By 29 April 2018 0 Comments

ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)

இரண்டாவது ட்ரைமஸ்டரில் குழந்தையின் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும் என்று பார்த்து வருகிறோம். இந்த இதழிலும் அதன் தொடர்ச்சியைக் காண்போம். கர்ப்ப காலத்தின் மையப்பகுதி எனப்படும் 17-20 வாரங்கள் தாய்க்கும் கருவுக்கும் முக்கியமான காலகட்டம். கர்ப்பம் எனும் இரட்டை உயிர் பயணத்தில் அரைக்கிணறு தாண்டியிருக்கும் காலகட்டம் இது. தாய் மற்றும் கருவின் உடலும் உயிரும் ஒருவித ஒத்திசைவுக்கு வந்திருக்கும் காலம் இது.

6வாரம் 17
வயிற்றில் உள்ள கருவின் எடை கடந்த இரு வாரங்களுக்கு முன் இருந்ததைவிட இரண்டு மடங்காக அதிகரித்திருக்கும். கொழுப்புச்சத்து உடலில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும். இது குழந்தையின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளுக்கு முக்கியம். நுரையீரல் அம்னியோட்டிக் திரவத்தை (Amniotic fluid) சுவாசிக்கும் திறன் பெற்றிருக்கும். சிறுநீர் மண்டலம் செயல்படத் தொடங்கியிருக்கும். தலைமுடி, புருவம், கண் இமைகள் முழுமையடைந்திருக்கும். தாயின் உடல் எடையும் அதிகரித்திருக்கும்.

பசியுணர்வு அதிகமாக இருக்கும். பயம் வேண்டாம். வயிற்றில் உள்ள கருவின் தேவைக்கு ஏற்ப உங்கள் உடலின் பசியும் அதிகரிப்பதே காரணம். எழும்போதும் அமரும்போதும் படுக்கும்போதும் நிதானம் தேவை. பட்டென எழுந்தால் தள்ளி விடும் உணர்வு ஏற்படக்கூடும். அப்படியான உணர்வு இருந்தால் பொறுமையாக அமர்ந்து தலையை சற்று சாய்வாக சில விநாடிகள் வைத்திருக்க வேண்டும்.

6வாரம் 18
குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். வயிற்றில் உள்ள குழந்தை உடலை முறுக்குவது, நெளிவது, கொட்டாவி விடுவது, முகத்தைச் சுளிப்பது போன்ற எதிர்வினைகளைச் செய்யும். குழந்தையின் சுவை மொட்டுக்கள் செயல்படத் தொடங்கும். இனிப்பு மற்றும் கசப்பை உணர முடியும். உதடுகள் ஈரப்படுத்திக் கொள்ளவும், எதையேனும் விழுங்கவும் தெரிந்திருக்கும். சில குழந்தைகளுக்கு விக்கல்கூட ஏற்படும்.

கண்களில் உள்ள ரெட்டினா ஒளியறியும் திறன் பெற்றிருக்கும். தாயின் வயிற்றுப்பகுதியில் அதிக வெளிச்சம் பட்டால் குழந்தையின் கண்மணிகள் அசையும். தாயின் கர்ப்பப்பை பூசணிக்காய் அளவு வளர்ந்திருக்கும். கரு தாயின் தொப்புளின் கீழே இறங்கியிருக்கும். குழந்தை அசைவதை நன்றாக உணர முடியும். குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக தாயின் இதயம் 40 முதல் 50% அதிகமாக செயல்பட வேண்டியது இருக்கும்.

6வாரம் 19
குழந்தையின் சருமம் வெளிர் நிறத்தில் உருப்பெற்றிருக்கும். உட்புறம் இருக்கும் ரத்த நாளங்கள் வெளிப்படையாகத் தெரிவதால் குழந்தையின் தோல் செந்நிறத்தில் இருக்கும். வெர்னிக்ஸ் (Vernix) எனப்படும் வெண்ணிநிறப் படலம் ஒன்று குழந்தையின் சருமத்தைப் பாதுகாக்க உருவாகியிருக்கும். தாயின் வயிறு முன்புறம் பெருத்துக்கொண்டிருப்பதால் சிலருக்கு அடிமுதுகு வலி ஏற்படும். சோர்வு, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், கால் வீக்கம், மூட்டு வீக்கம் போன்றவை சிலருக்கு ஏற்படக்கூடும்.

ரத்த நாளங்கள் விரிவடைவதால் சிலரின் முகத்தில் செந்நிறப் புள்ளிகள் தோன்றக்கூடும். பிரச்சனைகள் சமாளிக்க முடியாத அளவுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. சுய வைத்தியம் மட்டும் வேண்டவே வேண்டாம். மலச்சிக்கலுக்கு நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். முகத்துக்கான கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பதே நல்லது. காலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க கால்களைத் தொங்கவிட்ட நிலையில் நெடுநேரம் இருக்க வேண்டாம்.

6வாரம் 20
குழந்தையால் சப்தங்களை நன்றாகக் கேட்க முடியும். அன்னை பேசுவதை குழந்தையால் நன்கு உணர முடியும். தாயின் இதயத் துடிப்பும் கேட்கும். சப்தங்களை பிரித்தறிய முடியும். அளவுக்கு அதிகமான சப்தம் கேட்கும்போது குழந்தை தன் கைகளால் காதுகளை மூடவும் செய்யும். சில குழந்தைகள் துள்ளலான இசையைக் கேட்கும்போது வயிற்றில் துள்ளவும் செய்யும். அசைதல், உடலை முறுக்குதல், திரும்புதல், கிள்ளுதல், உதைத்தல் போன்றவற்றைச் செய்யும்.

இது கர்ப்பத்தின் மையப் பகுதி. தாயின் வயிறு நன்றாக மேடிட்டிருக்கும். இடுப்புப் பகுதியின் வளைவுகள் இருக்காது. சிறுநீர்ப்பைத் தொற்றுகள் தாய்க்கு ஏற்படக்கூடும். ஆழமாக மூச்சு வாங்கும். வியர்வை அதிகமாக வரும். தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரப்பதால் இதுபோன்ற விளைவுகள் ஏற்படும்.முதுகுவலி இருக்கும். அமரும்போது சரியான நிலையில் அமர வேண்டும். எர்கோனாமிக்ஸ் நாற்காலிகள் இருந்தால் பயன்படுத்தலாம். மொத்தத்தில் வயிற்றில் உள்ள கரு ஒரு குழந்தையாக ஒவ்வொரு உறுப்பும் முழு வளர்ச்சியடைந்திருக்கும். வயிற்றில் குழந்தைக்கு வெளியில் உள்ள சப்தங்களைக் கேட்பது, புரிந்து கொள்வது, ஒளியைப் பார்ப்பது போன்ற திறன்கள் வளர்ந்திருக்கும். குழந்தையின் உடலும் மனமும் வெளிச்சூழலுக்குத் தயாராவதன் தொடக்க காலம் இது.Post a Comment

Protected by WP Anti Spam