By 23 July 2018 0 Comments

பெயரில் மட்டுமல்ல… நிஜத்திலும் அவர் ஏஞ்சல்தான்!! (மகளிர் பக்கம்)

பிரபல ஹாலிவுட் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி தன் அழகால் உலகம் முழுதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தின் இதயத்தை வென்றவர். தன் நடிப்புக்காக ஆஸ்கார் விருது, மூன்று கோல்டன் குளோப் விருதுகள், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளை பெற்றவர். பெயர், புகழ் என ஆடம்பர வாழ்க்கை அமைந்தபோதும் மருத்துவரீதியான சேவைகளையும், மனிதாபிமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து செய்துவருகிறார்.

இதற்காகவே கடந்த 2003-ம் ஆண்டு ஐ.நா.செய்தியாளர் கழகத்தால் புதிதாய் உருவாக்கப்பட்ட Best citizen of the world விருதை வழங்கி கௌரவித்தது. அதேபோல் யுஎன்ஏ-யுஎஸ்ஏ அமைப்பிடமிருந்து உலகளாவிய சிறந்த மனிதாபிமான விருதினையும் பெற்றிருக்கிறார்.
அப்படி என்னென்ன சேவைகள் செய்கிறார் ஏஞ்சலினா?

இன்று ஒரு நடிகையாக, மிகச்சிறந்த மனிதநேயமிக்கவராக உலக மக்களால் கொண்டாடப்படும் ஏஞ்சலினா ஜோலி, இளவயதில் அனைவராலும் நிராகரிக்கப்பட்டு மன நோயால் பாதிக்கப்பட்டார் என்றால் நம்ப முடியுமா?

இவரின் இளவயது வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ஜோலியின் ஒரு வயதிலேயே கணவரிடமிருந்து பிரிந்த இவரது தாய் தன் மகளையும், மகனையும்தான் வேலை செய்யும் அலுவலகத்தின் 5-வது தளத்தில் விட்டுவிட்டு கஷ்டப்பட்டுதான் வளர்த்திருக்கிறார். தன்னுடைய சொற்ப வருமானத்திலும் குழந்தைகளை பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார்.

சிறு வயதில் குழந்தை ஜோலி பிறர் பயன்படுத்திய ஆடைகளையே உடுத்திக் கொண்டு மிக ஏழ்மையான நிலையில் சக மாணவர்களால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். பள்ளிப்பருவத்தில் பற்களில் கம்பி கட்டிக் கொண்டும், கண்ணாடி அணிந்து கொண்டும் மிகவும் நோஞ்சானாக இருந்த ஜோலியை வசதி படைத்த சக மாணவர்கள் கேலியும், கிண்டலும் செய்து துன்புறுத்தியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாகி கூர்மையான ஆயுதங்களால் கீறிக்கொண்டும், வெட்டிக் கொண்டும் தன்னைத்தானே வருத்திக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, 14 வயதிலேயே ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டபோதும், மாடலிங் துறையில் நுழைந்தபோதும், இவருடைய ஒல்லியான தேகத்தால் நிராகரிக்கப்பட்டு, தன் சுய மரியாதை குறைந்த நிலையில் மன அழுத்தத்தால், போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையாகி, இரண்டு முறை தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இவையெல்லாம் கடந்து 19 வயதில் நடிக்கத் தொடங்கி, முதல் படமும் தோல்வியடையவே மீண்டும் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டார்.

‘மனதளவில் நொறுங்கியபோதெல்லாம் தனக்கு நம்பிக்கை கொடுத்தது தன் தாய் என்றும் தனக்கென்று எந்த விருப்பத்தையும் வளர்த்துக் கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையையே எனக்காக தியாகம் செய்தவர்’ தன் தாய் என்று பின்னாளில் ஏஞ்சலினா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

விரைவிலேயே Girl Interrupted என்னும் படத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் பெற்றுத்தந்தது.

அதன்பின், ஜோலியின் நடிப்புப் பயணம் தொடர்ந்து ஏறுமுகம்தான். ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக உயர்த்தியது. வெற்றிகள், ஏராளமான பணம், புகழ் தன்னைத் தேடி வந்தாலும், தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க நினைத்த ஜோலி, தான்சானியா, ஆப்கான், கம்போடியா என உலகெங்கிலும் உள்ள 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களுக்கு களப்பணியாற்றபயணிக்கத் தொடங்கினார்.

சர்வதேச அகதிகளின் அமைப்புக்காக ஐ.நா.சபை விடுத்த கோரிக்கையை ஏற்று 1 மில்லியன் டாலர் நன்கொடையாக வழங்கினார். அதன் பின்னர் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு ஏஞ்சலினாவை நல்லெண்ணத் தூதராக நியமித்தது.

சர்வதேச அகதி மற்றும் குடியேற்ற குழந்தைகளுக்கான தேசிய மையம் என்னும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இலவச சட்ட உதவியையும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான Global Action for Children and Doctors without borders அமைப்பு மற்றும் Education partnership for children of conflict அமைப்பிற்கும் ஜோலி இணைத்தலைவராக இருப்பதோடு, போரில் பாதிப்புறும் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்களுக்கு மில்லியன் டாலர்களில் நிதியுதவியும் செய்து வருகிறார்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, தான் பெற்ற 3 குழந்தைகளோடு, போரில் திக்கற்று விடப்பட்ட 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
மார்பகப் புற்றுநோய் அறிகுறியை உணர்ந்து, தன் மார்பகத்தை அகற்றும் சிகிச்சையையும் துணிச்சலாக இவர் மேற்கொண்டது உலக அளவில் ஏஞ்சலினா மீது மரியாதையையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

இளமைக்காலத்தில் வாழ்க்கையையே முடித்துக் கொள்ள நினைத்தவரின் மனதை மாற்றிய அவருடைய தாயின் அன்புதான், கருணைமிக்க மனுசியாக ஏஞ்சலினாவை உலகுக்கே கொடுத்துள்ளது. இன்று இவருடைய தன்னலமற்ற மனிதநேயப்பணிகள் உலக மக்களுக்கே ஒரு முன்னுதாரண புருஷியாய் உருவெடுக்க வைத்துள்ளது.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் மற்ற உயிரை காப்பாற்றப் பிறந்தது என்பதை நினைவில் கொண்டு, வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளுக்காக, வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணம் ஏற்படக்கூடாது என்ற அறிவுரையையும், ‘எந்தவொரு இருட்டான பாதையின் முடிவிலும் ஒரு வெளிச்சம் பிறக்கும்’ என்ற நம்பிக்கையையும், ஏஞ்சலினா ஜோலியின் வாழ்வு நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்!Post a Comment

Protected by WP Anti Spam