மலேசிய அரசியலில் முத்திரைப் பதித்த முதல் பெண்!!(மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 51 Second

மலேசிய வரலாற்றிலேயே முதல் பெண் துணைப் பிரதமர் என்ற அந்தஸ்தைப் பெறுகிறார், மருத்துவரான வான் அசிசா வான் இஸ்மாயில். 66 வயதாகும் அவருக்கு துணைப் பிரதமர் ஆகக்கூடிய இந்த மாபெரும் அங்கீகாரம் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. பெரும் சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்ததின் பலன்தான், மக்களால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த வெற்றியும் துணைப் பிரதமர் பதவியும்.

1990-களில் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் துணைப் பிரதமராக இருந்தபோது அவரின் துணைவியான வான் அசிசா, ஒரு சராசரி மனைவியாகக் குடும்பத்தை பராமரித்துக்கொண்டு, மருத்துவராக தன் பணியைச் செய்து கொண்டிருந்தார். தன்னை ஒரு பிரதமரின் மனைவியென அவர் காட்டிக் கொள்ளவில்லை. இருக்கும் இடம் எங்கு என மக்கள் தேடும் அளவுக்குத்தான் அவரின் இருப்பு இருந்தது.வான் அசிசா அயர்லாந்தில் மருத்துவக்கல்வி பயின்று, மலேசியாவில் சுமார் 14 ஆண்டுகள் மருத்துவராகப் பணியாற்றினார். தனது கணவர் 1993 ஆம் ஆண்டு நாட்டின் துணைப்பிரதமர் ஆனதும் அவர் தனது மருத்துவப் பணியை ராஜினாமா செய்தார்.

1998ல் அன்வர் இப்ராஹிம் கைது நடவடிக்கைக்குப் பிறகு மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி மக்கள் நீதிக் கட்சியைத் தோற்றுவித்து, அதற்குத் தலைவர் பொறுப்பை ஏற்றுத் தேசிய முன்னணிக் கட்சிக்கே சவாலாக மாறினார் வான் அசிசா. தன் கணவரின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை எதிர்த்து மேல் முறையீட்டு வழக்குகளையும் தொடுத்தார்.

மலேசிய வரலாற்றில், 14-வது பொதுத் தேர்தல் வரை எப்படி எந்தப் பெண்ணும் பிரதமர் அந்தஸ்துக்கு உயர்ந்ததில்லையோ அதுபோல 1999 ஆம் ஆண்டுவரை எந்தப் பெண்ணும் ஒரு கட்சிக்குத் தலைவராக இருந்ததில்லை. அந்த வகையில், ஒரு பெண்ணாக அதுவும் ஓர் இஸ்லாமியப் பெண்ணாக தனக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை உடைத்துக்கொண்டு, ஏளனமாகப் பேசியவர்களை புறம் தள்ளி ஆளுங்கட்சி அரசாங்கமே மிரளும் அளவுக்குத் தனது கட்சியை மிக மிகச் சக்தி வாய்ந்த கட்சியாக உருமாற்றினார்.

அதுவரை ஆளும் அரசாங்கத்தைத் தனித்து எதிர்த்துவந்த (துணைக் கட்சிகளை) உறுப்புக் கட்சிகளை தனது கட்சியோடு கூட்டுச் சேர்த்தார் வான் அசிசா. அது நல்ல பலனை கொடுத்ததுடன், எதிர்க்கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு கொண்டிருக்கும் அபாயத்தை, தேசிய முன்னணி கட்சிக்கும் அதன் ஆதரவுக் கட்சிகளுக்கும் காட்டியது. 55 ஆண்டுகளாகத் தேசிய முன்னணி தக்க வைத்திருந்த அரசாங்க விழுது ஆட்டம் கண்டது என்று தாராளமாகச் சொல்லலாம். ஆட்சியை இழந்து விடுவோமா என்ற ஐயம் தேசிய முன்னணியைப் பற்றிக்கொண்டதை 13-வது பொதுத் தேர்தலின்போது அவர்களின் பிரச்சாரத்திலிருந்தே அதை கவனிக்க முடிந்தது. என்றாலும் 2013 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என மக்கள் அதிகம் நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் நீதிக் கட்சி பெரும்பான்மை இடத்தைப் பிடிக்கத் தவறியது.

இருந்தபோதும் வான் அசிசா போட்டியிட்ட தொகுதியில் அவர் ெவற்றி பெற்றார் என்பதும் தொடர்ந்து அந்தத் தொகுதியில் தேர்தலில் நிற்கும் யாராலும் அவரைத் தவிர பெரும்பான்மை வாக்கு வாங்கக்கூட முடியவில்லை என்பதும் வரலாறாகும்.2014  ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளிவந்த தமது கணவர் அன்வரை நாடாளுமன்ற பதவிக்கு அனுப்பும் நோக்கத்தில், தான் வெற்றிபெற்ற தொகுதியான பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் வான் அசிசா. பின்னர் அவர் காஜாங் சட்டமன்றத்தில் போட்டியிட்டார். அதில் வெற்றிபெற்றால் மாநில முதல்வர் ஆகும் வாய்ப்பும் இருந்தது. எதிர்பார்த்தபடியே அந்த தொகுதியில் வெற்றியும் பெற்றார்.

ஆனாலும் அவர் பெண் என்ற காரணத்தினாலும் மதம் சார்ந்த விவகாரத்தினாலும் மாநில முதல்வர் (மந்திரி பெசார்) பதவியை கொடுக்க முடியாது என சிலாங்கூர் மாநில சுல்தானும், உறுப்புக் கட்சி மற்றும் ஆளுங்கட்சி தலைவர்களும் மறுத்தனர்.அம்னோவின் வழக்கறிஞரான டத்தோ முகமட் ஜஃபாரிஸாம் ஹாருன், நாட்டின் பிரபல நாளேடான News Straits Times-சில் மாதவிடாய் வரும் பெண்ணான அவரால் மாநில முதல்வர் ஆக முடியாது என நாகரிகமற்ற கருத்தை கூறினார். பாஸ் கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ ஹாடி அவாங், வான் அசிசாவிற்கு மாநில முதல்வர் பதவி வகிப்பதற்கான ஆற்றல் இல்லை என்று பத்திரிகை சந்திப்பில் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் இஸ்லாமிய கொள்கைக்கு கீழ், பெண் ஒருவர் மாநில முதல்வர் ஆவதற்கான சாத்தியமில்லை என்றும், எனவே வான் அசிசா மாநில முதல்வர் ஆகமுடியாது என சிலாங்கூர் சுல்தான் தெரிவித்தார். இப்படியாக வான் அசிசாவை மந்திரி பெசாராக பரிந்துரைக்கும் முயற்சி தோற்கடிக்கப்பட்டது. ஒரு வேளை, அவர் மாநில முதல்வராக ஆகியிருந்தால் நாட்டின் முதல் பெண் முதல்வர் என்ற சரித்திரப் பதிவும் வான் அசிசாவிற்கே கிடைத்திருக்கும்.

தற்போது பிரதமராகியிருக்கும் மகாதீர் ஒருவேளை மக்கள் நீதிக் கட்சியில் இணையாமல், அந்தக் கட்சிவெற்றி பெற்றிருந்தால் இன்று துணைப் பிரதமராக அல்லாமல் பிரதமராகவே வான் அசிசா வலம் வந்திருப்பார். அப்படி அவர் பிரதமராகியிருந்தாலும் நாட்டின் முதல் பெண் பிரதமர் என வரலாறு அவர் பெயரை பதிவு செய்திருக்கும். “1999ல் வான் அசிசாவின் கணவர் அன்வர் இப்ராகிம் சிறையிலிடப்பட்ட போது, அரசுக்கெதிரான எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்துதல், சமூக நீதிக்கான இயக்கத்தை (ADIL) ஒழுங்கமைத்தல், மக்கள் நீதிக் கட்சியை துவக்குதல், அக்கட்சியின் தலைவராக உறுப்பினர் களால் தேர்ந்தெடுக்கப்படுதல், சிறையில் இருக்கும் கணவருக்கு நம்பிக்கையூட்டும் உதவியளித்தல் என அனைத்தும் அவர் தன் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதோடு சேர்ந்தே நடந்தது.அவரின் அரசியல் முக்கியத்துவத்தைப் பார்க்கும் அனைவருமே இயல்பாக தவறவிடுவது, வான் அசிசா ஒரு தாய் (ஆறு குழந்தைகளின்) மற்றும் பாட்டி (ஒன்பது பேரக்குழந்தைகளின்) என்பதைத்தான்.

அவரின் மூத்த மகள் நூருல் இஸ்ஸா அன்வர் தனது தாயைப்பற்றி குறிப்பிடுகையில்.. .“என்னதான் ஓய்வற்ற அரசியல் வாழ்க்கையில் இருந்த போதும், குடும்பத்தை ஒருபோதும் புறக்கணித்தது கிடையாது. அவரின் பெற்றோர் இன்னும் உயிரோடிருக்கிறார்கள். அவர்கள் மீது அதீத அன்புடைய மகள் தான் அவர். அவரின் பெற்றோர்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் அவர் அங்கிருப்பார். எங்கள் தேவைக்கும் அவர் அதே போலத்தான் இருக்கிறார் ” என்றார்.மலேசியப் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியவராகவும் திகழ்கிறார் வான் அசிசா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சற்றுமுன் அபிராமி சிறையில் செய்வதை பாருங்க!!(வீடியோ)
Next post மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..?(மருத்துவம்)