதைப் பார்த்த்தன் விளைவோ என்னமோ… இப்போது கோடம்பாக்க நடிகர்களும் படைப்பாளிகளும்கூட அன்புமணிக்கு எதிராகப் பேச ஆரம்பித்துள்ளனர்.

நடிகர் சங்கம்:

சிம்பு, தனுஷ் மற்றும் சிபிராஜ் போன்ற இளம் நடிகர்கள் திரையில் புகைப்பது போல் வருவதில் எந்தத் தவறுமில்லை என வாதிடுகின்றனர். இதற்கு சிகரம் வைத்ததுபோல, நடிகர் சங்கம் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

“திரையில் மது குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகள் யாரையும் கெடுப்பதில்லை. ஒருவரது குண நலனை காட்டும் குறியீடுகளாகவே இவை பயன்படுத்தப்படுகின்றன. இதில் தலையிடுவது ஒரு படைப்பாளியின் உரிமைகளைப் பறிப்பதற்குச் சமம். நடிப்பதற்கு இலக்கணம் வகுப்பது அமைச்சர் அன்புமணியின் வேலையல்ல” என வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்துள்ளார் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார்.

தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது ஒரு படத்தில் கூட புகைப்பது போலவோ, குடிப்பது போலவோ நடித்ததில்லை. ஆனால் அவரது 98 சதவிகிதப் படங்கள் வசூலை வாரிக் குவித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆரை தங்கள் ‘வாத்தியாரா’கக் குறிப்பிடும் இன்றைய நடிகர்கள் இதைக் கவனத்தில் கொள்வார்களா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையர் உட்பட மூவருக்கு 10ஆண்டுச் சிறை
Next post மன்னாரில் இயல்பு நிலை நேற்று பாதிப்பு