By 28 April 2018 0 Comments

ஹேப்பி ப்ரக்னன்ஸி – பிரசவ கால கைடு!!(மகளிர் பக்கம்)

இரண்டாவது ட்ரைமஸ்டரில் தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று கடந்த இரு இதழ்களிலும் பார்த்தோம். கர்ப்பத்தின் அதிக சிக்கலற்ற பருவம் எனும் இந்த இரண்டாம் ட்ரைமஸ்டரில் தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவின் வளர்ச்சி ஒவ்வொரு வாரமும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலையைப் புரிந்துகொள்வது கர்ப்பம் குறித்த தேவையற்ற பதற்றங்களையும் குழப்பங்களையும் தவிர்க்க உதவும்.

வாரம் 13

குழந்தை வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் காலம் இது. கருவின் மூடிய இமைகளுக்குள் கண்கள் அசையத் தொடங்கியிருக்கும். கைகள் உருப்பெற்று, உள்ளங்கையும் விரல்களும் முழு வளர்ச்சி அடைந்திருக்கும். தலை சற்று பெரிதாக இருக்கும். உடலில் மற்ற பாகங்கள் உருப்பெற்று இருந்தாலும் முழு வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் தீவிரமாக இருக்கும் காலம் இது. தாயின் கர்ப்பப்பை வளர்ந்து அடிவயிறு பெருக்கத் தொடங்கியிருக்கும். அடிவயிறு மென்மையான ஒரு பந்தைப் போன்று இருக்கும். முதல் ட்ரைமஸ்டரில் அதிகாலை தலைசுற்றல், வாந்தி, மயக்கத்தால் எடை கூடாமல் இருந்த பெண்களும் இந்தக் காலகட்டத்தில் எடை அதிகரிப்பார்கள்.

வாரம் 14

கருவின் காதுப் பகுதி தலையின் பக்கவாட்டில் சரியாக அமையும் காலகட்டம் இது. கழுத்து சற்று நீண்டு முழு வளர்ச்சி அடையும். முகத்தின் ஒவ்வொரு உறுப்புகளும் துலக்கம் பெறும். குழந்தைக்கு எனத் தனித்துவமான கைரேகைகள் உருவாகும். சத்தம், அதிர்வு என வெளியில் இருந்து வரும் தூண்டுதல்களுக்கு குழந்தை எதிர்வினை செய்யத் தொடங்கும் காலமும் இதுதான். தாயின் வயிறு பருத்திருக்கும்.

சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கக்கூடும். ப்ரக்னன்ஸி ஹார்மோன்கள் அதிகமாகச் சுரப்பதால் இது ஏற்படக்கூடும். சிறு சிறு ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள், நடைப்பயிற்சிகள், நீராகாரங்கள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தலாம். அவசியம் எனில் மருத்துவரை நாட வேண்டும். சுய வைத்தியம் செய்யக் கூடாது.

வாரம் 15

குழந்தையின் உடலில் லேனுகோ (Lanugo) எனப்படும் மென் ரோமங்கள் முளைத்து உடலைப் பாதுகாக்கும். கண் இமைகளும் தலை முடிகளும் அரும்பத் தொடங்கும். எலும்புகள் வலுவாகும். சில குழந்தைகள் வயிற்றிலேயே கட்டை விரலைச் சூப்பும் பழக்கத்துக்கு ஆட்படுவதும் இந்தப் பருவத்தில்தான். தாயின் வயிறு உருண்டையான பந்தைப் போன்று இருக்கும்.

தாயின் கொப்புள் பூத்து கரு அங்கிருந்து மூன்று அல்லது நான்கு இஞ்சுகள் கீழே இறங்கி இருக்கும். கர்ப்பிணிகள் இந்தக் காலகட்டத்தில் இடதுபுறமாக சாய்ந்து படுப்பது நல்லது. அவசியம் எனில் கால்களுக்கு இடையிலும் தலையணையை வைத்துக்கொள்ளலாம். பிரசவ காலத்துக்கு எனப் பிரத்யேகமான படுக்கைகள் சந்தையில் கிடைக்கின்றன. மருத்துவர் பரிந்துரைப்படி அவற்றையும் பயன்படுத்தலாம்.

வாரம் 16

குழந்தையின் உடலில் ரோமம் நன்கு வளர்ந்திருக்கும். குழந்தையின் இதயத் துடிப்பை மருத்துவரால் கேட்க முடியும். கை, கால்களை நன்கு அசைக்க முடியும். குழந்தையின் நரம்பு மண்டலம் செயல்படத் தொடங்கியிருக்கும். இந்தக் காலகட்டத்தில் குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். குழந்தையின் வளர்ச்சிக்காக தாயின் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சிலருக்கு சிறு மூக்கு உடைவு ஏற்படக்கூடும். கால்களில் உள்ள ரத்த நாளங்கள் நன்கு வெளிப்படும். கர்ப்பப்பை வளர்ந்திருப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது குறைந்திருக்கும்.

கால்களுக்கு பிரத்யேகமான ஸ்டாகிங்ஸ் அணிந்து கால் ரத்த நாள வீக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். சிறு மூக்கு உடைந்தால் தலையை முன்புறம் நீட்டியபடி நாசித் துவாரத்தை அடைத்துக்கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். மொத்தத்தில் 13-16 வாரங்களில் வயிற்றில் உள்ள கருவின் கை, கால் விரல்கள் முழுமையாக அரும்பியிருக்கும். கண் இமைகள், புருவங்கள் தோன்றியிருக்கும். விழிக்கோளங்கள் அசையத் தொடங்கியிருக்கும்.

நகங்கள், முடி நன்கு வளர்ந்திருக்கும். பற்களும் எலும்புகளும் வலுப்பட்டிருக்கும். வயிற்றில் உள்ள குழந்தை வெளி உலகத்தோடு சப்தங்கள், அசைவுகள் வாயிலாக வினையாற்ற தொடங்கியிருக்கும். கட்டை விரல் சூப்புதல், கொட்டாவி விடுதல், அசைதல், நெளிதல், முகத்தை சுளித்தல் போன்றவற்றை செய்யத் தொடங்கியிருக்கும்.

குழந்தையின் பாலுறுப்புகள் முழுமையாக வளர்ந்திருக்கும் என்பதால் குழந்தையின் பால் நிலையை அறிய முடியும். ஆனால், சட்டரீதியாக இது தவறு என்பதால் மருத்துவர்கள் சொல்ல மாட்டார்கள். ஆணோ பெண்ணோ பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கிறதா என்பதுதான் முக்கியம். எனவே, நீங்களும் அதைப் பற்றிய கவலையை விடுங்கள். அடுத்த இதழில் இரண்டாம் ட்ரைமஸ்டரின் அடுத்தடுத்த வாரங்களில் கருவின் நிலை குறித்தும், இரண்டாம் ட்ரைமஸ்டரில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் குறித்தும் பார்ப்போம்.Post a Comment

Protected by WP Anti Spam