தமன்னாவின் அடுத்த லெவல்!!
பாகுபலி திரைப்படத்தில் அவந்திகா என்ற புரட்சிப் பெண்ணாக நடித்த தமன்னா, அதன்பிறகு தனக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், தன்னுடைய எதிர்ப்பார்ப்பு, இந்த 2018ஆம் ஆண்டில்தான் நிறைவேறப் போகிறதென்று, தமன்னா கூறியுள்ளார்.
அதுகுறித்து தமன்னா விடுத்துள்ள செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது,
“ஸ்கெட்ச் திரைப்படத்துக்குப் பிறகு, தமிழில் சீனுராமசாமி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் குயின் ரீமேக் மற்றும் இரண்டு திரைப்படங்களிலும் ஹிந்தியில் ஒரு திரைப்படத்திலும் நடிக்கிறேன். அந்த வகையில், தற்போது என் கைவசம் ஐந்து திரைப்படங்கள் உள்ளன.
“அத்தோடு, இந்தத் திரைப்படங்களில் இதுவரை இல்லாத அளவு அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன். காரணம், இதுவரை நடிகர்களை மட்டுமே மனதிற்கொண்டு கதை எழுதி வந்த நிலைமை மாறி, நடிகைகளை மனதிற்கொண்டு கதை எழுதும் காலம் உருவாகியிருக்கிறது.
“அதனால், கதை எழுதும் போதே, ஹீரோயின்களின் கதாபாத்திரத்துக்கும் அழுத்தமான காட்சிகளை உருவாக்குகிறார்கள். இப்போது நான் நடிக்கும் அனைத்துத் திரைப்படங்களிலுமே, நானே எதிர்பார்க்காத வெயிட்டான கதாபாத்திரங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
“அதனால் 2018ஆம் ஆண்டில் நான் நடிக்கும் திரைப்படங்கள், என்னை அடுத்த லெவலுக்குக் கொண்டுசெல்லும் திரைப்படங்களாக அமைந்துள்ளன” என்று தமன்னா கூறியுள்ளார்.