‘ஸ்கெட்ச்’ படத்தின் டப்பிங் பணிகளை முடித்த விக்ரம்..!!
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’.
இதில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார்.
விஜயசந்தர் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ‘டப்பிங்’ வேலைகளும் நடந்து வருகின்றன. வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் விக்ரம், வடசென்னை தமிழில் வித்தியாசமாக பேசியுள்ளாராம். இந்த படத்திற்காக விக்ரம் 10 நாட்கள் டப்பிங் பேசி முடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் குரலில் கனவே கனவே என்ற ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.