பரீட்சைக்கு பயந்து 2ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன்..!!
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் பிரதியுமன், கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பள்ளி வளாகத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தான்.
விசாரணையில் பள்ளி பேருந்து நடத்துனர் பாலியல் வன்கொடுமை செய்தபோது மாணவன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, பிரதியுமன் வீட்டுக்கு முதல் மந்திரி மனோகர்லால் கட்டார் சென்று ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் கூறுகையில், பள்ளி மாணவனின் வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில், பள்ளியில் நடைபெறவுள்ள பரீட்சையை தள்ளி வைக்கவே மாணவன் கொலை செய்யப்பட்டான் என்ற அதிர்ச்சிகரமான தகவல் சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், பள்ளியில் நடைபெறவுள்ள பரீட்சையை தள்ளி வைக்கவே 11-ம் வகுப்பு மாணவன் கொலை செய்துள்ளான். இதுதொடர்பாக தடயவியல் அறிக்கையின் விவரங்களை அலசி ஆராய்ந்தோம். மேலும், பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம். இதன் முடிவில் 11-ம் வகுப்பு மாணவன் தான் கொலை செய்துள்ளது உறுதியாக தெரிகிறது. எனவே அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், சி.பி.ஐ. விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். எனது மகன் ஒரு அப்பாவி. அவனை பார்க்கக்கூட என்னை அனுமதிக்க மறுத்து வருகின்றனர் என கூறினார்.