By 25 January 2018 0 Comments

உடலில் ஏற்படும் வீக்கத்திற்கு காரணமும் – தீர்வும்..!!

உடலில் சிறிது அடிபட்டாலோ அல்லது நோய் பாதிப்போ இருந்தால் அது ஆறுவதற்கான செயலாக வீக்கம் ஏற்படுகின்றது. தொடர் நீண்ட கால வீக்கம் என்பது வேறு. நஞ்சு, ஹார்மோன் என்ற பெரிய பிரச்சினைகளாக அது இருக்கலாம். பொதுவில் வீக்கம் என்றவுடன் முட்டி வீக்கம், கணுக்கால் வீக்கம், சுருக்கு பாதிப்பு, அடி இவற்றினை நினைக்கலாம்.

ஆனால் வீக்கம் என்பதற்கு முக்கியத்துவம் இன்னும் கூட இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் வீக்கமே பல நோய்களின் அடிப்படை காரணம் என்று கூறப்படுகின்றது. நீங்கள் அது இருப்பதனை பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு முறையான உணவு, முறையான உடற்பயிற்சி இல்லாவிட்டால் உங்கள் உடலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது என்று உறுதி கொள்ளலாம்.

வீக்கம் என்பது உடலில் ஏற்படும் பாதிப்பிற்கு இயற்கையாய் ஏற்படும் எதிர்விளைவு. அது ஸ்ட்ரெஸ், உணவு, உடல், சூழ்நிலை, மனநிலை என எந்த பாதிப்பாகவும் இருக்கலாம். எடை கூடுதல், மைக்ரேன், அலர்ஜி, சளி, ப்ளூ முதல் இதய பாதிப்பு, ஸ்டிரோக் (பக்கவாதம்), நீரிழிவு பாதிப்பு, மறதி நோய், கேன்சர் வரை இது பாதிப்பு தரும் என நவீன விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்குக் கூட சில வீக்கங்கள் அவர்கள் அறியாத சில பாதிப்பினால் ஏற்படுவதாகக் கூறுகின்றன. இந்த பாதிப்பிற்குத் தீர்வு என்ன?

அநேக வீக்கம் முதலில் உணவுப் பாதையில்தான் ஏற்படுகின்றன. உணவுப் பாதையில் மக்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. 70-80 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு உணவு பாதையில் இருந்தே கிடைக்கின்றது. அதிக நேரம் நீங்கள் போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் பொழுது உங்கள் கார்டிசால் அளவினைக் கூட்டும், சதா இரவில் தேவையற்று போனிலும், அரட்டையிலும் செலவழிக்கும் இளைய சமுதாயத்திற்கு தைராய்டு ஹார்மோன் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது. இவையெல்லம் உங்கள் குடலில் நச்சு, வைரஸ், கெட்ட பாக்டீரியா இவற்றினை உருவாக்கி இவை ரத்த குழாய்களின் மூலம் உடலில் பரவலாம். இதுவே வீக்கத்திற்கு முதல் காரணம் ஆகின்றது.

இவை தொடர்ந்து நிகழும் பொழுது குடலிலுள்ள சத்து உறிஞ்சுகள் பாதிக்கப்படுகின்றன. உடலுக்கு சத்து கிடைப்பதில்லை. செரிமான என்ஸைம்கள் பாதிக்கப்படுகின்றன. இதன் காரணமாக வீக்கம், அதனைத் தொடரும் நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த வீக்கம் திடீரென ஏற்படுவது, நீண்ட காலமாக இருப்பது என இரு வகைப்படும். அடிபடுவது திடீரென ஏற்படும் வீக்கம். இதனால் உடலில் ரசாயன உற்பத்தி ஏற்பட்டு அவை வெள்ளை அணுக்களை இழுத்து போரிட்டு பாதிப்பு மற்ற இடங்களுக்கு பரவாமல் காத்து நீக்கும்.

இப்பொழுதைய ஆய்வுகள் கூறுவது பல பாதிப்புகள் நமக்கு ஏற்படுவதற்கு அதிக காரணம் நம் உணவு முறையே என்பதுதான். பல உணவுகளை ‘வீக்கம் அளிக்கும் உணவுகள்’ என்றே குறிப்பிடுகின்றனர்.

உணவும், ரசாயன சேர்வைகள் மட்டுமல்ல. ஸ்ட்ரெஸ் மிகப்பெரிய வீக்கம் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

* அதிக சோர்வு, * பரு, * உணவு சாப்பிட எப்பொழுதும் ஆசை, * அவ்வப்போது சாப்பிட்டுக் கொண்டே இருத்தல், * காரணமில்லாத எடை கூடுதல், * உப்பிசம், * மலச்சிக்கல் (அ) வயிற்றுப் போக்கு, * உயர் ரத்த அழுத்தம், * புண், * மூட்டுவலி, * பிடிப்பு, * குடல் உபாதைகள் இவையெல்லாம் வீக்கத்தின் அறிகுறிகள். ஆரம்ப காலத்தில் உணவின் மூலமே இதனை சரிப்படுத்தி விடலாம்.

பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது மிக நல்லது, மைதா, சர்க்கரை, இவற்றினைத் தவிருங்கள். சிலருக்கு கோதுமை, பசும் பால் கூட ஒத்துக் கொள்ளாது இருக்கலாம்.

டாக்டர் வியல் என்பவரின் ஆய்வுபடி இயற்கை உணவுகள் நோயை தவிர்ப்பதாக அறிவுறுத்துகிறார்.

பழங்கள் ப்ளேவளாய்ட்ஆ அதிகம் கொண்டதாலும், கரோட்டினாய்ட்ஸ் அதிகம் கொண்டதாலும் வீக்கம் தவிர்க்கும் குணம் கொண்டவை. 3-5 முறை அன்றாட உணவில் அந்த கால கட்டத்தில் கிடைக்கும் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதே குணங்களையும், கூடுதல் சிறப்புகளையும் பெற்றதாக பச்சை காய்கறிகள், வானவில் நிற உணவுகளை அன்றாடம் 3-5 முறை சேர்த்துக் கொள்வது மிகவும் சிறந்ததாக அறிவுறுத்தப்படுகின்றது.

முழுதானிய நார்சத்து உணவு, பருப்பு, கொட்டை வகைகள், தயிர், அடர்ந்த சாக்லேட், ஒமேகா 3 இவற்றினை பரிந்துரைக்கின்றனர். மாவு சத்து, அதிக எண்ணை, அதிக அசைவ உணவு இவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது.

* ஆல்கஹால், * க்ளூடன், * அதிகம் பதப்படுத்திய அசைவம், * சர்க்கரை, * செயற்கை இனிப்பு, * சோடா வகைகள் இவற்றினை அடியோடு தவிர்ப்பது மிக நல்லது. தேவையான அளவு நீர் குடித்தல், உடற்பயிற்சி, மசாஜ், தியானம், யோகா இவற்றின் அவசியத்தினை மருத்துவ விஞ்ஞானம் இன்று அதிகம் வலியுறுத்துகின்றது. இதனை இந்த புது வருடத்தில் இருந்தாவது கடைபிடிப்போமா.

* ரத்தத்தில் சர்க்கரை உயர்வு எவ்வளவு ஆபத்தோ அதைவிட ஆபத்து ரத்தத்தில் சர்க்கரை குறைவதும் ஆகும். நீரிழிவு பாதிப்பு உடையவருக்கு இத்தகைய பாதிப்புகள் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் இந்த உயர், தாழ் சர்க்கரை நிலையினை அறிவது எப்படி? சர்க்கரை அளவு குறைதல் என்பது கூடுதல் இன்சுலின் எடுத்துக் கொள்ளும் பொழுதோ அல்லது அளவான மருந்து எடுத்து கொண்டாலும் முறையான உணவு எடுத்துக் கொள்ளாத பொழுதோ ஏற்படலாம். சர்க்கரை நோய் பாதிப்பு இல்லாதவர்களுக்குக் கூட ரத்தத்தில் சர்க்கரை சில சமயம் குறையலாம். இதன் அறிகுறிகள்.

* இருதய படபடப்பு, * சோர்வு, * வெளிர்ந்த சருமம், * உடல் நடுங்குதல், * வியர்வை, * பசி, * எரிச்சல், * வாய் சுற்றி சிலு சிலுத்த உணர்வு, * தூக்கத்தில் எழுதல்.

* இந்த சர்க்கரை அளவு மேலும் குறையும் பொழுது, * குழப்பம், * செயல்களில் முரண்பாடு, * பார்வை மங்குதல், * வலிப்பு, * நினைவின்மை ஆகியவை ஏற்படும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதற்கு காரணம் முறையற்ற உணவு, மருந்து, இன்சுலின் பற்றாமை. கவனிக்காத சர்க்கரை நோய் பாதிப்பு ஆகியவை இருக்கலாம். இதன் அறிகுறிகளாக.

* அதிக தாகம், * தலைவலி, * கவனக்குறைவு, * பார்வை மங்குதல், * அடிக்கடி சிறுநீர் செல்லுதல், * சோர்வு, * எடை குறைதல் ஆகியவை காணப்படும்.

மேலும் அதிக அளவு சர்க்கரை கூடும் பொழுது.

* காயங்கள் ஆற கூடுதல் காலம் பிடித்தல்

* மலச்சிக்கல் (அ) வயிற்றுப் போக்கு

* ரத்த குழாய்கள் பாதிப்பு ஆகியவை ஏற்படும்.

குறைந்த சர்க்கரைக்கு உணவு மருந்தின் அளவினை மருத்துவர் உதவியோடு சரி செய்து விட முடியும். அதிக சர்க்கரை அளவிற்கு சரியாக மருந்து எடுத்துக் கொள்ளுதல், கார்போஹைடிரேட் அளவினை வெகுவாய் கட்டுப்படுத்துதல், அடிக்கடி சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளுதல், இனிப்புகளை தவிர்த்தல் இவை நல்ல பலனை அளிக்கும்.

நமது சருமம் உடல் நலத்தின் ‘ஜன்னல்’ என்று சொல்லுவார்கள் திடீரென நமது உடலில் கழுத்தின் பின்புறம் உள்கை மடிப்பு, தொடை மடிப்பு இவற்றில் கறுப்பு திட்டு இருந்தால் உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை பரிசோதித்து கொள்ளுங்கள்.

முகத்தில் சேவ் செய்யும் பொழுது ஆண்களுக்கு சிறு சிறு காயங்கள் ஏற்படலாம். அவை உடனடியாக ஆறுதா, ஆறுவதற்கு சில காலம் பிடிக்கின்றதா! அப்பொழுதும் உடனடி ரத்தத்தில் சர்க்கரை அளவினை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

அதிக சர்க்கரை கண் ரெடினாஸின் ரத்த குழாய்களை பாதித்து ரத்த கசிவினை ஏற்படுத்தலாம்.

புதுவருடம் பிறந்துவிட்டது. முந்தைய வருடத்தில் சாதிக்கத் தவறியதனை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பலரது திட்டங்களை நடைமுறைப்படுத்த முனைப்புகள் இருக்கும். எல்லாம் சிறந்ததே. கூடவே நம் உடல் நலம் பற்றியும் சில உறுதிகளை ஏற்படுத்தி அதனை கடைபிடிக்கவும் செய்வோமா! கலிபோர்னியா பல்கலைக் கழக ஒரு டாக்டர் கூறியுள்ள குறிப்புகள் இவை.

1. பிஸியான வாழ்க்கை முறையில் நம்மை நாம் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். நம் உடல் கூறும் அறிகுறிகளை கவனிக்கத் தவறி விடுகின்றோம். தினமும் ‘உடல் நல டைரி’ என ஒன்றினை உருவாக்குங்கள். அன்று உங்கள் உடல்நிலை, அறிகுறிகள். சோர்வு, மனநிலை என அனைத்தினையும் அதில் குறிப்பிடுங்கள். நீங்களே உங்கள் உடல் நிலையினை உணர்ந்து தேவைப்பட்டால் மருத்துவரிடம் சென்று விடுவீர்கள்.

2. சில நீண்ட பாதிப்புகள் கூடுதல் எடை, சர்க்கரை நோய் பாதிப்பு, இருதய பாதிப்பு போன்றவை அவரவர் உண்ணும் உணவுடன் நெருங்கிய தொடர்பு உடையவை. எனவே காய்கறி, பழங்கள் என தாவர வகை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். முழு தானியங்கள், பருப்புகள், கொட்டைகள் இவைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவைகள் நோய் பாதிப்பிலிருந்து உங்களை காப்பதுடன் ஆரோக்கியமான நீண்ட ஆயுளையும் அளிக்கும்.

3. முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவினை உண்ணுங்கள். இவர்களுக்கு சுத்தமான, சத்து நிறைந்த, உடனடி சமைத்த, அன்பு நிறைந்த உணவு கிடைக்கின்றது.

4. எட்டு மணிநேரம் தூங்குங்கள்

5. ‘ஸ்டிரெஸ்’ என்பது நீக்கப்பட வேண்டிய ஒன்று.

6. அலர்ஜி, சைனஸ் தொந்தரவு இவற்றுக்கு அதிக கவனம் செலுத்துங்கள்.

ஆரோக்கிய வாழ்வு என்பதனை முழுமையாய் பெறுவோம்.Post a Comment

Protected by WP Anti Spam