பெண் இயக்குநர்களும் கதாசிரியர்களும் அதிகம் வர வேண்டும் : நடிகை காயத்ரி!!(மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 39 Second

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மூலம் தமி்ழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியோடு ‘புரியாத புதிர்’, ‘ரம்மி’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ போன்ற படங்களிலும் நடித்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் காயத்ரியிடம் அவரது திரை அனுபவம் குறித்து பேசினேன்.

சினிமா பிரவேசம் எப்படி?

நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா துறைக்கு வந்தேன். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. யதேச்சையாக நடந்தது அது.

விஜய் சேதுபதியோடு தொடர்ந்து நடித்து வருகிறீர்களே?

தொடர்ந்து இப்படி தெரிந்தவர்களோடு படம் நடிக்கும் போது அந்த படக்குழு ஒரு குடும்ப கட்டமைப்பாக மாறுவதாக நான் உணர்கிறேன். அது நல்ல அனுபவமாக இருந்தது.

என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்?

ஒரு சூப்பர் ஹீரோ, ராணி, இரட்டை வேடங்களில் நடித்ததில்லை. அது போன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்கு முன்பு நான் நடிக்காத கதாபாத்திரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

சினிமா துறையில் நீங்கள் சவாலாக நினைப்பது எது?

சவாலான எந்த விஷயத்தையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. சவாலான கதா பாத்திரங்கள் எனக்கு கிடைத்ததும் இல்லை. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கும் சினிமாக்கள் குறைவாக இருப்பது பற்றி?

ஒரு கதை எழுதும் போது அந்தக் கதையில் தன்னையே ஹீரோவாக எண்ணித்தான் கதை எழுதுவார்கள். பெரும்பாலும் ஆண்களே கதை எழுதுவதால் ஹீரோ சென்ட்ரிக் படங்களாக வருகின்றன. நிறைய பெண்கள் கதை எழுத முன்வரும் போது அவர்களுடைய அனுபவங்கள் பற்றிய கதையாக இருக்கும். அப்போது பெண்களை மையப்படுத்தும் சினிமாக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்று நினைக்கிறேன். பெண் எழுத்தாளர்கள், பெண் இயக்குநர்கள் அதிகம் வரவேண்டும்.

சமீப காலமாக நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அதைப் பற்றி?

அது உண்மைதான். இல்லை என்று மறுக்க முடியாது. பலர் பாலியல் பிரச்சனை குறித்து தற்போது தைரியமாக பேசி வருகிறார்கள். சினிமா துறை மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றமானது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளால் திறமையான நடிகைகள் இந்த துறைக்கு வர முடியாமல் போகிறது. இதை எப்படி நாம் சரி செய்ய வேண்டும் என்பதை யோசித்து சரி செய்ய வேண்டும்.

பிற மொழி சினிமாவில் நடிக்க விருப்பமுண்டா?

நிச்சயமாக. தென்னிந்திய மொழிகள் அனைத்தும் எனக்கும் தெரியும். சரியான வாய்ப்பும் கதைக்களமும் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு தெரியாத மொழி படங்களில் கூட நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மராத்தி,பெங்காலி மொழி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் தமிழ் சினிமாவிற்கும் பிற மொழி படங்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பண்பாடு இருக்கிறது.

அந்தந்த மாநிலங்களில் மக்கள் வெவ்வேறான விஷயங்களை ரசிக்கிறார்கள். அவர்கள் விரும்பும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். தெலுங்கு படங்களில் பாட்டு இல்லாத படமே இருக்காது, மலையாள படங்களில் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இது போன்ற பல வேறுபாடுகள் உள்ளன. இப்படி எல்லா மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

திரைத்துறையில் நடிகைகளுக்கான போட்டி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் தாக்குப்பிடிக்க என்ன செய்யப் போகிறீர்கள்?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. எனக்கு எதிர்காலதிட்டங்கள் என்று எதுவும் இல்லாத தால் காலம் போகும் போக்கில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். ஹீரோயின்கள் சிலர் வயதானாலோ அல்லது திருமணம் ஆனாலோ மார்க்கெட் இருக்காது என்கிற வாதம் இந்தக் காலத்தில் உடைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். உதாரணமாக ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித், கரினா கபூர் இன்னும் பல நடிகைகள் திருமணத்திற்குப்பின் நடிக்கிறார்கள். அதனால் திருமணம் ஆனால் நடிக்க வருவதில்லை என்ற கூற்று பொய்யாகிவிட்டது.

நீங்கள் இணைந்து நடிக்க விரும்பும் ஹீரோக்கள் யார் யார்?

எல்லா ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ரஜினி சார், கமல் சார், துல்ஹர் சல்மான், நிவின்பாலி போன்றவர்களோடு இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு.

உங்களுடைய எதிர்கால திட்டம்?

நான் முன்பு சொன்னது போலவே பெரும்பாலும் திட்டம் போட்டு நடப்பதெல்லாம் இல்லை. திட்டமிடுவது என்னைப் பொறுத்தவரை மிகக் குறைவு.

இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் முடித்திருக்கிறேன். வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்காலத்துக்கு இதம் தரும் ஆரோக்கிய உணவுகள்!!(மருத்துவம்)
Next post மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு!!(கட்டுரை)