By 9 September 2018 0 Comments

பள்ளிக்கூடமா? சாதிக்கூடமா?(மகளிர் பக்கம்)

தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்று புத்தகத்தின் முதல் பக்கத்திலே இருக்கும் வாசகத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முன் சில ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது அரசுப் பள்ளிகளில் நடந்த சில சம்பவங்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் இயங்கி வருகிறது அரசினர் மேனிலைப்பள்ளி. இதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பழங்குடிச் சமூகத்தை சேர்ந்த அருண் என்கிற மாணவனை தலைமை ஆசிரியர் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதோடு, டி.சி பெற்றுக்கொள்ளும்படி பெற்றோரை வற்புறுத்தியுள்ளார். பொது மக்களுக்கு சம்பவம் தெரிந்து ஒன்று கூடி கேள்வி எழுப்பிய பின்பு மீண்டும் மாணவன் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதே போன்று கடலூர் அருகே திட்டக்குடி அடுத்த எழுத்தூர் கிராமத்தில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களை சாதிவாரியாக பிரித்து அமர வைத்திருக்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமத்துவத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே சாதி வன்மத்தை மாணவர்கள் மீது திணிப்பது சமூக சீர்கேட்டைக் காட்டுகிறது.கீழ்க்கொடுங்காலூர் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் அருணின் தாய் எல்லம்மாள், “கிராமத்தில் இருந்து பிழைப்புத் தேடி ஊருக்கு வெளியே வந்து வேலை செய்து மகனை படிக்க வைத்து வருகிறோம். இங்கேயும் சாதியைச் சொல்லி பிரச்சனை செய்தால் நாங்கள் எங்கே போவது” என்று அழுதுகொண்டே பேசினார்.

“என்னுடைய மகன் தன்னோடு படிக்கும் மாணவர்களோடு பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு வந்த தலைமை ஆசிரியர் ‘விளையாடக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். அருண் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். வேறு எந்த தவறும் என் மகன் செய்யவில்லை. மீண்டும் அங்கு வந்தவர் அருணை கன்னத்தில் அடித்து காறி உமிழ்ந்து இருக்கிறார். சாதிப் பெயரைச் சொல்லி திட்டியிருக்கிறார்.

இது தெரிந்து பள்ளிக்குச் சென்றோம். என் பிள்ளையை நான் கூட கை நீட்டி அடித்தது இல்லை. என் மகனை பார்த்ததும் அழுகையே வந்துவிட்டது. அவன் என்ன தவறு செய்தாலும் எங்களை அழைத்துச் சொல்லி இருக்கலாம். என் மகன் நன்றாக படிப்பான். அவன் தொடர்ந்து படிக்க வேண்டும். இந்தப் பிரச்சனையால் அவனுடைய படிப்பு பாதிக்கப்படுமோ என்று பயமாக இருக்கிறது” என்று அழுதபடியே பேசினார்.இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உரிய நீதி கேட்டு போராட்டம் நடத்திய வந்தவாசி பகுதி சி.பி.ஐ (எம்) கட்சியைச் சேர்ந்த சிவராமன் கூறுகையில்…“இந்தச் சம்பவத்தை மூன்று விதமாக பார்க்கலாம். அந்த மாணவனுக்கு டிசி கொடுப்பதற்கான எந்த முகாந்திரமும் அங்கு இல்லை. கட்டாயக் கல்வி சட்டத்தில் டி.சி கொடுப்பதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது.மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டால் கண்டித்து சரிசெய்ய வேண்டுமே தவிர டி.சி கொடுத்து அனுப்புவதற்கு எந்த அதிகாரமும் தலைமை ஆசிரியர்களுக்குக் கிடையாது.

இரண்டாவது பல்வேறு போராட் டங்களைக் கடந்து பழங்குடி சமூகத்தில் இருந்து அந்த மாணவன் படிக்க வந்திருக்கிறான். அவனிடத்தில் சாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்தியது மட்டுமல்லாமல் காறி உமிழ்ந்திருக்கிறார் தலைமை ஆசிரியர்.பாண்டுரங்கன் என்கிற ஆசிரியர் ‘நீங்கள் எல்லாம் எலி பிடிக்கத்தான் லாயக்கு’ என்று சாதியின் பெயரால் இழிவுபடுத்தியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தி ஆய்வு செய்த பிறகுதான் இதை உறுதி செய்தோம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

அதே பள்ளியில் 2016 ஆம் ஆண்டு 10 ஆசிரியர்கள் சாதிரீதியாக குழுக்களாக இயங்குகிறார்கள் என்று கல்வித்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அந்த ஆசிரியர்களை வெவ்வேறு இடங்களுக்கு பணிமாற்றம் செய்திருக்கிறார்கள்.ஆனாலும்கூட, சாதிரீதியான ஒடுக்குமுறை மனோபாவம் ஆசிரியர்கள் மத்தியில் வலுவாக இருக்கிறது. ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் சாதிய மனோபாவத்தை ஒழிப்பதற்கு அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது?ஆசிரியர் சங்கங்களுக்கு இதில் என்ன பொறுப்பு இருக்கிறது? இது போன்ற பிரச்சனைகளில் அரசுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கடந்த மாதம் 30ந் தேதி அன்று பழங்குடி மக்களை ஒன்று திரட்டி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

கல்வித்துறை அதிகாரிகள் எங்களுக்கு நேரம் கொடுங்கள். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். மாவட்ட எஸ்பியை சந்தித்து புகார் அளித்துள்ளோம். சாதி குறித்த புரிதலை ஆசிரியர்களுக்கு கற்றுத்தர வேண்டிய சூழலில் இன்று பள்ளிகள் இருக்கின்றனவா என்கிற கேள்வி எழுகிறது. அந்த மாணவன் அதே பள்ளியில் படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கோரிக்கையை ஏற்று தற்போது மீண்டும் அந்த மாணவன் அதே பள்ளியில் பயின்று வருகிறார். தொடர்ந்து ஆதிக்க சாதியினரிடம் இருந்து மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சனையை இப்படி விட்டு விடுங்கள் என்றெல்லாம் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. எதுவாயினும் பள்ளியில் இது போன்ற சாதி ஆதிக்கம் இனி நடக்காமல் இருக்க தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

குடியாத்தம் அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் ப.சிவக்குமார் கூறுகையில், “கல்வி நிலையங்களிலும் ஒரு கல்வியாளர் என்ற முறையில் நான் சாதி மோதல்களை சந்தித்து இருக்கிறேன்.ஒவ்வொரு கிராமப்புற பள்ளியிலும் கல்லூரிகளிலும் எதிரொலிக்கின்ற பிரச்சனைகளை அனுபவபூர்வமாக அறிந்திருக்கின்றேன்.நான் பணியாற்றிய குடியாத்தம் அரசுக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் தலித் மாணவர்களுக்கும் சாதிரீதியான பிரச்சனைகள் வரும். அந்தப் பிரச்சனையை முறையாக அணுகி மாணவர்களோடு நடத்திய உரையாடல் மூலம் மோதல்கள் தடுக்கப்பட்டன.இது போன்ற சாதிப் பிரச்சனைகளில் அந்தந்த பள்ளி- கல்லூரிகளைச் சுற்றியுள்ள ஊர் மக்களிடையே உள்ள சாதியப் பாகுபாடுகள் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற அரசியல் கட்சிகள் பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் அவற்றைக் கொண்டு வருகிறார்கள். அப்படி வரும்போது அதை தடுக்க வேண்டிய கடமை பள்ளி – கல்லூரி நிர்வாகத்திற்கு கூடுதலாக உண்டு.

ஆனால் இந்த இரு பிரச்சனைகளிலும் அந்த நி்ர்வாகத்தினரே சாதியப் பாகுபாட்டில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் கொடுமை. சாதிய பாகுபாட்டோடு வளரும் ஒரு மாணவச் சமூகம் உருவாகிறதோ என்கிற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. இது குறித்து விவாதங்கள் ஆசிரியர் சங்கங்களில் நடப்பது இல்லை. திருவண்ணாமலை, கரூர் பிரச்சனையில் இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகள் அதிகம் இருக்கின்றன. உயர்நிலை பள்ளி ஆசிரியர் சங்கங்கள் அதிகம் இருக்கின்றன. அங்கெல்லாம் இந்தப் பிரச்சனை விவாதங்களாக முன்வைக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அவ்வாறு விவாதங்களை ஏற்படுத்தும் போதுதான் இது போன்ற பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும்.

சாதிய ஒடுக்குமுறை தொடர்பாக குறிப்பாக தலித் மக்கள் மீது நடக்கும் ஒடுக்குமுறை சம்பந்தமாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துபோகச் செய்யுமாறு தீர்ப்பு வந்ததை நாம் அறிவோம். இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராடியதன் விளைவாக சட்டத்திருத்தம் கொண்டு வருவதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. இதை வலியுறுத்த வேண்டிய தேவையும் நமக்கு இருக்கிறது.பல ஆண்டுகளுக்கு முன்னால் சேலம் அருகில் ஒரு பள்ளியில் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்த தனம் என்கிற தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணை ஓர் ஆசிரியர் பிரம்பால் அடித்து அந்த பெண் கண்பார்வையை இழந்த சம்பவம் எனக்கு நினைவிற்கு வருகிறது. குறிப்பாக ஆசிரியர் சங்கங்களுக்கும் கல்வியாளர்கள் என்று சொல்லுகின்ற ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. வெறும் 7வது ஊதிய குழுவிற்காக போராடுவதோ முரண்பாடுகள் களைவதற்காக மட்டும் போராடுவதோ மட்டும் கடமைகள் அல்ல.

ஆசிரியர் சங்கங்களுக்குள் விவாதிக்கின்ற விஷயமாக சாதிய பாகுபாடு மாறாதவரை ஆசிரியர்கள் சமூகப்பொறுப்புள்ளவர்களாகவோ, சாதிய பாகுபாடு தவிர்த்தவர்களாகவோ உருவாக முடியாது” என்கிறார் பேராசிரியர் ப.சிவக்குமார்.கரூர் மாவட்டம் க.பரமத்தி அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த அருள் பிரகாசம் என்கிற ஜான் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை தந்தது. மாணவனின் தற்கொலைக்கு சாதிதான் காரணம் என்று அருள் பிரகாசத்தின் தந்தை சுரேஷ் ஆணித்தரமாக கூறுகிறார்.

“சம்பவம் நடந்த அன்று காலையில் மெயின்ரோட்டில் இருந்து வீடுவரை நான் ஓட்டும் காரை அவனே ஓட்டி வந்தான். தனியாக கார் ஓட்டுகிறேன் என்று ஒரே சந்தோஷம் அவனுக்கு. எனக்கு பாக்கெட் மணி 10 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டு அவ்வளவு மகிழ்ச்சியாக சென்றான்.பள்ளியில் இரண்டு வகுப்புகள் முடிந்து இடைவேளையின்போது மாணவர்கள் கபடி விளையாடிக்கொண்டிருந்தனர்.விளையாடும்போது ஒரு மாணவனுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கபடி விளையாடிய மாணவர்களை தலைமை ஆசிரியர் அழைத்து கண்டித்து இருக்கிறார். இவனை மட்டும் தாக்கி இருக்கிறார். அப்போது ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. என்னை அடிக்காதீங்க’ என்று கூறியிருக்கிறான். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் ‘இதற்கு மேல் என்னை அடித்தால் நான் இறந்து விடுவேன்’ என்றும் சொல்லியிருக்கிறான். அதற்கு ஓர் ஆசிரியர் “அப்படியா? நானே கயிறு வாங்கித் தருகிறேன். தற்கொலை செய்துகொள்” என்றிருக்கிறார். வகுப்பறைக்கு வந்து அழுதுகொண்டே இருந்திருக்கிறான். ஆசிரியர்கள் சிலர் ஆறுதல் கூறியிருக்கிறார்கள். மதிய உணவு இடைவேளையின் போது தற்கொலை செய்து கொள்வதற்காக பள்ளியின் இரண்டாவது மாடிக்கு ஓடியிருக்கிறான். அவனை மாணவர்கள் தடுத்து அழைத்துவந்துள்னர்.

பள்ளி முடிந்ததும் யாரிடமும் பேசாமல் என்ன நினைத்துக்கொண்டு வந்தானோ? வீட்டிற்குத் திரும்புகையில் நடுரோட்டிலே நடந்து வந்திருக்கிறான்.வீட்டு வாசலில் என்னுடைய அப்பா அவர் நண்பர்களோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். உள்ளே சென்றவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு கயிற்றை எடுத்து பரணையில் மாட்டி சுருக்கிட்டு கொண்டான். கடிதத்தில் ‘தலைமை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் செந்தில் சார்தான் என் சாவிற்கு காரணம்’ என்று தெளிவாக எழுதியிருக்கிறான்.நன்றாக படிக்கக்கூடிய பையன் ஜான். மாவட்ட, மாநில அளவில் சதுரங்க போட்டியில் கலந்து வெற்றி பெற்றிருக்கிறான். ஒவ்வொரு முறையும் சதுரங்க போட்டிக்கு செல்லும் போதும் “அப்பா நீங்க காசு இல்லைன்னு கவலைப்படாதீங்க. நான் பதக்கத்தோடு வருவேன்’னு சொல்லுவான். சொன்ன மாதிரியே வென்று வருவான். அவனுக்கு தன்னம்பிக்கை அதிகம்.

ஜானை அரசுப் பள்ளியில் இந்த ஆண்டுதான் சேர்த்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு தாமோதரன் என்கிற ஆசிரியர் தன்னை கடுமையான கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுகிறார் என்று அந்த வார்த்தையைச் சொல்லி ‘அப்படின்னா என்னப்பா?’ என்று அர்த்தத்தைக் கேட்டான். மறுநாள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரைப் பற்றி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தேன்.அவர் ‘இந்தப் பிரச்சனையை பெரிசாக்க வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறி அனுப்பிவிட்டார்.அதன் பிறகுதான் பிரச்சனை தொடங்கியிருக்கிறது. ‘வேற பசங்க தவறு செய்தாலும் என்னையே இவர் அடிக்கிறார்’ என்று அடிக்கடி சொல்லிவந்தான். நான் இந்தவாரம் பள்ளிக்கு வந்து கேட்கிறேன் என்று சொன்னேன். அதற்குள் இப்படி ஒரு முடிவை அவன் எடுப்பான் என்று நினைக்கவில்லை.

இந்தப் பிரச்சனை வந்த பிறகுதான் பல விஷயங்கள் வெளியில் வந்தன. உயர் சாதி மாணவர்களை ஒரு விதமாகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை ஒரு விதமாகவும் சில ஆசிரியர்கள் நடத்தியுள்ளனர். வகுப்பறையில் இருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை கண்டு கொள்வதே இல்லை. உயர்சாதி மாணவர்கள் ஏதாவது கேட்டால் அன்போடு அழைத்து பேசுகிறவர்களாக சில ஆசிரியர்கள் இருந்துள்ளனர்.தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் பிள்ளைகளை ‘வாலே’, ‘போலே’ என்று பேசுவதும். தன் சாதிப் பிள்ளைகளை அக்கறையாக அழைத்தும் பேசி வந்துள்ளனர். கல்வித்துறையிலும், காவல் துறையிலும் புகார் கொடுத்திருக்கிறோம். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான் மாநகராட்சியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். எனக்கும் இங்கு அதே நிலைமைதான் நீடித்து வருகிறது என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பணி ஒதுக்கீட்டில் பாகுபாடு இருக்கிறது. இதை எதிர்த்து போராடினால் நிர்வாகத்திற்கு இவன் எதிரானவன் என்று முத்திரை குத்தப்படுகிறது. இந்தக் கொடுமை தாங்க முடியாமல் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்றிருந்தேன். என்ன செய்வது பெண் பிள்ளை ஒன்று இருக்கிறது. அதற்காக வாழவேண்டுமே என்று சகித்துக்கொண்டு இருந்தேன். தன் மானத்திற்கு இழுக்கு வந்தவுடன் தூக்குக் கயிற்றை தேர்ந்தெடுத்துக்கொண்டான்.இன்று என் பிள்ளையை இழந்து நிற்கிறேன். என் வம்சத்தின் அடுத்த தலைமுறையை சாதி அழித்துவிட்டது. என்னைப் போல இன்னொரு தகப்பன் தன் பிள்ளையை இழக்க கூடாது ” என்று கண்ணீர்மல்க பேசினார்.இந்த சம்பவம் குறித்து பேசிய ஆதிதமிழர் பேரவை தலைவர் இரா. அதியமான்…

“இது தற்செயலாக நடக்கக்கூடியது கிடையாது. பல்லாண்டு காலமாக திட்டமிட்டு நடத்தப்படக் கூடிய படுகொலையாக நான் பார்க்கிறேன். ஒரு காலகட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலித்துகள் அல்லாத மற்ற சாதியினரை ஒன்றிணைத்து கூட்டம் நடத்தி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச்செய்ய தீர்மானம் போட்டனர். உயர் பதவியில் இருக்கும் அதன் சாதியினர் அதை நடைமுறைபடுத்தும் வேலையில் இறங்கினர். அதே போல ஆசிரியர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். ஆகையால் இது தற்செயலான சம்பவம் இல்லை. மலேரியா, டெங்கு போன்ற வியாதிகள் ஒழிக்க வேண்டும் என்றால் இந்த நோய் தாக்குதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துகிறது.

குழந்தை தொழிலாளர்கள் கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். அது போல வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த பிரச்சாரத்தை அரசு நடத்த வேண்டும். ஆனால் அப்படி எந்த பிரச்சாரத்தையும் இந்த அரசு இதுவரை நடத்தவே இல்லை. மாறாக சாதிய வாதிகளுக்கு துணை போகும் அரசாகசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது சலுகையாகவே பார்க்கப்படுகிறது. ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் படித்து வந்துவிட்டால் அவன் இடஒதுக்கீட்டில் வந்துவிட்டான் என மட்டம் தட்டி பேசுவது என்று அவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.அதன் எதிரொலிதான் பள்ளிகளில் நடந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர் சங்கங்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. நாங்கள் படித்த கால கட்டங்களில் ஆசிரியர் சங்கங்களில் சாதி குறித்த விவாதம் வலுவாக நடைபெற்றது. இன்று அதை பற்றி யாரும் பேசுவதாகவே தெரியவில்லை. இனியும் ஓர் உயிரை நாம் இழக்கக்கூடாது” என்றார். lPost a Comment

Protected by WP Anti Spam