அடுத்த படத்துக்குத் தயாரான சிவகார்த்தி..!!
வேலைக்காரன்’ திரைப்படம் டிசம்பரில் வெளிவரவிருக்கும் சூழலில் தனது அடுத்த படத்துக்குத் தயாராகியுள்ளார் சிவகார்த்திகேயன். பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 20) தொடங்கியுள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்குப் பிறகு மீண்டும் பொன்ராமுடன் கூட்டணி அமைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நாயகியாக சமந்தா நடித்துவருகிறார். சூரி, நெப்போலியன், சிம்ரன், மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, யோகி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் 55 சதவித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பிப்ரவரி 17ஆம் தேதி (2018இல்) வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.
ஒரு படம் வெளிவந்த பிறகே அடுத்த படத்திற்குத் தயாராகும் சிவகார்த்திகேயன், வேலைக்காரன் படம் வெளிவரும் முன்பே தனது அடுத்த படத்துக்குத் தயாராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.