By 29 June 2008 0 Comments

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) ஆயுதக்களைவின் அவசியமும், அடிமைப்படும் ஜனநாயகமும் – ஒரு நோக்கு..

anialligator.gifகிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் முடிந்த கையோடு கிழக்குப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவிவருவதை அனைவராலும் உணரக் கூடியதாகவுள்ளது. மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக, கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னைய அடாவடித்தனங்கள் தொடர்ந்த வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றது. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கும், அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் தான் இவர்கள் அட்டூழியங்களைக் கட்டவிழ்த்து விட்டார்கள் என்று பார்த்தால், தற்போது அடுத்த மாற்றுத் தமிழ் அமைப்புக்களை அப்பகுதிகளிலிருந்து அப்புறப் படுத்தி விடவேண்டும் என்கிற நோக்கோடும் அதே அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துப் பிள்ளைகள் அரசியல் வழிக்குத் திரும்பி ஜனநாயக ரீதியில் அதிகாரங்களைப் பெற்றுக் கொண்டுள்ள போதும், அவர்களின் ஆயுதக் குழுவினரின் அட்டகாசங்கள் தினம் தினம் தொடர்ந்த வண்ணமே தான் இருக்கின்றது. கர்வமும், தலைக்கணமும் தலைக்கேறிக் கொண்டமையினால், கட்டுக்கடங்காமல் காட்டுமிராண்டித் தனமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கின்ற போராளிகளின் கோரத் தாண்டவத்தின் விளைவுகளான இவை சொல்லி மாளாதவை…

அண்மையில் கிழக்குப் பிரதேசங்களில் வர்த்தகர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கெடுபிடிகள், கொம்மாதுறை கிராம சேவையாளரான கி.திருமால் என்பவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் கடத்தப்பட்டமை, பின்னர் 19ஆம் திகதி ஈ.பி.டி.பி. யினரால் அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் தேவதாசன் சுரேஸ்குமார் என்னும் குடும்பஸ்தர் காணாமல் போனமை 18ஆம் திகதி புதன்கிழமை கடத்தப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினர் குணசீலன் வெட்டிப் படுகொலை செய்து புதையுண்ட நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டமை என இவர்களின் சதிவேலைகள் தொடர்ந்தேச்சையாக நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் இச்சதித்திட்டங்களையெல்லாம் செவ்வனே நிகழ்த்தி விட்டு, கேள்வியென்று வருகின்ற போது உடனடியாகவே மற்றவர்களை நோக்கி விரல்களை நீட்டிக் காட்டவும் நன்றாகக் கற்றுக் கொண்டுள்ளனர். தற்போதைய நிலையில் கிழக்கில் ஆயுத பலத்தையும், அதிகார பலத்தையும் கொண்டிருக்கின்ற இந்த தனித்துவமான அமைப்பைத் தவிர வேறு எவராலும் இது போன்ற காரியங்களை இப்பகுதிகளில் தைரியமாகச் செய்ய முடியாதென்பது யாவராலும் அறியப்பட்டுள்ள உண்மையாகும்.

இத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் போராளிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைத் தவறவிட்டுள்ள பொறுப்பாளர்கள், போராளிகள் இழைக்கின்ற தவறுகளைத் தடுத்து நிறுத்துவதை தவறவிட்டது மட்டுமல்லாமல், அவை வெளியே தெரிந்தால் வெட்கக்கேடு என்பதால் அவற்றை மூடி மறைக்க பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருப்பதின் அர்த்தத்தை என்னவென்று அழைக்க முடியும்??

அதுமட்டுமல்லாது இப்போராளிகள் இழைத்த அட்டூழியங்கள் பற்றியும், நிகழ்த்திய வன்முறைகள் குறித்தும் உரியவர்களிடம் ஊடகங்கள் வினவுகின்ற போது “இருங்கள் கேட்டு விட்டுச் சொல்கிறோம்” என்ற நிலைப்பாடும் இங்கு காணப்படுகின்றதென்பது கவலைக்குரியதாகும். இது எந்தளவான அஜாக்கிரதைப் போக்கு என்பதையும் அனைவரினாலும் உணர்ந்து கொள்ள முடியும்.

குற்றம் இழைத்தவர்கள் தொடர்ந்தும் குற்றம் இழைத்துக் கொண்டிருக்க, அதை நிறுத்த வேண்டியவர்கள் தொடர்ந்தும் மூடி மறைக்கின்ற குற்றத்தைப் புரிந்து விட்டு இவர்கள் சிறிதும் குற்ற உணர்வின்றி வாழ்வது எவ்வளவு வெட்கக் கேடான செயல் என்பதை இவர்கள் யதார்த்தமாக புரிந்து கொள்ளாதவரை இத்தகையவர்களால் மக்களுக்கும், மனிதாபிமான மிக்கவர்களுக்கும் இன்னல்கள் தொடர்ந்தும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதில் இருகருத்திற்கு இடமிருக்காது.

மக்கள் அநியாயமாக அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள், கடத்திக் காணாமல் செய்யப்படுகிறார்கள், விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இவைகள் நிறுத்தப்பட வேண்டியது காலத்தின் அவசியமாகும். இன்னுமின்னும் “இருங்கள் கேட்டு விட்டுச் சொல்கிறோம்” என்னும் நிலைப்பாடு உரியவர்களினால் தொடரப்படுதலென்பது நிறுத்தப்பட வேண்டியதாகும். ஏனெனில் இவர்கள் இப்படியிருப்பதனால் தான் சாதாரண போராளிகள் சட்டங்களையும், அதிகாரங்களையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு நெறிகெட்டுத் திரிகிறார்கள்.

இவர்கள் என்ன படித்த புத்திஜீவிகளா? அல்லது சட்டம் படித்த மேதாவிகளா? இல்லையே. ஆயுதங்களைத் தூக்கிச் சுடவும், கொல்லவும் சொல்லிக் கொடுக்கப்பட்ட முரடர்கள் தானே. ஐயகோ! இவர்களிடமா நீதி கேட்டு விட்டுச் சொல்லப் போகிறார்கள் இப்பொறுப்பு வாய்ந்தவர்கள். என்ன அநியாயமிது, என்ன அக்கிரமமிது!! கோபம் வந்தால் கொல்வார்கள், குடும்பத்தவருடைய வேலிச்சண்டையென்றால் அதற்கும் கொன்று விடுவார்கள், வீதியிலே இவர்களைப் பார்க்காமல் போகிறவர்களை கூப்பிட்டழைத்து வம்புக்கிழுத்து வரிந்து கட்டி அடிப்பார்கள். இப்படியிப்படி இவர்களின் அட்டூழியங்கள் வகைதொகையின்றி நிகழ்ந்தேறிய வண்ணம் உள்ளது.

போராளிகளுக்குப் பொறுப்பானவர்கள் ஜனநாயக வழிக்குப் போய் விட்டிருப்பதனால், அவர்களுக்கு இப்போது பதவியிலும், புகழிலும் தான் கவனம் கிடக்கிறது. இத்தலைவர்களுக்கு அமைச்சர்களுடனும், அரசாங்க அதிபர்களுடனும், ஜனாதிபதியுடனும், பிரதமருடனுமே பேசவே நேரங்கள் போதாதிருப்பதினால் போராளிகள் கண்காணிக்கப் படுவதுமில்லை, கட்டுப்படுத்தப் படுவதுமில்லை. இதனாலேயே இப்போராளிகள் கட்டாக் காலிகளாக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொறுப்பாளருக்கு 10பேரை 15பேரை வைத்துக் கொண்டு ஆள் ஆளுக்கு அதிகாரம் பண்ணித்திரியும் நிலையே இங்கு காணப்படுகிறது.

அடியாட்கள், அதிகாரம், ஆயுதங்கள் மட்டுமே இருந்து விட்டால் ஜனநாயக வாதிகளாக இருக்க முடியும் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும், தங்களிடமுள்ள பலத்தினை நல்லன செய்வதற்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர தங்களுடைய சுயநலத்திற்காக தானும் தன்னைச் சார்ந்தவர்களும் மட்டும் வாழ்வதற்காக இவற்றைக் கையிலெடுத்து அண்ணன் பிரபாகரனைப் போல் சர்வாதிகாரம் செய்ய முற்படுவது தம்பிமாரே ஜனநாயகமாகுமா?

இத்தகையவர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்தி தாம் மட்டும் வாழ்வதற்கு ஏதுவாக நடக்க முற்படுகிறார்கள். மற்றவரை அச்சுறுத்துவதால் எவரும் தலைவன் பட்டத்தைப் பெற்றுவிட முடியாது. இவர்கள் முடிவில் அஞ்சி அஞ்சி ஒளிந்தே வாழ வேண்டியது தான். ஏனெனில் இவர்கள் தாங்களுக்கான எதிரிகளைத் தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். உண்மையில் தைரியமும், தலைமைத்துவமும், புத்திக் கூர்மையும் உள்ளவர்கள் முரட்டுத்தனமாக சர்வாதிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையென்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறுமனே வேட்டையாடிக் கொண்டு திரிவது மிருகக் குணமாகும். மனிதன் கொல்வதற்காகப் பிறந்தவனுமல்ல மற்றவரை அடித்து ஒடுக்குவதற்காகப் பிறந்தவனுமல்ல என்பதையும் இவர்கள் உணர வேண்டும். மிருகம் செய்கின்ற வேலையை நீங்களும் செய்து கொண்டு அலைவதால் ஆகப்போவது ஒன்றுமே இல்லை.

மானிட தர்மம் என்பதே இயல்பாக ஒன்றிணைந்து வாழ்வதென்பதேயாகும். என்றெல்லாம் ஒன்றுக்கு நூறு தடவைகள் தானும் இவர்களுக்குச் சொன்னாலும் இவர்களுக்கு ஏறுவதென்பதே கிடையாது. இவைகளைக் கூறுகின்ற போது அவர்கள் செவிடர்களாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள். இதனைக் கூறுகின்றவர்கயையும் கொல்வதற்கே தலைபடுவார்கள்.

ஆகவே இவர்கள் விடயத்தில் எரிகிறதை எடுத்து விட்டால் கொதிக்கிறது தானே அடங்கும் என்னும் தத்துவத்தின்படி இப்போராளிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகக் காட்சி தருகிறது. இதற்கேதுவாகவே தற்போது அரச படையினரதும், இராணுவ தளபாடங்களினதும் அதிகரிப்பு கிழக்கில் போதுமானதாக இருக்கின்றது என்பதுடன், கிழக்கிலிருந்து புலிகள் தோற்கடிப்பட்டமையும் இதற்கு தக்க சூழலாக அமைகின்றது.

எனவே இப்போராளிகளிடமுள்ள ஆயுதங்களுக்கு இனிமேல் அவசியமிருக்காது என்பதையும் எம்மால் ஊகிக்க முடியுமாகவுள்ளது. இதையே தான் கடந்த 4 வருடங்களாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், அவர்களது பேச்சாளர்களும், அதன் தலைவர்களும் கூறி வந்துள்ளனர் என்பதையும் இத்தருணத்தில் ஞாபகப்படுத்துவது சிறப்பானதாயிருக்கும்.

அதாவது, கடந்த காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடம் ஆயுதங்களைக் கைவசப்படுத்தியிருப்பதன் அவசியம் பற்றிக் கேட்கப்பட்ட போதெல்லாம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், சுயபாதுகாப்பையுமே காரணங்காட்டி வந்துள்ளனர். எனவே அவர்கள் காரணங்காட்டி வந்த அந்தத் தகவுகள் தற்போது நீங்கியிருப்பதோடு, அவர்களுடைய பாதுகாப்புக்குத் தேவையான அரச படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆதலால் அவர்களது சுய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது, எனவே இனி இவர்களின் ஆயுதங்களுக்கு அவசியங்கள் அற்றுப் போயுள்ளன என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியும். அத்துடன் கிழக்கைக் காப்பது, அரச படையினரின் கடமையாயிருக்கின்றது. நீதியைக் கடைப்பிடிப்பதும் அதன் மூலம் மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டியதும் அவர்களின் கடமையே ஆகிறது.

இதனையே தான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளரும், தலைவர்களும், பொறுப்பாளர்களும் கூறி வந்துள்ளனர். அவர்களிடம் ஆயுதக்களைவு பற்றி ஊடகங்களும், சமாதான அமைப்புக்களும், கட்சிகளும், வெளிநாட்டு தூதுவர்களும் கேட்ட போதெல்லாம் “நாங்கள் எங்களுடைய மக்களுக்கான அரசியல் இருப்பில் ஸ்திரத்தன்மை பெற்று விடுகின்ற போது, எமக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படுகின்ற போது, ஆயுதங்களைத் தாங்களாகவே வைத்து விடுவோம். ஏனெனில் நாங்கள் ஆயுதங்களின் மீது ஆசை கொண்டவர்களல்ல. நாங்கள் எங்கள் தற்காப்பிற்காகவே ஆயுதங்களை வைத்திருக்கிறோம்” என்று பறைசாற்றி வந்துள்ளனர்.

இதனை இவர்கள் மறந்து விட்டார்கள் போலும். ஆனால், மற்றவர்களால் அவ்வளவு சீக்கிரம் அதனை மறந்துவிட முடியாது. ஏனெனில் அவ்வாயுதங்களினால் அவதிக்குள்ளாகுவது மற்றவர்கள் தான்.

இவர்கள் அவ்வாயுதங்கள் மூலமாகத் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்களோ இல்லையோ, தங்கள் அரசியல் இருப்பைத் தாராளமாகப் பாதுகாத்துக் கொண்டார்கள் என்பது உலகறிந்த உண்மையாகும். அவ்வாயுதங்கள் மூலமாக மாற்றுத் தமிழ் அமைப்புக்களின் அரசியலாளர்கள் கடத்தப்பட்டார்கள். மாற்றுத் தமிழ் அமைப்புக்களின் அலுவலகங்கள் மீதான தாக்குதல் தாறுமாறாக அரங்கேறியிருந்தன. ஜனநாயக அரசியலுக்காக, ஆயுத அரசியல் என நடந்தேறின. இவை இவர்களது தாய் இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் பாணியிலேயே பவ்வியமாக நடந்தேறின என்பதும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

எனவே இந்நிலை இனிமேலும் தொடரக் கூடாது. அரசியலில் கருத்துக்களுக்கு மட்டுமே இடமிருக்க வேண்டும். அங்கு ஆயுதங்களுக்கு அணுவேனும் இடமிருக்கக் கூடாது. ஆகவே, இவர்களுடைய ஆயுதக்களைவு என்பது மிகமிக அவசியமாகின்றது. அதன் மூலமே இனிவரும் காலங்களில் மக்கள் அபிமானம், மக்கள் ஆதரவு, ஜனநாயகம் போன்ற உரிமைகளில் உயிரோட்டம் இருக்கும் என்பதை உணர்ந்து இவ்விடயத்தில் அரசாங்கமும் உரியவர்களும் கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.

அதிரடிக்காக.. திரு.செல்வபாரதி –மட்டுநகர்

Thankyou For.. WWW.ATHIRADY.COMPost a Comment

Protected by WP Anti Spam