By 21 June 2008 0 Comments

குசேலன்’ படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்-அஜீத்-விக்ரம்; ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறார்கள்

தமிழ் திரையுலகின் 75-வது வருட பவள விழாவையொட்டி, `சினிமா’வை பற்றிய ஒரு பாடல், `குசேலன்’ படத்தில் இடம்பெறுகிறது. இந்த பாடல் காட்சியில் ரஜினிகாந்துடன் விஜய், அஜீத், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்கள் தோன்றுகிறார்கள். கேரளாவில் வெற்றிபெற்ற `கத பறயும் போள்’ என்ற மலையாள படம், `குசேலன்’ என்ற பெயரில் தமிழில் தயாராகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த், `சூப்பர்ஸ்டார்’ ஆக நடிகராகவே நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, நடிகையாகவே வருகிறார். பசுபதியும், மீனாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.வாசு டைரக்டு செய்து இருக்கிறார். டைரக்டர் கே.பாலசந்தரின் கவிதாலயம் நிறுவனமும், செவன் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. படப்பிடிப்பு முடிவடைந்து, படம் அடுத்த மாதம் (ஜுலை) திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி டைரக்டர் பி.வாசு, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “குசேலன், என் டைரக்ஷனில் வெளிவரும் 55-வது படம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. `டப்பிங்’ வேலைகளும் முடிவடைந்தன. வருகிற திங்கட்கிழமை முதல் பின்னணி இசைசேர்ப்பு வேலை தொடங்க இருக்கிறது. `கிராபிக்ஸ்’ வேலைகள் கடந்த மார்ச் மாதமே தொடங்கி விட்டன. மே மாதம் முதல் வாரத்தில் அந்த வேலைகள் முடிவடைந்தன. அதனால் `குசேலன்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வந்துவிடும்.

ரஜினிகாந்த்

இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பசுபதி, மீனா, லிவிங்ஸ்டன், பி.வாசு, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, மயில்சாமி, தியாகு, கீதா, சோனா, பாத்திமா பாபு, ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா, சின்னிஜெயந்த் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

சிறப்பு தோற்றங்களில் பிரபு, விஜயகுமார், நிழல்கள் ரவி, மதன்பாப், குஷ்பு, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாராகி இருப்பதால், 60 நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். 4 மாதங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால், படம் 82 நாட்களில் முடிவடைந்து இருக்கிறது.

`சினிமா’ பற்றிய பாடல்

நான், டைரக்டர் கே.பாலசந்தரின் ரசிகர். அவருடைய நிறுவனத்தின் படத்தை டைரக்டு செய்ததை பெருமையாக நினைக்கிறேன். இந்த படத்தில் ரசிகர்கள் ஜாலியாக-சந்தோஷப்படுகிற அளவுக்கு, ரஜினிகாந்த் வருவார். படத்துக்கு படம் அவர் இளமையாகிக்கொண்டே வருகிறார். இந்த படத்தில் இன்னும் இளமையாக தெரிவார்.

தமிழ் திரையுலகின் 75-வது வருட பவள விழாவையொட்டி, `சினிமா’வை பற்றிய பாடல் ஒன்று `குசேலன்’ படத்தில் இடம்பெறுகிறது. “சினிமா சினிமா சினிமா எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் இவர்கள் இருந்த சினிமா…இனிமேல் இதுபோல் வருமா…கடவுளை யார் நேரில் பார்த்தது…அதை கண்ணில் காட்டியது சினிமாதான்…” என்ற அந்த பாடலை, கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார்.

விஜய்-அஜீத்-விக்ரம்

சினிமாவில் பணிபுரியும் புரொடக்ஷன் உதவியாளர்கள், லைட்மேன்கள் போன்ற தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில், இந்த பாடல் அமைந்து இருக்கிறது. 100 கைகள் சேர்ந்தால்தான் சினிமா ஜெயிக்கும் என்ற கருத்து, இந்த பாடலில் இருக்கிறது.

`சினிமா’வை பெருமைப்படுத்தும் பாடல் என்பதால், இந்த பாடல் காட்சியில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள்-நடிகைகள் 30 பேர்களை தோன்ற வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இதற்காக அவர்களை இன்னும் அணுகவில்லை. இனிமேல்தான் அணுக வேண்டும். படத்துக்கு மிக அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே இவர்களை பயன்படுத்துவோம்.

ரூ.60 கோடி

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் வருகிற 30-ந் தேதி நடைபெற இருக்கிறது. `குசேலன்’ படத்தை சாய்மீரா நிறுவனம் சுமார் ரூ.60 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு பி.வாசு கூறினார்.

பேட்டியின்போது தயாரிப்பாளர்கள் புஷ்பா, கந்தசாமி, விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.Post a Comment

Protected by WP Anti Spam