By 5 November 2017 0 Comments

வாய் சொல்லில் வீரரடி..!! (கட்டுரை)

இன்றைய இலங்கை அரசியல் களத்தில் ‘வாய் சொல்லில் வீரரடி’ என்பதைப் போன்றதான செயற்பாடுகளே காணப்படுகின்றன.

இலங்கைத் தேசத்துக்காக, புதிய அரசமைப்பு தேவையா இல்லையா என்ற வாதப் பிரதிவாதங்களுக்கு அப்பால், இடைக்கால அறிக்கை தொடர்பான முழுமையான தெளிவு அரசியலாளர்களிடையே ஏற்பட்டுள்ளதா அல்லது அது தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டும் அரசியல் சுயநலங்களுக்காகக் குழப்பம் விளைவிக்கப்படுகின்றதா என்பன ஆராயப்பட வேண்டும்.

குறிப்பாக, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை என்பது, எதைத்தாங்கி வந்துள்ளது? அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதான விழிப்புணர்வு போதுமான வரையில் மக்களுக்கும் அரசியலாளர்களுக்கும் வழங்கப்படாமையின் வெளிப்பாடே தற்போதைய கருத்தியல் போருக்கான காரணமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, சர்வகட்சி கூட்டமொன்றைக் கூட்டி கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து, அரசியல் கட்சியினருக்கிடையில் ஏற்பட்டுள்ள புதிய அரசமைப்புக் குறித்த விளக்கமின்மையையும் முரணான கருத்துகளையும் ஒரேமேடையில் தெளிவுபடுத்த முனைவதை வெளிப்படுத்துகின்றது.

வவுனியாவில் நடைபெற்ற ஜனாதிபதி நடமாடும் சேவையில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால, அரசமைப்புக்கான செயற்பாட்டில் நாம் இன்னும் இறங்கவில்லை; அதற்கிடையில் பலரும் ஆர்ப்பாட்டங்ளையும் ஊர்வலங்களையும் நடத்துகின்றனர் என விசனம் தெரிவித்ததுடன், ஊடகங்கள் செயற்படும் விதம் தொடர்பாகவும் விமர்சித்திருந்தார்.

அத்துடன், தற்போது வெளிவந்துள்ள இடைக்கால அறிக்கை என்பது, அனைத்துக் கட்சிகளும், புதிய அரசமைப்புத் தொடர்பாக, தமது கட்சியின் நிலைப்பாட்டை வழங்கியதன் பிரகாரம், அதன் அறிக்கை வடிவமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்குமப்பால், இவ் அறிக்கையில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்; நீக்கலாம் என்பதான கருத்தையும் முன்வைத்திருந்த நிலையில், சிங்கள அரசியலாளர்கள் எதற்காக மோதிக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி முன் நிற்கின்றது.

குறிப்பாக, இந்த இடைக்கால அறிக்கையில், தமிழர் தரப்புக்குச் சாதகமாக அமைந்துள்ளதாக ஒரு மாயைத்தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளமையும் அதற்கு ஏற்றாற்போல், தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இவ் அறிக்கையைக் கொண்டு ஆதரவு தேடுவதும், இனவாத ரீதியாகச் சிந்திக்க கூடிய, பெரும்பான்மை இனத்தவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை காலமும் தமிழ் அரசியலாளாகள், எந்த அரசமைப்பையும் ஏற்றுக்கொள்ளாத நிலையில், இவ் அரசமைப்புக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை, ஏன் தமிழர் அரசியலாளர்கள் போற்றிப் புகழ்கின்றார்கள் என்ற சந்தேகமும் காரணமாகியுள்ளது.

எனினும், அதன் உள்ளார்ந்தமான செயற்பாட்டில், தமிழர்கள் கோருகின்ற சுயநிர்ணயம், சுயாட்சி, தேசியம் என்ற எந்தவித அடிப்படை நிலைக்கும், எக்காலத்திலும் தமிழர்கள் நெருங்காத வகையிலேலே புதிய அரசமைப்பு அமையப்போகின்றது என்பதை இனவாதம் பேசும் சிங்களத் தலைமைகள் மட்டுமல்ல, தமிழ் தலைமைகளும் உணரவில்லை.

தமிழர் தரப்பு அரசியலாளர்களிடையே காணப்படும் இப் புதிய அரசமைப்புத் தொடர்பான, முரண்பாடான நிலை, தமிழர் மத்தியில் எவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தி, முழுமையான ஓர் இடைக்கால அறிக்கை தொடர்பான, தெளிவைப் பெற முடியவில்லையோ, இதேபோன்றதான நிலையே, சிங்கள மக்கள் மத்தியிலும் எற்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாகப் பௌத்த பீடங்கள் நிராகரித்ததான அறிக்கையை விடுத்துவரும் நிலையில், ஏனைய மதத்தலைவர்கள் இது தொடர்பில் அலட்டிக்கொள்ளாத தன்மையும் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலை, பௌத்த மேலாதிக்கத்தின் தன்மையை வெளிப்படுத்தியிருக்கின்றபோதிலும், அவர்கள் இலங்கைத் தேசத்தில், எவ்வாறான மாற்றங்கள் வரவேண்டும் என்பதைத் நிர்ணயிக்கும் சக்தியாகவே உள்ளனர் என்பதை மீண்டும் நிரூபிக்க முனைகின்றனர்.

‘ஒரே நாடு’, ‘ஒற்றையாட்சி’ என்ற சொற்பிரயோகங்களுக்கிடையில் உள்ள உணர்வு ரீதியான தாக்கம் காரணமாக, புதிய அரசமைப்பில், ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற பதத்தை உட்புகுத்துவதன் மூலமாக, இப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதே கேள்வியாகவுள்ளது.

பெறுமனே சொற்பிரயோகங்களுக்கு அப்பால் நல்லாட்சி அரசு என்று சொல்லப்படும் தற்போதைய அரசாங்கத்தின் மூலமாக, புதிய அரசமைப்பொன்றை இலங்கை தேசத்துக்கு அறிமுகம் செய்வதை, ஏனைய எதிர் கருத்தியல் கொண்ட கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் தங்களது கருத்துகளை முன்வையுங்கள் என்ற வேண்டுகோளை ஜனாதிபதி முன்வைத்துள்ள நிலையில், ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைக்க எந்த அரசியல் கட்சிகளும் முன்வராத நிலை காணப்படுகின்றது.

அவ்வாறெனில், எவ்வாறான தீர்வுகளை முன்வைத்து புதிய அரசமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தை எதிர்ப்பாளர்கள் கொண்டுள்ளனர் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

இதற்குமப்பால், தமிழர்களின் இன்னல்களுக்கெல்லாம் புதிய அரசமைப்பின் ஊடாகத் தீர்வு கிடைத்துவிடும் எனத் தமிழ்த் தலைமைகள் சிலர் சொல்லித்திரிவதும் அக் கருத்தை, மக்கள் மத்தியில் விதைத்து, ஆதரவைத் தேடுவதும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கும் அவர்களின் உரிமைக்கான வேட்கைக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதையும் உணர்ந்துகொள்ளத் தலைப்பட வேண்டும்.

வெறுமனே அரசமைப்பு என்பதற்கப்பால், இனி இலங்கையில் ஏற்படப்போகும் ஆட்சி மாற்றங்களின்போது, இவ்வாறான கூட்டு அரசியல் முறைமை ஒன்று ஏற்படாது என்பதைப் புரிந்தவர்களாக அரசியலாளர்கள் செயற்பட வேண்டுமே தவிர, தமது காலத்தில் பெயர் எடுப்பதற்கான செயற்பாடாக இதை முன்கொண்டு செல்வதானது, கடந்தகாலத் துரோகத் தமிழ் தலைமைகளை மக்கள் ஒதுக்கிய தன்மைக்கு, தற்போதைய தமிழ்த் தலைமைகளையும் கொண்டு சென்று விடும் என்பதை உணரத் தலைப்பட வேண்டும்.

‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்பது ‘ஒருமித்த நாடு’ என்ற பதத்துக்கு அப்பால், பிரிக்கப்படாத நாடு என்பதையே தருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்திருப்பதுடன், புதிய அரசமைப்பின் ஊடாக, நாடு பிளவுபடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இலங்கைத் தேசத்தின், இறைமை மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் கருத்தானது, தமிழர் தரப்பானது, இந்த அரசமைப்பை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், தற்போது எதிர்பார்த்திருக்கும் சர்வதேசத்தின் தலையீடுகளைக் கூட, நம்பமுடியாத வகையில், பலம் பெற்றதாக அமைந்துவிடும், என்பதான கருத்தையே தென்னிலங்கைக்குச் சொல்ல வருகின்றார்.

இதற்குமப்பால் மஹிந்த அரசாங்கத்தின் காலத்தில், தமிழ் மக்கள் மத்தியில் எள்ளளவேனும் பார்வை செலுத்தாத சிங்கள அரசியலாளர்கள், தற்போது சம்பந்தனையே புகழும் அளவுக்குச் சென்றுள்ளமையானது, தமிழர்கள் மத்தியில் சந்தேகத்தையே ஏற்படுத்தும் விதமாகக் காணப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமைக்கு, தமது உள்ளார்ந்த எதிர்ப்பை வெளிப்படுத்திய பல அமைச்சர்கள், தற்போது சம்பந்தன் காலத்திலேயே அரசமைப்பைக் கொண்டு வரவும், தமிழர்களுக்கான தீர்வை வழங்கவும் துடிப்பதானது கேள்விக்குள்ளாக்கும் விடயமாகவே உள்ளது.

ஏனெனில், தமிழ் மக்கள் மத்தியில் பலத்த முரண் கருத்தியலைக் கொண்டுள்ள தமிழரசுக்கட்சி, ஏகோபித்த முடிவாக, இடைக்கால அறிக்கையை வரவேற்பதும் இதுவே தமிழர்களின் தீர்வுக்குச் சிறந்த வழி என்பதும் உள்ளார்ந்தமான சொற்பிரயோகங்களா அல்லது அரசியல் இருப்புக்கான சாணக்கிய அணுகுமுறையா என்பதைத் தமிழ் மக்கள் மிக அவதானிப்புடன் பார்த்திருக்க வேண்டும்.

இவற்றுக்கும் அப்பால் தென்னிலங்கையில் இனவாத அரசியலாளர்களாகக் கருதப்படும் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, அனைவரையும் கொல்ல வேண்டும் என்பதான கருத்து சர்ச்சை மிகுந்ததாக இருந்தாலும் கூட, இதுவரை அவர் மீதான எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அதனுடைய உள்ளார்ந்த கருத்தையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

வெறுமனே நாடாளுமன்றத்தின் மீதான குண்டுத்தாக்குதல் என்ற கருத்து, புதிய அரசமைப்பின் பின்னரான காலப்பகுதிலேயே அவர் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றால், புதிய அரசமைப்பை பூதாகரமாகச் சிங்கள மக்கள் மத்தியில் காட்டக் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் முயற்சிப்பதையும் அவதானிக்கலாம்.

கிராமப் புற மக்களுக்கு இது தொடர்பாக புதிய தெளிவூட்டல்கள் இல்லாத நிலையில், மேல் மட்ட அரசியலாளர்களின் விடயமாகவே புதிய அரசமைப்பைப் பார்க்க முடிகின்றது.
இவ்வாறான நிலையில், தற்போது நடைபெற்று முடிந்த இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமையானது, எதிர்ப்பு அரசியலை எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சி விரும்பவில்லை என்பதைப் புடம்போட்டுக் காட்டுவதுடன், இந்த இடைக்கால அறிக்கையை ஆரம்பம் முதலே எதிர்த்துவரும் ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகள் தமிழர்களின் நிலைப்பாட்டை நாடாளுமன்றில் தெரிவித்து, இதைக் ஹன்சாட்டில் பதிவு செய்து விடும் என்பதிலும் மிகவும் அவதானமாக உள்ளனர்.

சிவசக்தி ஆனந்தனைப் பொறுத்தவரையில் யுத்த பாதிப்புகள் அதிகமாக இடம்பெற்ற வன்னிப் பிரதேசத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நிலையில், அம் மக்களின் கருத்தாக அவர் வெளியிடும் கருத்தைச் செவிமடுக்க வேண்டிய கடமைப்பாடு, இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு எதிர்க்கக் கூடாது என்ற எழுதப்படாத நியதியை தமிழரசுக் கட்சியை சார்ந்தவர்களும் அக்கட்சியை மேலாக எண்ணும் கட்சியினரும் ஏற்றுக்கொண்டாலும் மாற்றுக் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் தமிழ்த் தலைமைகளிடம் வரவேண்டும்.

யுத்தத்தின் வடுக்களைத் தாங்கிய வன்னிப் பிரதேசத்து மக்களுக்குத் தம் கருத்தைக் கொண்டு செல்லும் ஊடகமாக, தமது நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்ப்பதை மறுக்க முடியாது. எனவே, இவ்வாறான கருத்தியல்களை ஏற்றுக்கொள்ளும் தன்மையில்லாத நிலையில், பாமர மக்களின் கருத்துகளை ஏற்கும் மனப்பக்குவம் தமிழ் அரசியலாளர்களிடம் வந்துவிடும் என எதிர்பார்ப்பது ‘வானம் ஏறி வைகுண்டம் போவதற்கு சமம்’ எனக் கருதலாம்.

அத்துடன், புதிய அரசமைப்பின் உருவாக்கம் என்பது, பலத்த எதிர்ப்புகளை சந்தித்திருக்கும் இந்த நிலையில், வாய் வீரத்தால் அதைச் சாதகமாக்கி ஏதுமில்லாத வெற்று கோப்பையாக, தமிழர் எதிர்பார்த்திருக்கும் தீர்வுக்கான பரிகாரமாக, தமிழர் அரசியல் தரப்பு திணிக்க முற்படக்கூடாது என்பதே தற்போதைய கோரிக்கையாகவுள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam