By 20 May 2018 0 Comments

ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடக் கூடாதுன்னு சொல்றது ஏன் தெரியுமா?!(மருத்துவம்)

‘ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடாதீங்க’ என்பது டயட்டீஷியன்களும், டாக்டர்களும் அடிக்கடி சொல்கிற ஆலோசனைகளில் ஒன்று. இன்று அதிகரித்துவரும் நோய்களின் பின்னணியில் முக்கிய காரணியாகவும் துரித உணவுகள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.என்னென்ன காரணங்களால் ஃபாஸ்ட் ஃபுட் உடல்நலனுக்குக் கேடானது என்று இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை மருத்துவரான ஆனந்த்திடம் கேட்டோம்…

‘‘இயந்திர வாழ்க்கையின் அதிவேகம் காரணமாக துரித உணவுகள் பயன்பாட்டுக்கு வந்தன. சமைப்பது எளிது, வித்தியாசமான சுவை, குறைவான நேரம் என்ற காரணங்களால் துரித உணவுகளுக்கு மக்கள் மாறிவிட்டார்கள். ஆனால், இவ்வகை துரித உணவுகளில் எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன.உணவின் சுவையை கூட்ட கலக்கப்படும் ரசாயனங்கள் முதல், சமைக்கும் முறை வரையிலும் பல பிரச்னைகள் துரித உணவுகளில் இருக்கின்றன.

பீட்சா, பர்கர், நூடுல்ஸ் ஆகிய ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைத் தயாரிப்பதற்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களான, மீன், முட்டை மற்றும் காய்கறிகள், சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் புளி, தக்காளி, பச்சை மிளகாய் கலவை போன்றவை பல நாட்களுக்கு முன்னரே, சமைக்கப்பட்டு, பல நாட்கள் வரை கெட்டுப்போகாத வண்ணம் பதப்படுத்தப்பட்டு வைக்கப்படுகின்றன.

இவ்வாறு உடல் நலத்துக்குக் கேடும் ஏற்படுத்தும் வகையில் சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் தீமைகள்தான் அதிகம். இவற்றில் எந்தவிதமான
ஊட்டச்சத்தும் கிடைப்பது இல்லை. அதற்குப் பதிலாக கலோரிகள்தான் ஏராளமாக உள்ளன. கலோரிகள் மட்டுமே அதிகமாக காணப்படுகிற துரித வகை உணவுப்பண்டங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

எனவே, ஒரு நாளாக இருந்தாலும் சரி, பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதாக இருந்தாலும் சரி, சிறுவர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர் என யாராக இருந்தாலும் இதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். ஆனால், அதனை அன்றாட பழக்கமாக மாற்றும் போது பல உடல்நலக் கோளாறுகள் வரும்.

உச்சந்தலை முதல் அடிப்பாதம் வரை பாதிக்கப்படும். மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும். இதனால், Sleep Apnea ஏற்படும். அதாவது, நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்து, சோர்வு உண்டாகும். தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குறட்டை அதிகளவில் வெளிப்படும்.

இதயத்தில் கொழுப்பு படிவதால், ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், கல்லீரலில் கொழுப்பு ஏராளமாக சேர்ந்து, எரிச்சல் உண்டாகி சுருங்கும் வாய்ப்பு உண்டு. மேலும் மலச்சிக்கல், எலும்புகள் பலவீனம் ஆதல், எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை தவிர, பெருங்குடலில் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இன்று நமது வாழ்க்கை முறை உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கையாக உள்ளது. இதன் காரணமாகவும் அதிக கலோரிகளும், கொழுப்புகளும் கொண்ட ஃபாஸ்ட் ஃபுட்டைத் தவிர்க்க வேண்டும். எந்த உணவைச் சாப்பிட்டு வந்தாலும் உடற்பயிற்சிகள் செய்வதையும் பழக்கப்
படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.

உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் இதுபற்றிக் கேட்டோம்…‘‘இட்லி, தோசை, புட்டு ஆகிய பாரம்பரிய உணவுப் பண்டங்கள் ஒதுக்கப்பட்டு பீட்சா, ஃப்ரென்ச் ஃப்ரை, பர்கர் என பலவிதமான துரித உணவு வகைகள் நம்முடைய வாழ்வில் என்றோ நுழைந்து விட்டன. பீட்சாவில் காய்கறிகள் குறைவாக இருக்கும்.

பர்கர் என்று பார்க்கும்போது, இதை செய்வதற்குத் தினமும் சாப்பிடுகிற சிறிய பன் போதுமானது. ஆனால், அன்றாடம் நாம் சாப்பிடுகிற பன்னைவிட, பர்கர் செய்ய பயன்படுத்தப்படும் பன் 3 அல்லது 4 மடங்கு அளவில் பெரியதாக காணப்படும். இதிலும், மீன், மட்டன், பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் கொஞ்சமாகத்தான் சேர்க்கப்படுகின்றன. எண்ணெயில் பல தடவை நன்றாக பொரித்த உருளைக்கிழங்கு துண்டுகளைத்தான் ஃப்ரென்ச் ஃப்ரை என்ற பெயரில் ஃபாஸ்ட் ஃபுட்டாக சாப்பிடுகிறோம்.

பொதுவாக, இந்த வகை உணவுப்பண்டங்களில் மைதா, கொழுப்பு சத்து போன்றவைதான் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த உணவில் சேர்க்கப்படும் பாலாடைக்கட்டி (Cheese) கொழுப்பின் அளவு அதிகரிக்க வழி செய்கிறது. பீன்ஸ், கேரட், கோஸ் போன்ற காய்கறிகள் இவற்றுடன் குறைவாகவே சேர்த்து தரப்படுகின்றன. மில்க் ஷேக்கில் கொலஸ்ட்ரால் ஏராளமாக இருக்கும்.

சிறுவர், சிறுமியருக்கு இந்தப் பானத்தைத் தரும்போது சாக்லேட் சிரப் சேர்த்து கொடுக்கிறார்கள். எனவே, இதிலுள்ள கொலஸ்ட்ராலின் அளவு இரட்டிப்பாகிறது. இது மாதிரியான ஃபாஸ்ட் ஃபுட் வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட சிறு குழந்தைகளின் உடல் எடை, பெரியவர்களின் உடல் எடைக்கு சமமாக 60 கிலோ முதல் 80 கிலோ வரை அதிகரிக்கிறது. இவ்வாறு சிறுவயதிலேயே உடல் எடை கூடுவதற்கு சத்தற்ற உணவு வகைகள்தான் முக்கிய காரணமாக அமைகிறது.

ஏற்கெனவே ஓடிப்பிடித்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் இன்றைய குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கிறது. விளையாடும்போது, கை, கால்களில் அடிபடுதல், பூங்கா, விளையாட்டுத்திடல் ஆகிய இடங்களில் விளையாடும் போது, வழி தவறி செல்லுதல் ஆகிய பிரச்னைகளால் சிறுவர், சிறுமியருக்குப் பாதுகாப்பு இல்லை, என்பதை காரணமாக சொல்லி, வீட்டில் உள்ள பெரியோர்கள் அவர்களை வெளியே அனுப்புவதில்லை. எனவே, டி.வி., ஐ-பேட், மொபைல் போன் என எந்த நேரமும் குழந்தைகள் பொழுதைக் கழிக்கின்றனர். இதனுடன் ஃபாஸ்ட் ஃபுட் சேருவதால், அவர்களுடைய உடல் நலம் மேலும் பாழாகிறது.

உணவகங்களில், நூடுல்ஸ், பீட்சா, பர்கர் என சாப்பிடும்போது குளிர்பானங்களையும் குடிக்கின்றனர். இந்த குளிர்பானங்களில் அதிக சர்க்கரை, கார்பன் டை ஆக்ஸைடு, சில ரசாயன கலவைகள் போன்ற உடலுக்குக் கெடுதியான விஷயங்களே இருக்கின்றன. ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடாதவர்களுக்கு இந்த குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் பொதுவாக இருப்பதில்லை.

இதன் காரணமாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறையை இப்போது யாரும் பின்பற்றுவது இல்லை. அந்த உணவுப் பழக்கத்துக்கு மாறினால் உடல் ஆரோக்கியம் சீராகும்’’ என்று வலியுறுத்துகிறார் தாரிணி கிருஷ்ணன்.

துரித உணவுகளை ஏன் விரும்புகிறோம்?!

துரித உணவுகளை ஒருவர் விரும்பி உண்பதன் பின்னால் பல காரணிகள் இருக்கின்றன என நிபுணர்கள் சிலவற்றை பட்டியலிடுகிறார்கள்.பசி வேறு… ஏக்கம் வேறு…பசித்தல், ஏங்குதல் இரண்டு சொற்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. பசி என்பது முழுக்கமுழுக்க உடல் சார்ந்தது. இது, சில ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுவதோடு, ஆரோக்கியமான உணவுப்பண்டங்களைச் சாப்பிடுவதில் திருப்தி அடைகிறது. ஆனால், ஏங்குதல் என்ற உணர்வு அப்படிப்பட்டது இல்லை. ஒருவருக்கு இந்த மனநிலை எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம்.

வார்த்தைகளால் இதை விவரிக்க முடியாது. ஒரு நபர் மாறுபட்ட உணர்வுகளுக்கு ஆட்படும்போதுதான் இனிப்பு, உப்பு, கொழுப்பு நிறைந்த அமிலம், கஃபைன் அல்லது ஆல்கஹால் போன்றவற்றை நாடுவார். ஏனென்றால், அப்போதுதான் வயிறு நிரம்புவதோடு இவர்களுடைய மனம் சார்ந்த பசியும் முடிவுக்கு வருகிறது.

நல்ல, கெட்ட பாக்டீரியாக்களின் விகிதம் மாறுபடுதல் நம்முடைய குடல் பகுதி, நன்மை மற்றும் கெடுதலை ஏற்படுத்தக்கூடிய குடல்
பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு பாக்டீரியாக்கள் சரியான விகிதத்தில் இருப்பதன் அடிப்படையிலேயே நமது ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.

அளவுக்கதிகமாக மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துதல், பல மணி நேரம் மன அழுத்தத்துக்கு உள்ளாதல் போன்ற தவறான வாழ்க்கை முறைகளால் இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை விகிதம் மாறுபடும்போது, நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையைவிட, கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இவ்வகை பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதற்காக இனிப்பு, நச்சுத்தன்மை உள்ள பொருட்களை தேடும்போது, மனித உடல் அவற்றுக்காக ஏங்குகிறது.

உணர்வுப்பூர்வமான மன அழுத்தம் நம்மில் பெரும்பாலானோர் உணர்வுப்பூர்வமாக மன அழுத்தத்துக்கு ஆட்படும்போது நொறுக்குத் தீனிகளை உண்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். உணவு தயாரிப்பு நிறுவனங்கள் இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி உற்பத்தியைத் தொடர்கின்றன. நாம் மன அழுத்தத்துக்கு ஆட்படும்போது மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செரோட்டோனின்(Serotonin) மிகவும் குறைந்துவிடுகிறது. எனவே, வெகுவிரைவில் மகிழ்ச்சியான சூழலுக்கு மாறிட துரித உணவினை நாடுகிறோம்.

இந்த உணவு வகைகளில் குளுக்கோஸ், உப்பு மற்றும் கொழுப்பு சத்து ஏராளமாக உள்ளன. இவை உடலில் விரைவாக சேருவதோடு, நமது மனநிலையை மாற்றவும் முயல்கின்றன. ஆனால், நாம் எதிர்பாராதவிதமாக இந்த உணவுகள் நம்மை மகிழ்ச்சி அற்றவராகவும், எரிச்சல் அடைபவராகவும் மாற்றிவிடுகிறது.

மிதமிஞ்சிய இனிப்பு மற்றும் உப்புசர்க்கரை, உப்பு ஏராளமாக காணப்படும் உணவு வகைகளை பலர் அடிக்கடி சாப்பிடு வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். அத்தகையோர் இந்த சுவைகளுக்கு அடிமையானவராகக் கருதப்படுவார்கள். இனிப்பு மற்றும் உப்பு இருக்கிற உணவுவகைகளில் ஊட்டச்சத்து குறைவாகவே காணப்படும். இவை ‘வெற்று கலோரி’(Empty Calories) எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த உணவுவகைகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது, நம்முடைய ஆற்றலும், ஊட்டச்சத்தும் அழிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக, நமது உடலில் இருக்கின்ற லட்சக்கணக்கான செல்கள் சேதமடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதன் முடிவாக ஏக்க மனப்பான்மை வந்து சேர்கிறது. இது மாதிரியான ஏக்க உணர்வினைத் தவிர்க்க சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாவு, உப்பு போன்றவற்றை 7 முதல் 10 நாட்கள் தவிர்ப்பதன் மூலம் ‘ஏக்க மனப்பான்மை’ தானாகவே முடிவுக்கு வரும்.

நீர்ச்சத்து குறைபாடுஅன்றாட தேவைக்கான அளவில் தண்ணீர் அருந்தும் பழக்கம் நம்மிடம் இல்லை. இதனால், தாகம் மற்றும் பசியுணர்வு என்ற இரண்டு உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தடுமாறுகிறோம். நீங்கள் ஏங்கி தவிக்கும்போது, சற்றும் தாமதிக்காமல் 2, 3 டம்ளர் நீர் அருந்தினால் ஏக்க உணர்வு மறையும்.

அதன் பின்னர், உங்களுக்குப் போதுமான நீர்ச்சத்து கண்டிப்பாக கிடைக்கும். தூக்கமின்மைநச்சுப் பொருட்கள் சேர்ந்த உடலுக்குப் போதுமான தூக்கம் இல்லாமை, குறைவான ஆற்றல், எரிச்சல் உண்டாக்கும் மனநிலை, தெளிவில்லாத எண்ணங்கள் போன்றவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஏக்க மனப்பான்மையைத் தோற்றுவிக்கின்றன. எந்த நேரமும் ஒருவர் நொறுக்குத் தீனிகளை அதிகமாக விரும்புவராக இருக்கும்பட்சத்தில், தூங்குவதற்கான நேரத்தை உறுதி செய்து கொள்வது அவசியம்.Post a Comment

Protected by WP Anti Spam