சீனாவை தாக்கிய மணல் புயல் : காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி!!
சீனாவை தாக்கிய மணல் புயலால் உருவான காற்று மாசால் தலைநகர் பீஜிங் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து வீசும் மணல் புயலால் பீஜிங்கின் வானுயர்ந்த கட்டிடங்கள் புழுதி மற்றும் தூசியால் சூழப்பட்டுள்ளன. மணல் துகள்கள் படிந்து சாலைகளும் மோசமான தூசு மண்டலமாக காணப்படுகிறது. தற்போது Tianjin, Hebei, Shanxi, Jilin, Liaoning உள்ளிட்ட 6 மாகாணங்களுக்கு உட்பட்ட 15 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு காற்று மாசுப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முகமூடி அணிந்து வெளியே செல்கின்றனர். இது பற்றி பேசிய காப்பீட்டு நிறுவன ஊழியரான கயோ ஷான் என்பவர், மோசமான காற்று மாசினால் சுவாசிக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே தான் முகமூடி அணிந்து செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர் இளம் வயதினரே தூசியை எதிர்கொள்ள முடியாமல் போராடும் போது, முதியவர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளதாக குறிப்பிட்டார். சுவாசம் மற்றும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முகமூடி அணிந்து செல்வது தற்போது அத்தியாவசியமாவிட்டதாக கூறினார். மங்கோலிய எல்லையில் உள்ள பாலைவன பிரதேசத்திலிருந்து சீனாவை மணல் புயல் தாக்கும் என அந்நாட்டு வானிலை மையம் ஆரஞ்ச் மாசுபாடு எச்சரிக்கை விடுத்தது. இதனால் வீடு மற்றும் கடைகளின் கதவுகள், ஜன்னல்களை மூடி வைக்க அறிவுறுத்தப்பட்டது.