By 24 August 2018 0 Comments

தனியார்மயப்படுத்தல் எனும் ‘தேவதை’!!(கட்டுரை)

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, இலங்கையின் சேவைத்துறை, பின்தங்கிய நிலையில் தான் காணப்படுகிறது. பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவரும் எம்மவர்கள், அங்கிருந்து நாடுதிரும்பிய பின்னர், “சிங்கப்பூரில் எல்லாம் சொன்ன நேரத்தில் ரயில்கள் வரும். ஜப்பானில் 30 செக்கன்கள் தாமதித்ததால், ரயில்வே துறை மன்னிப்புக் கேட்கிறது. எங்கள் நாடும் இருக்கிறதே” என்று, விமர்சனங்களை முன்வைப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

இப்படியான விமர்சனங்களில் உண்மைகளில்லாமலில்லை. இலங்கையின் பொதுவான அரச துறைகள், போதிய செயற்றிறனோடு இயங்குவதில்லை என்பது உண்மையானது. ஆகவே, இவ்விமர்சனங்களைத் தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், இவ்விமர்சனங்களோடு சேர்ந்ததாக, இப்பிரச்சினைக்கான தீர்வொன்றும் முன்வைக்கப்படும். “எல்லாவற்றையும் தனியார்மயப்படுத்தினால் தான் சரிவரும்” என்பது தான், அவர்கள் முன்வைக்கின்ற தீர்வாக இருக்கும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்காக, தெற்கு அரசியல் தலைமைகள் முன்வைக்கின்ற அல்லது வடக்கிலிருக்கும் சில குழுக்கள் கோருவது போன்ற தீர்வுகளைப் போல், தனியார்மயப்படுத்தல் என்ற தீர்வும், எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கிறது என்பது தான், இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது.

ஏனென்றால், வெளிநாடுகளிலிருந்து திரும்பும் நம்மவர்கள் மாத்திரமன்றி, சாதாரண பொதுமக்களும், தனியார்மயப்படுத்தல் தொடர்பில் தமது விருப்பத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

அண்மையில், ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பின் போது, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால், தாமாகத் திரண்ட பொதுமக்கள், ரயில்வே திணைக்களத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதோடு, “ரயில்வே துறையைத் தனியார்மயப்படுத்துங்கள்” என்ற கோரிக்கையையும் பலமாக எழுப்பியிருந்தனர். இவற்றின் பின்னணியில், தனியார்மயப்படுத்தல் பற்றி ஆராய வேண்டிய தேவையிருக்கிறது.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, இலங்கை அரச துறையின் வினைத்திறன் தொடர்பான கேள்விகள் தொடர்ச்சியாக இருக்கின்றன. அரச அலுவலகமொன்றுக்குச் சென்று, ஒரு விடயத்தைச் செய்துமுடிப்பதற்குள், போதும் போதுமென்றாகிவிடுகிறது. இலஞ்சம் மாத்திரமே பிரச்சினை கிடையாது.

உண்மையில் சொல்லப் போனால், பணத்தைக் கொடுத்தாவது காரியத்தை முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் இருக்கிறார்கள். அந்நியன் திரைப்படத்தில் வரும் “அம்பி” போன்று, சிறிய தவறுக்கும் பெரிதாக முறைப்பாட்டை மேற்கொள்வோர், மிகக்குறைவான அளவிலேயே இருக்கின்றனர்.

ஆகவே, இலஞ்சம் கொடுப்பதல்ல பிரச்சினை. இலஞ்சம் கொடுத்தாலும், விடயங்களை மேற்கொள்வதற்குப் பெரிய இழுபறி இருக்கிறது என்பது தான், இங்குள்ள மக்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்சினை.

இதில் இன்னொரு விடயம் என்னவெனில், அவசரமான நிலைமைகளில், இலஞ்சம் கொடுத்தேனும் விடயங்களைச் செய்துமுடிக்கும் மனநிலையில் பெரும்பாலான மக்கள் இருப்பதால் மாத்திரம், இலஞ்சம் சரியென்றாகிவிடாது.

பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், மக்களின் வரிப் பணத்தை ஊதியமாகப் பெறும் அரச ஊழியர்கள், அவர்களது கடமையைப் புரிவதற்கு இலஞ்சம் கேட்பது, மிகக் கீழ்த்தரமான நிலைப்பாடு தான். அதன் குற்றம், தண்டனை என்பதைத் தாண்டி, இலஞ்சம் கேட்கும் மனநிலை, அழித்தொழிக்கப்பட வேண்டியது. அவ்வளவுக்குக் கீழ்த்தரமானது அது. ஆனால், “இலஞ்சம் கொடுத்தேனும் இக்காரியத்தை முடித்துவிடுவோம்” என்ற நிலைக்கு மக்களைக் கொண்டுவந்தது, இதற்கு முன்னைய காலங்களில் சேவையாற்றிய அரசதுறை ஊழியர்களின் ஒரு வகையான வெற்றி தான்.

இப்படியாக அரசதுறையின் பெரும்பாலான திணைக்களங்கள், நிறுவனங்கள் இருக்கும் போது, தனியார்துறையின் பக்கமாக மக்கள் செல்வது, ஆச்சரியத்துக்குரியது அல்ல. ஆனால், நன்றாகச் சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவா என்று அதைக் கேட்டால், இல்லையென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனென்றால், சில நாள்களுக்கு முன்னர் தான், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரித்திருந்தது. இவ்வாண்டில், அதிக வேலைநிறுத்த எச்சரிப்புகளை விடுத்த தொழிற்சங்கங்கள் என்று பார்த்தால், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும்.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டங்களின் போது, பொதுமக்கள் எவ்வளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். அண்மையில், சில வகை எரிபொருட்களின் விலைகள் மாத்திரம் சிறியளவில் அதிகரித்த நிலையில், அதற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அச்சங்கம் அறிவித்திருந்தது.

அதேபோல், கொழும்பில் அண்மையில், 100, 101ஆம் இலக்க பஸ்கள், போதிய முன்னறிவிப்பின்றிச் சேவையில் ஈடுபட மறுத்தன. காலி வீதியால் கொழும்புக்கு வரும் தூரசேவை பஸ்கள், கொழும்பு எல்லைக்குள்ளும் பயணிகளை ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தான், இச்சேவை மறுப்பு இடம்பெற்றிருந்தது. தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கீழ் காணப்படுகின்ற இச்சேவைகள், அதே சங்கத்தின் கீழ் செயற்படுகின்ற பிரிவினருக்கு எதிராகவே இப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதுவே அநியாயமாகத் தெரிந்தால், இப்போராட்டத்தின் பின்னர் நடந்ததை எவ்வாறு சொல்வது? கொழும்புப் பகுதிக்குள் பயணிகளை ஏற்றுவதற்குத் தமக்கு அனுமதி வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீண்டதூர சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது, ஒரே சங்கத்தின் கீழ் காணப்படும் பஸ்கள், தமக்கிடையிலான பிரச்சினைக்காக, பொதுமக்களைப் பாதிக்கச் செய்யும் வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இக்காலங்களில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டது மாத்திரமன்றி, அரசாங்கமும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தது. அரசாங்கம் மீதான விமர்சனங்கள் தாராளமாக இருக்கின்ற போதிலும், இப்படியான உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டியுள்ளமை, நியாயமற்றதல்லவா?

ஆனால், இப்போராட்டக் காலத்தின் போது, இலங்கையின் அரச பஸ் சேவையும் ரயில் சேவையும் தான், அதிக பயணிகளை ஏற்றி, தனியார் பஸ்களின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக, பொதுமக்கள் மிக மோசமாகப் பாதிப்படையாமல் பார்த்துக் கொண்டன.

அதேபோல், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்புகள் காரணமாக, வைத்திய சேவையைத் தனியார்மயப்படுத்த முடியுமா? அரச வைத்தியசாலைகள் மீது காணப்படும் ஏராளமான விமர்சனங்களைத் தாண்டி, இலங்கையின் உச்சபட்சமான வைத்திய சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய இடங்களாக, அரச வைத்தியசாலைகள் தானே காணப்படுகின்றன?

இலங்கையில் காணப்படும் ஓரிரு தனியார் வைத்தியசாலைகளைத் தவிர, மிகப்பெரிய நோயாக இருந்தால், அரச வைத்தியசாலைகளில் தான் சிகிச்சையளிக்கப்படுகிறது. அரச வைத்தியசாலைகளிலுள்ள தாதியர்களும் வைத்தியர்களும், நோயாளிகளுடன் இன்னமும் சிநேகபூர்வமாக உரையாட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், வாராந்தம் 80 மணித்தியாலங்களுக்கு மேல் பணியாற்றும் ஏராளமானோர் இருக்கின்றனரே?

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற போதனா வைத்தியசாலையில், கண்புரைச் சத்திரசிகிச்சை, அடுத்தாண்டு ஜனவரிக்குப் பின்னரே, புதிதாக வருவோருக்குச் செய்யப்படவிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். அதுவரையான காலப்பகுதிக்கான கண்புரைச் சத்திரசிகிச்சைகளுக்கான திகதிகள், நோயாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. அந்தளவுக்கு, அரச வைத்தியசாலைகளில் பொதுமக்கள் தங்கியிருக்கிறார்கள்.

இப்படியாக, ஒவ்வொரு துறையிலும், அரச துறைகள் மீதான விமர்சனங்களுக்கு மத்தியில், பொதுமக்களுக்கு உறுதியான சேவைகளை வழங்கும் துறையாக, அரசதுறை இருக்கிறது. அச்சேவைகளில் முன்னேற்றம் தேவைப்படுகிறது என்பதுவும், அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது என்பதுவும் உண்மையானவை.

இவற்றில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதற்காக, தனியார்மயப்படுத்தல் பக்கமாகச் செல்லுதல் என்பது, ஆபத்தானது. தமிழில், “தெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசு நல்லது” என்பார்கள். தனியார்மயப்படுத்தல் எனும் தேவதை பற்றி, ஏற்கெனவே நாம் சிறிதளவுக்கு அறிந்திருக்கிறோம். நாம் பிசாசாகக் கருதும் அரசதுறையை விட, கிஞ்சித்தும் அது சிறந்தது அல்லது என்பதையும் நாம் அறிவோம்.

எனவே, மில்லியன்கணக்கில் உழைக்கத் துடிக்கும் பெருமுதலைகளின் விருப்பத்துக்கேற்க, தனியார்மயப்படுத்தலை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை, நாம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக, அரசதுறைகளில காணப்படும் வினைத்திறன் இல்லாத நிலைமையை இல்லாமல் செய்வதற்காக, நாம் வாக்களித்துத் தெரிவுசெய்த எமது பிரதிநிதிகளுக்கு, உச்சபட்சமான அழுத்தத்தை வழங்க வேண்டும்.

ஏனென்றால், மக்களுக்கு அத்தியாவசியமான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவற்றில், தனியார்துறையின் தலையீடு அதிகரிக்க அதிகரிக்க, சாதாரண, அடித்தட்டு மக்கள் அச்சேவைகளைப் பெறுவதற்குக் கடினமாக உணர்ந்ததை, உணர்வதை நாம் பார்த்திருக்கிறோம், பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே, எமது கோரிக்கைகள் தொடர்பில் கவனத்துடன் இருப்பது அவசியமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமானது.Post a Comment

Protected by WP Anti Spam